விக்கிப்பீடியா:விக்கி உளைச்சல்
விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான மன உளைச்சல் விக்கி உளைச்சல் எனப்படும். விக்கிப்பணிச்சுமை மிகுதியாகும்போது அதனால் பல விளைவுகள் உண்டாகலாம். அன்றாட வாழ்வில் தக்கவாறு நேரம் செலவழிக்கவியலாமல் அதனால் சிக்கல்கள் நேரலாம். அதனால் பொதுவாக அழுத்தமும் எரிச்சலும் கூட ஏற்படக்கூடும். மிகுதியான பணிகளை தாமாக முன்வந்து செய்பவர்களுக்கு ஒரு அதிகப்படியான பிடிப்பு, பற்று, சொந்தம் கொண்டாடல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அது விக்கிபோன்ற கூட்டாக்கத்திட்டங்களில் பல நேரங்களில் முரணாகவும் அமைந்துவிடலாம். அதேபோல விக்கியிலும் அன்றாட வாழ்விலும் தாமாக முன்வந்து பணியாற்றுவோருக்கு உள்ளத்தில் தம்மையறியாததோர் கூடுதல் எதிர்பார்ப்பும், நிறைவடையாதவோர் உரிமைகொண்டாடலும் ஏற்படக்கூடும். இவ்வாறான சூழலில் பங்களிப்பாளர்களிடையே ஏற்படக்கூடிய வழமையான கருத்து வேறுபாடுகள், நன்னயக்குறைபாடுகள், பிணக்குகள் போன்றவை ஒருவரை மிகுதியான உளைச்சலுக்குண்டாக்கலாம். அதைப் பின்வரும் வழிகளில் எதிர்கொள்ளலாம்.
- விக்கித்திட்டங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை உண்டு என்பதை உணருங்கள். விக்கி உளைச்சல் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாக உணர்ந்தால், உங்கள் விக்கிச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள முனையுங்கள். நீங்கள் செய்யக்கூடிய பணியை இன்னும் பலர் கூட செய்ய இயலும். ஆனால், அதற்கான வெற்றிடத்தை நீங்கள் அளிக்காத வரை, மற்றவர்கள் அப்பொறுப்பை எடுத்துச் செய்வதற்கான உந்துதல் குறைவாகவே இருக்கும்.
- பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள். பிணக்குகளின் போது சூட்டைக் குறைக்கவும் எதிர் நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களும் முழு நிலைமையைப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க இந்த அமைதி உதவும். விக்கிப்பீடியாவில் அனைவரும் தன்னார்வலர்களே என்பதால், உங்கள் பக்கம் சரியான செயற்பாடு இருந்தாலும் கூட மற்றவர்கள் அதனைக் கவனித்துச் செயற்பட காலம் தேவைப்படும்.
- விக்கி விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருந்தால் கட்டாய விக்கி விடுப்பு எடுங்கள். கவலைப்படாதீர்கள், விக்கிப்பீடியா வெடித்துச் சிதறாது. நீங்கள் திரும்பி வரும் வரை பத்திரமாக இருக்கும்.
- விக்கிப்பீடியாவில் உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய விக்கி நண்பர்களுடன் அவர்கள் விரும்பினால் தொலைப்பேசி, மின்மடல், இணைய அரட்டை, சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். இது உங்கள் உளைச்சலைக் குறைக்க உதவும். எனினும், இது அவர்களைத் தொந்தரவுக்கும் சங்கடத்துக்கும் உள்ளாக்காமலும் விக்கிப்பீடியா வலியுறுத்தும் வெளிப்படையான செயற்பாடுகளுக்கு எதிராகவும் அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உளைச்சலைப்பொருத்தவரை வருமுன் காப்பது சாலச்சிறந்தது. தக்க நேரத்தில் நாம் எடுக்கும் விடுப்பு உளைச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கக்கூடும். அதேபோல சில கடுமையான பணிகளை ஏற்றுக்கொள்ளுமுன் உளைச்சலுக்கான வாய்ப்பையும் எண்ணிப்பார்த்துக்கொள்வது நல்லது. ஒரு சமூகமாக விக்கியர்கள் மேற்கொள்ளும் திட்டங்களிலும் இதைக்கருத்தில் கொள்ளவேண்டும். நல்ல வளர்ச்சி வாய்ப்பாக இருந்தாலும் பங்களிப்பாளர்களை மிகவும் அழுத்தக்கூடிய பணிகளைத் தவிர்க்கலாம்.