விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)

மயூரனாதன், மூன்றாவது ஆய்விலும், பைட் அளவுகள் 2.5ஆல் வகுக்கப்பட்டதா எனத் தெரிவிக்கவும். இந்திய விக்கிபீடியாக்களில் கன்னட விக்கிபீடியா தரத்தில் தெலுங்கு, வங்காளம், மராத்தியை விட உயர்ந்ததாக சில சமயங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கன்னட விக்கிபீடியாவும் எண்ணிக்கையில் வளரும் மராத்தி விக்கிபீடியாவும் ஆய்வுகளில் விடுபட்டுள்ளன. எனினும், தமிழ் இவற்றைக் காட்டிலும் அதிக தரமுடையது என்பது ஏற்கனவே அட்டவணை வடிவிலான ஒப்பீடுகளில் கண்டிருக்கிறோம். உங்கள் கவனத்துக்காகவே இத்தகவலை தந்தேன். தயவுசெய்து, திரும்ப புதுப் படிமங்களை நீங்கள் வரைய வேண்டாம். இந்திய மொழி விக்கிபீடியாக்களுடனான ஒப்பீடுகளை விட தரம், எண்ணிக்கையில் சிறந்த ஆங்கிலம், பிரெஞ்சு விக்கிபீடியாக்களுடனான ஒப்பீடு பயனுள்ளதும் நம்பிக்கையளிப்பதுமாக உள்ளது. 4000 கட்டுரைகளை தாண்டிய நிலையில் ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரை அளவில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் தற்போது அங்கு 3000 பைட் அளவில் கட்டுரைகள் இருப்பதாக சொல்லி உள்ளீர்கள். இது போன்ற முன்னேற்றம் தமிழ் விக்கிபீடியாவிலும் அதிக பயனர்கள் வரும்போது ஏற்பட வாய்ப்புண்டு. குறுங்கட்டுரைகள் மட்டும் பெருகி வரும் போக்கு சீர் செய்யப்பட வேண்டியது தான். விரிவான கட்டுரைகள் எழுதும் வழக்கம் உள்ள பங்களிப்பாளர்களை காட்டிலும் வழக்கமாக குறுங்கட்டுரைகள் எழுதும் பங்களிப்பாளர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தான் காரணம். இயன்ற வரை தகுந்த இடங்களில் விரிவாக்கித் தருமாறு குறித்த பயனர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருவதும் அவை பயனளித்து வருவதும் நாம் அறிந்ததே. கடந்த ஓரிரு மாதங்களில் குறுங்கட்டுரைகளை வளர்க்கும் நடவடிக்கைகளை கோபி போன்றோர் முன்னெடுத்துச் செய்கின்றனர். இம்முயற்சிகள் பலனளிக்கும் என்று நம்புகிறேன்.


இது வரை ஒரு வரிக்கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக்கும் முயற்சிகளை செய்து வருகிறோம். இனி குறுங்கட்டுரைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் எளிதில் விரிவாக எழுதப்படக்கூடிய கட்டுரைகளையும் அடையாளம் கண்டு, அக்கட்டுரைகளை தொடங்கிய பங்களிப்பாளரையோ அவற்றில் ஆர்வம் உள்ளவர்களையோ விரிவாக்கித் தருமாறு வேண்டும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஐந்து புதுக்கட்டுரைகளை உருவாக்கும் பயனர், அதற்கு இணையாக தன்னுடைய ஒரு பழைய கட்டுரையையாவது தரமுயர்த்துவது என்பது போன்ற தற்கட்டுப்பாடுகளுடனும் பொறுப்புடனும் பங்களித்தால் நன்றாக இருக்கும். இதை தீர்மானமாக கண்காணிக்க முடியாது. ஆனால், இதனை ஒரு விக்கி நல்வழக்கமாக அறிவித்து பின்பற்றச்சொல்லலாம். ஆனால், இம்முயற்சிகளை பிற பயனர்கள் கனிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஏற்கனவே, தரக் கண்காணிப்பு குறித்த பணிகளில் சில விவாதங்களில் கோபியும் நானும் சில சங்கடமான விவாதங்களை எதிர்க்கொள்ள வேண்டி வந்தது. தரக்கண்காணிப்பு, தள நிர்வாகம் ஆகிய பணிகளில் மேலதிக நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது எதிர்ப்பார்ப்பு. இது சுமையை குறைப்பதுடன், ஓரிருவர் மட்டும் தொடர்ந்து கசப்பான விவாதங்களை எதிர்கொள்வதை தவிர்க்கும். இத்தருணத்தில், கோபியின் மனம் தளரா பொறுமையுடன் கூடிய தரக்கண்காணிப்பு பணிகளை பெரிதும் பாராட்டுகிறேன். அவரை போன்று இன்னும் பலர் இத்தளத்துக்கும் விக்சனரி தளத்துக்கும் தேவை. நன்றி--ரவி 19:19, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

இல்லை ரவி, மூன்றாவது ஆய்வு ஐரோப்பிய மொழிகளுடனான ஒரு ஒப்பீட்டு ஆய்வு இல்லாதபடியால் 2.5 ஆல் வகுக்கவில்லை.
கன்னட, மராத்தி விக்கிகளையும் நான் கவனித்து வருகிறேன். ஆனாலும் நான் இங்கே அவற்றைச் சேர்க்க முயலவில்லை. கன்னட விக்கியையும் தரமாகவே வளர்த்து வருகிறார்கள் என்பதை நான் தெளிவாக அவதானித்திருக்கிறேன். ஆனாலும் அதனுடன் தமிழை ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த ஆய்வின் நோக்கமல்ல. புயல் வேகத்தில் கட்டுரை எண்ணிக்கைகளைப் பெருக்கிக் கொண்டுள்ள விக்கிகளைப் பார்த்து நமது பயனர்களும் சபலப்படக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதினேன். தெலுங்கு, வங்காள விக்கிகளின் வளர்ச்சி இயல்பானது அல்ல (தற்போதைய நிலையில்) என்பதையும், இத்தகைய போக்கு ஒரு தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்க உதவாது என்பதையும் எடுத்துக்காட்டுவதே எனது நோக்கம். அதற்காகவே ஆங்கிலம் முதலிய விக்கிகளையும் ஒப்பீட்டில் சேர்த்துக்கொண்டேன். Mayooranathan 19:44, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

த.வி. ஆழவும் போகவேண்டும் அகலமாகவும் போகவேண்டும் தொகு

த.வி. சராசரி பைட்க்களின் எண்ணிக்கை தரவு குறைவதற்கு வரையறைகளை மட்டும் கொண்டு நான் உள்ளிடும் பல கட்டுரைகளும் காரணம் எனலாம். குறிப்பாக கணிதம் கணினியல் துறைகளில். என்னைப் பொறுத்தவரை சிகப்பு இணைப்புக்களை விட வரையறைகள் மேல்.


சில கட்டுரைகளில் ஆழமாக அல்லது விரிவாக எழுதி வருகின்றேன் (எ.கா. கனடா). ஆனால், பல சிறு கட்டுரைகள் இயல் அறிமுகம்களாகவும் அல்லது கருத்து பரம்பல் (topics diversity) நோக்கத்துக்காகவும் எழுதி வருகின்றேன். சில கட்டுரைகள் ஒரு வித நடுநிலைமையை எடுத்துரைப்பதற்காகவும் சேர்த்துள்ளேன். சில கட்டுரைகள் தமிழ்ச் சூழலில் சில கருத்துக்களை அலசுவதற்காகவும் சேர்த்துள்ளேன். எனது கருத்தில் குறுங்கட்டுரைகளைப் நோக்கி தொலைநோக்கு பார்வை அவசியம். எனினும், ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்தான். --Natkeeran 20:03, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

ஒப்பீடு தொகு

மயூரநாதன், தாங்கள் விரிவாக ஒப்பீடுகள் தந்தமைக்கு நன்றி. கடைசி வரைபடம் (தெலுங்கு), தாங்கள் திருத்தி வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். அதன் y-axis (நெடும் அச்சு) தமிழ் ஒப்பீட்டில் இருப்பதுபோல உச்சி அளவீடு 50-60% என்னும் அளவாக இருத்தல் வேண்டும் (இப்பொழுது தெலுங்குக்கு 100-120% என உள்ளது). முடிவுகளில் ஏதும் மாறுபாடு இருக்காது, ஆனால் வரைபடங்கள் சீர் ஒப்பீடாக இருத்தல் வேண்டும். நான் தமிழ் முன்னணியில்தான் இருக்கின்றது என கூறிவந்துள்ளேன், ஆயின், கன்னடம் போன்ற இந்திய மொழிகள் விரைந்து வளர்கின்றன என்றும், நம் முன் வீச்சு குறைந்து வருகின்றது என்றும் கருத்து தெரிவித்துள்ளேன். தமிழ் விக்கியில் பணியாற்றும் அனைவரும் மிக அருமையாக உழைத்து வருகிறார்கள். வளர வளர இன்னும் செப்பம் கூடும் என்று உறுதியாக நம்புகிறேன். புதுவரவு தந்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஆற்றும் பணி கண்டு நான் மிகவும் மகிழ்கின்றேன். --C.R.Selvakumar 21:12, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

செல்வா, நீங்கள் குறிப்பிட்டது சரிதான். விரைவில் திருத்துகிறேன். Mayooranathan 13:34, 8 அக்டோபர் 2006 (UTC)Reply
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)".