வியட்நாம் மீதான மங்கோலியர்களின் படையெடுப்புகள்

வியட்நாம் மீதான மங்கோலியப் படையெடுப்புகள் அல்லது மங்கோலிய-வியட்நாமிய போர்கள் என்பது மங்கோலியப் பேரரசு மற்றும் அதன் தலைமை கானரசான யுவான் அரசமரபு ஆகியவை மூன்று முறை திரான் அரசமரபின் காலத்தின்போது தாய் வியட் மற்றும் சம்பா ராச்சியம் மீது போர் தொடுத்ததைக் குறிப்பதாகும். இப்படையெடுப்புகள் 1258, 1285, மற்றும் 1287-88 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன.[1] முதல் படையெடுப்பானது 1258 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட மங்கோலியப் பேரரசின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. அந்நேரத்தில் மங்கோலியப் பேரரசு சாங் சீனாவைத் தாக்க வேறுபட்ட வழிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. தாய் வியட் தலைநகரமான தாங் லாங்கை (தற்போதைய ஹனோய்)[2][3] மங்கோலியத் தளபதி உரியங்கடை வெற்றிகரமாக கைப்பற்றினார். பிறகு 1259 ஆம் ஆண்டு வடக்கு நோக்கி திரும்பி சாங் அரசமரபின் மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு  தற்கால குவாங்சி என்ற இடத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைக்கப்பட்ட மங்கோலிய தாக்குதலின் ஒருபகுதியாக இந்த படையெடுப்பு நடைபெற்றது. மோங்கே கான் தலைமையிலான ராணுவம் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கியது. மற்ற மங்கோலிய ராணுவங்கள் தற்கால சாண்டோங் மற்றும் ஹெனன் ஆகிய பகுதிகளை தாக்கின.

இரண்டாவது மற்றும் மூன்றாவது படையெடுப்புகள் யுவான் அரசமரபின் குப்லாய்கானின் ஆட்சியின்போது நடைபெற்றன.  அந்த நேரத்தில் மங்கோலியப் பேரரசு நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரிந்திருந்தது. அவற்றில் யுவான் அரசமரபு வலிமையானதாகவும் பெரியதாகவும் இருந்தது. இந்த படையெடுப்புகள் 1285 ஆம் ஆண்டில் நிலத்தில் மங்கோலியர்களுக்கு ஏற்பட்ட பெரிய தோல்வியாக அமைந்தது. மேலும் 1288 ஆம் ஆண்டில் மங்கோலிய கடற்படையானது அழிந்தது. எனினும் திரான் அரசமரபு மற்றும் சம்பா ராச்சியம் ஆகிய இரண்டுமே பெயரளவில் யுவான் அரசமரபின் உயர்நிலையை ஒத்துக்கொண்டன. மேற்கொண்டு சண்டைகளைத் தவிர்க்க கப்பம் கட்ட ஒத்துக் கொண்டன.[4]

உசாத்துணை

தொகு
  1. Tansen Sen - The Yuan Khanate and India: Cross-Cultural Diplomacy in the Thirteenth and Fourteenth Centuries, pp. 305
  2. Rossabi, Morris (2009). Khubilai Khan: His Life and Times. University of California Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520261327.
  3. Buell, P.D.. "Mongols in Vietnam: end of one era, beginning of another". First Congress of the Asian Association of World Historians 29–31 May 2009 Osaka University Nakanoshima-Center. 
  4. Bulliet, Richard; Crossley, Pamela; Headrick, Daniel; Hirsch, Steven; Johnson, Lyman (2014-01-01). The Earth and Its Peoples: A Global History (in ஆங்கிலம்). Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781285965703.