மிரோன் வின்சுலோ

அமெரிக்க மறைப்பணியாளர்
(வின்சுலோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிரோன் வின்சுலோ (Miron Winslow, டிசம்பர் 11, 1789 - அக்டோபர் 22, 1864) என்பவர் இலங்கையிலும், இந்தியாவிலும் பணிபுரிந்த அமெரிக்க மதப்பரப்புனர் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் உடுவில் என்ற ஊரில் ஒரு மதப்பள்ளியை ஆரம்பித்தார். அத்துடன் சென்னையிலும் அமெரிக்க மதராசு மிசனின் முதலாவது நிறுவனத்தை ஆரம்பித்தார்.[1][2][3][4] இவர் தொகுத்த தமிழ் ஆங்கில விரிவான அகராதி (A Comprehensive Tamil and English Dictionary) 976 பக்கங்களில் 68,000 சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அருள்திரு ஜோசப் நைட் பிரபுவின் மூல நகலை அடிப்படையாக வைத்து தினமும் மூன்று மணிநேரம் வீதம் இருபது ஆண்டுகள் உழைப்பில் 1862 ஆம் ஆண்டு இதை வின்சுலோ வெளியிட்டார். இவ்வகராதியை அடிப்படையாகக் கொண்டே 1924 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் மிகவும் விரிவான சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டது. இப்பெரும் பணியைத் தவிர வின்சுலோ A History of Missions உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்[1][4][5][6]

வண.
மிரோன் வின்சுலோ
Miron Winslow
பிறப்பு(1789-12-11)திசம்பர் 11, 1789
விலிசுட்டன், வெர்மான்ட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புஅக்டோபர் 22, 1864(1864-10-22) (அகவை 74)
தேசியம்அமெரிக்கர்
கல்விமிடில்பரி கல்லூரி
படித்த கல்வி நிறுவனங்கள்அன்டோவர் இறையியல் மடப்பள்ளி
பணிகிறித்தவ மதப்பரப்புனர், சொற்களஞ்சிய ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1819-1864
குறிப்பிடத்தக்க படைப்புகள்A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil (1862)
A History of Missions (1819)
வாழ்க்கைத்
துணை
அரியட் வின்சுலோ (தி. சனவரி 19, 1819)

ஆரம்ப வாழ்க்கை

தொகு

வின்சுலோ அமெரிக்காவில் வெர்மான்ட் மாநிலத்தில் வில்லிஸ்டன் என்ற நகரில் 1789 திசம்பர் 11 இல் நத்தானியேல் வின்சுலோ, அன்னா கெலொக் ஆகியோருக்குப் பிறந்தார். தனது 14வது அகவையில் வணிகத் தொழிலில் ஈடுபடலானார்.[1][4] பின்னர் 1815 இல் மிடில்பரி கல்லூரியில் பட்டம் பெற்று, பின்னர் ஆன்டோவர் இறையியல் மதப்பள்ளியில் 1818 இல் பட்டம் பெற்றார். 1819 சனவரி 19 இல் ஏரியட் லாத்ரொப் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர்.[1][4]

ஆன்டோவர் கல்லூரியில் பயிலும் போது, வெளிநாட்டு மதப்பரப்புரைக்கான அமெரிக்க ஆணையத்தில் முகவராகப் பணியாற்றி நியூ இங்கிலாந்து சென்று நிதி திரட்டுவதில் உதவினார். 1818 நவம்பர் 4 இல், மாசச்சூசெட்ஸ் டபர்னேக்கில் தேவாலயத்தில் போதகராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் மதப்பரப்புனர் சேவைக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.[1][4]

மதப்பரப்புப் பணி

தொகு

1819 சூன் 8 இல், பாஸ்டனில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்றார். அங்கிருந்து அவர் 1819 டிசம்பர் 14 இல் இலங்கை சென்றடைந்தார். தனது மதப்பணியை உடுவிலில் 1820 சூலை 4 இல் ஆரம்பித்தார். அங்கு அவர் மதப்பள்ளியையும் ஆரம்பித்தார். 14 ஆண்டுகள் உடுவில் பணியாற்றிய பின்னர், சென்னைக்கு இடமாற்றப்பட்டார். 1836 ஆகத்து 18 இல் சென்னை வந்தடைந்த அவர், அங்கு அமெரிக்க மதராசு மிசனை நிறுவி அதன் மூலம் தமது மதப்பணிகளை இந்தியாவில் ஆரம்பித்தார்.[1][2][3][4]

1855 இல் அமெரிக்கா சென்று, பின்னர் 1858 இல் மீண்டும் சென்னை திரும்பினார். சீரற்ற உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் 1864 ஆகத்து மாதத்தில் அமெரிக்கா பயணமானார். ஆனாலும், அவர் அமெரிக்கா திரும்பும் வழியில், தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனில் வந்திறங்கி இரண்டாம் நாளில் 1864 அக்டோபர் 22 இல் காலமானார்.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 The Congregational quarterly, Volume 7. 1865. pp. 209–210. {{cite book}}: |work= ignored (help)
  2. 2.0 2.1 Wilder, Royal Gould (1861). Mission schools in India of the American board of commissioners for foreign missions. A. D. F. Randolph. pp. 360-. {{cite book}}: |work= ignored (help)
  3. 3.0 3.1 3.2 Howland, William Ware; James Herrick; Jim Herrick (1865). Historical sketch of the Ceylon mission. American Board of Commissioners for Foreign Missions. p. 44. {{cite book}}: |work= ignored (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Allibone, Samuel Austin (1871). A critical dictionary of English literature, and British and American authors. Childs & Peterson. pp. 2793–2794. {{cite book}}: |work= ignored (help)
  5. Famous americans
  6. Louis, Le Brun; Henri van Laun (1869). Materials for translating from English into French, a short essay on translation; followed by a selection by L. Le Brun. p. 227. {{cite book}}: |work= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரோன்_வின்சுலோ&oldid=3588505" இலிருந்து மீள்விக்கப்பட்டது