விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 15, 2009

ஆஸ்திரேலியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். தமிழ் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆகவும், 2001 இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.


தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் என்பது, 1948 ஆம் ஆண்டுக்கும், 1990 ஆம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுக்காலக் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடுத்து 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதன் முதலாக அனைத்து மக்கள் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றது.