வினாவெழுத்து
தமிழ் எழுத்துகளை ஒலி நோக்கில் முதலெழுத்து என்றும், சார்பெழுத்து என்றும் பாகுபாடு செய்தனர். சுட்டாகவும் வினாவாகவும் பொருள் உணர்த்தும் எழுத்துகளைச் சுட்டெழுத்து வினா எழுத்து எனப் பகுத்துத் தனியே குறிப்பிடலாயினர்.[1][2] வினாப் பொருளைக் குறிக்கும் எழுத்து வினாவெழுத்து எனப்படும். இவ்வெழுத்துகள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன.'ஆ','எ','ஏ','ஓ','யா', என்பவை வினா எழுத்துகளாகும்.
சான்று 1:
ஆ, ஏ, ஓ ஆகிய மூன்று எழுத்துகளையும் தொல்காப்பியம் வினா எழுத்து எனக் குறிப்பிடுகிறது.
- உணுகா சாத்தா (ஆ) (சாத்தா! நான் உண்ணவா)
- உண்கே சாத்தா (ஏ) (சாத்தா! நீ உண்பாயா)
- உண்கோ சாத்தா (ஓ) (சாத்தா! நாம் உண்ணலாமா)
இவை பழந்தமிழ் வழக்கு.
சான்று 2:
- அவன் செய்தான்.
- அவனா செய்தான்.
இத்தொடர்களுள் முதலிலுள்ள தொடர் ஒரு செய்தியைக் குறிக்கிறது. இரண்டாவது தொடர் ஒரு வினாவை எழுப்புகிறது. ஒரு செய்தியை வினாவாக்கிய எழுத்து 'ஆ' எனவே இது வினா எழுத்தாகும்.
வினா எழுத்துகள் இவை எனக் கூறும் நூற்பா
தொகு- "ஆ, ஏ, ஓ, அம்முன்றும் வினா " - தொல், எழுத்து. 32
- " எப்ப்பெயர் முன்னரும்" - தொல், எழுத்து. 123
- "யாவென் வினாவும் ஆயியல் திரியாது" - தொல், எழுத்து. 175
வினாவெழுத்து வரும் இடங்களைக் கூறும் நூற்பா
தொகு- "எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
- ஏ இரு வழியும் வினாவாகும்மே." - நன்னூல், எழுத்தியல். 67
வினா எழுத்துகளில் 'எ', 'யா' இரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- எங்கே?, எக்கொற்றன்? யார்?
ஆ,ஓ இரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
- உள்ளதா?, இவனோ?
ஏ எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்
- ஏவன்? கள்வனே?
வினா வகைகள்
தொகுவினா,
- அகவினா
- புறவினா
என இருவகைப்படும்.
அகவினா
தொகுஒரு சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும் வினா "அக வினா" எனப்படும். இவ்வெழுத்துகளைச் சொல்லிலிருந்து பிரித்தால், அச்சொல் தனியே பொருள் தராது.
அகவினாவிற்குரிய எழுத்துகள்
தொகு- யா
- எ
- ஏ என்பன.
சான்று:
- யார்?, யாது?, யாவை?.
- எது?, எங்கே?, எப்படி?, எவ்வாறு?, என்ன?, எதற்கு?
- ஏன்?, ஏது?
இவை சொல்லாம் நிலையில் இருந்து வினாப்பொருளை உணர்த்தும்.
புறவினா
தொகுசொல்லின் புறத்தே நின்று வினாப்பொருளை உணர்த்தும் வினா "புற வினா" எனப்படும்.
இச்சொற்களில் வினாப் பொருளைத் தரும் எழுத்தை நீக்கினாலும் அச்சொற்கள் தனியே நின்று பொருள்தரும்.
புறவினாவிற்குரிய எழுத்துகள்
தொகு- ஆ
- ஏ
- ஓ
இவை எழுத்தாம் நிலையில் நின்று வினாப்பொருளை உணர்த்தும்.
சான்று:
- இவனா? - இவன் +ஆ
- அவனே? - அவன் +ஏ
- யாரோ? - யார் + ஓ
அடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்
தொகு- நன்னூல், எழுத்ததிகாரம்
- தொல்காப்பியம், எழுத்ததிகாரம்