வினையாதித்தன்

வினையாதித்தன் (Vinayaditya ஆட்சிக்காலம் 680-696 ) என்பவன் ஒரு சாளுக்கிய அரசனாவான். இவனது தந்தை விக்ரமாதித்தனைத் தொடர்ந்து அரியணை ஏறியவன். இவனது ஆட்சியின்போது நாடு அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவன் யுத்தமல்லன், சாகசரசிகன், சத்தியஷிரேயன் ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தான்.

வடக்குப் பயணம்

தொகு

இவனது பல வெற்றிகள் குறித்து இவனது கல்வெட்டுகள் பேசுகின்றன. இவன் பல்லவர்களுக்கு எதிராக தனது தந்தையுடன் இணைந்து போராடினான். கி.பி.684 ஆண்டைய ஜிஜூரி பதிவுகளின்படி, இவன் பல்லவர் , களப்பிரர்கள் , சேரர்கள், மத்திய இந்தியாவின் காளச்சூரியர்களையும் வென்றதாக குறிக்கிறது. கி.பி.678 ஆண்டைய கோலாப்பூர் பட்டையங்களில் இருந்து இவன் லங்கா,கெமர் ஆகிய அரசுகளை தோற்கடித்ததாக குறிப்பிடுகின்றன.கலாநிதி எஸ் நாகராஜு கெமெர் என்பது கம்போடியாவாக இருக்கலாம் என்று கருதுகிறார். வக்கலேரி பட்டயங்கள் இலங்கை மற்றும் பெர்சியா (பாரசீகம்) ஆட்சியாளர்கள் சாளுக்கியர்களுக்குத் திரை செலுத்தியதாகக் கூறுகின்றன. முனைவர் சர்க்கார் இலங்கை மற்றும் பாரசீகத் தலைவர்கள் அந்த நாடுகளில் உள்ள உறுதியற்ற அரசியல் நிலைமை கருதி, சாளுக்கியரிடம் பாதுகாப்புத் தேடி இருக்க மிகவும் சாத்தியம் உள்ளது என்கிறார். இந்த நேரத்தில், பாரசீகம் இஸ்லாமிய படையெடுப்பின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வினையாதித்தன் தனது மகன் விஜயாதித்தன் தலைமையில் வடக்கில் படைகளை அனுப்பினான். சில தகவல்களின்படி, விஜயாதித்தன் அங்கு பிடிபட்டு சிறைவைக்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகு, தப்பி சாளுக்கிய நாடு திரும்பினான்.இந்தப் பயணம் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை.

வினையாதித்தன் கி.பி. 692 இல் சீன அரசவைக்கு ஒரு தூதரை அனுப்பினான்.

விஜயாதித்தன் கி.பி. 696 இல் தனது தந்தைக்குப்பின் ஆட்சிக்கட்டிலில் ஏறினான்.

மேற்கோள்

தொகு
  • Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).


"https://ta.wikipedia.org/w/index.php?title=வினையாதித்தன்&oldid=2487920" இலிருந்து மீள்விக்கப்பட்டது