விடியல் (சிற்றிதழ்)
விடியல் என்பது 1970 களில் வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். முதலில் இது மாத இதழாக வெளிவந்து பின்னர் மாதமிருமுறை இதழாக வெளிவரத் துவங்கி, பின்னர் வார இதழாகவும் வெளியானது. இந்த இதழ் தமிழ்நாட்டின், சென்னையிலிருந்து வெளியானது. இதன் ஆசிரியர் கே. எம். வேணுகோபாலன் ஆவார்.[1]
கலை இலக்கிய இதழான விடியல் 1975 சனவரியில் துவக்கப்பட்டது. மாதப் பத்திரிகையாக சில இதழ்கள் வெளி வந்த பிறகு, 1976இல் மாதமிரு முறை இதழாக வெளியிடப்பட்டது. மாத இதழில் இன்குலாப், பரிணாமன், கங்கைகொண்டான் ஆகியோரின் கவிதைகளைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் வெளியாயின. திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களும் எழுதப்பட்டன. கதைகள், கவிதைகள் போன்றவையும் இடம்பெற்றன. 1975 மே மாத இதழில் இலங்கைப் படைப்புகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை என்ற புதினம் குறித்த விரிவான விமர்சனம் வெளியானது.
விடியல் ஐந்தாவது இதழ் (சனவரி 1976 ) முதல், மாதமிருமுறையானது. அதிலிருந்து அது தன் போக்கையும் மாற்றிக் கொண்டது. நாடுகள் பற்றிய தகவல்கள், குறிப்புகள், வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய சிறு கட்டுரைகள் முதலியன வெளியாயின. சிறு சிறு கவிதைகளும் இடம் பெற்றன. தரமான படைப்புகள் கிடைப்பது சிரமமாக இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று அறிவிக்கப்பட்டது.[1]
1976 ஏப்ரல் முதல் விடியல் வார இதழாக மாற்றம் பெற்றது. அரசியல் குறிப்புகள், அயல்நாட்டு செய்திகள், கேள்விபதில் பகுதி, உருவக் கதை போன்றவற்றுடன், மாணவன் எழுதிய குரல்கள் என்ற தொடர் நாடகமும் வெளிவந்தது. கலை இலக்கிய விவகாரங்கள், விமர்சனங்கள் முதலியன இடம் பெறவில்லை. இது குறித்து வாசகர்கள் கேள்வி எழுப்பியதும் உண்டு.
விடியலின் 25 வது இதழ் (25 சூலை 76) முக்கியமானது. அதில் விரிவான சுய விமர்சனம் ஒன்றை அது வெளியிட்டது. அதில்;
பொதுவாக விடியல் இதழ்கள் நெடுக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. விடியல் தனக்குப் பிரதான எதிரியாக வரித்துக் கொண்டிருக்கிற நிலப்பிரபுத்துவத்தைக் கருவறுப்பதற்கு சொற்ப முயற்சியே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை வெளியாவதற்கான வாய்ப்புக்களை அகலப்படுத்தியிருக்க வேண்டும்.
என்று குறிப்பிட்டது.
விடியல் 25வது இதழுடன் நின்றுபோனது. அதன் 25 வது இதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு சீனக் கவிதை அச்சிடப்பட்டது. அதன் தலைப்பு: ’நன்றி! போய் வருகிறோம்.’ என்பதாகும்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 208–213. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.