விக்கிப்பீடியா:விக்கிச் சுமை

ஒரு பயனர் மட்டுமே தொடர்ந்து குறிப்பிட்ட பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது விக்கிச் சுமை எனப்படும். இப்பணிகள் கால எல்லைப்படி நடப்பது சுணங்கினாலோ உதவி கேட்டும் பிற பயனர்கள் கை கொடுக்க முன்வரவில்லை என்றாலோ இதன் காரணமாக பயனரின் மற்ற விக்கிப்பணிகள், தனிப்பட்ட பணிகள் பாதிப்படைந்தாலோ ஒருவர் விக்கிச்சுமைக்கு உள்ளாகியிருப்பதை அறியலாம்.

விக்கிச்சுமையைக் குறைக்க பின் வரும் வழிமுறைகளை முயலலாம்:

  • உங்களால் இயன்ற அளவு பணிகளுக்கு மட்டும் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு பணியைத் தொடர்ந்து நீங்களே திறம்பட செய்ய முடியும் என்று எண்ணாதீர்கள். நீங்கள் திறம்பட செய்கிறீர்கள் என்ற காரணத்துக்காக கூட மற்ற பயனர்கள் இப்பணிகளைக் கவனிக்காமல் இருக்கலாம். ஒரு சிறு விக்கி விடுப்பு எடுத்து மற்றவர்களிடம் பணியை ஒப்படைத்துப் பாருங்கள். அவர்கள் சிறப்பாகச் செய்தால் முற்று முழுதாக பணியின் பொறுப்பை மாற்றிக் கொடுத்து விடுங்கள்.
  • விக்கிச்சுமை கூடும் போது உதவி தேவை என்று கேட்கத் தயங்காதீர்கள். பொத்தாம் பொதுவாக உதவி கேட்கும் போது, உதவிகள் வருவது குறைவாகவே இருக்கும். இது அடிப்படை உளவியல். யாரேனும் உதவுவார்கள் என்று ஒவ்வொருவரும் விலகி இருக்கும் நிலையே வரும். எனவே, குறிப்பிட்ட பணியைத் திறம்படச் செய்யக்கூடியவர் என்று நீங்கள் கருதுபவர்கள், உங்களுக்கு உதவக் கூடிய விக்கி நண்பர்களின் பேச்சுப் பக்கங்களில் கேட்டுப் பாருங்கள். இங்கும் ஒரே நேரத்தில் பலரிடம் கேட்காதீர்கள். முதலில் இருவர், அவர்கள் மறுத்தால் அடுத்த இருவர் என்று தொடருங்கள்.
  • இவ்வளவு முயன்றும் உதவி கிடைக்கவில்லையெனில், தொடர்ந்து இப்பணியில் பங்களிக்க இயலவில்லை என்று முறைப்படி தெரிவித்து அப்பணியை விட்டு விடுங்கள். கவலைப்படாதீர்கள், விக்கி வெடித்துச் சிதறி விடாது. பல வேளைகளில் இவ்வாறு ஒரு பணியைக் கவனிக்க ஆள் இல்லாமல் இருக்கும் நிலையிலேயே அடுத்தவர் பொறுப்பெடுத்துச் செய்ய முனைவதைக் காணலாம்.
  • சுமையாகவே இல்லாத போதும், அவ்வப்போது உங்கள் பணிகளைக் கைமாற்றிக் கொடுக்க முனையுங்கள். இதன் மூலம் ஒரு பணிக்கு ஒருவரை மட்டும் விக்கி சார்ந்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். மற்ற பங்களிப்பாளர்களுக்கான வாய்ப்பும் அடுத்த தலைமுறை பங்களிப்பாளர்களுக்கான பயிற்சியும் கிட்டும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு