விரிச்சி என்பது விரித்துப் கற்பனை செய்யப்படும் மனத்தோற்றம் அல்லது மனமாயை. விரிச்சி என்பது காணும் காட்சிகளைக் கொண்டு முடிவு செய்வது. புள் என்பது கேட்கும் ஒலிகளைக் கொண்டு முடிவு செய்வது.

தொல்காப்பியம் தொகு

வேற்றுநாட்டு ஆனிரைகளை(பசுக்களை)க் கவர்ந்துவரச் செல்லும் வீரர்கள் விரிச்சி பார்ப்பார்களாம். இதற்குப் பாக்கத்து விரிச்சி என்று பெயர். இது வெட்சித் திணையின் 21 துறைகளில் ஒன்று. பாக்கத்தில் நிகழும் நிமித்தங்களை எதிர்கால உறிகுறிகளாக எடுத்துக்கொள்வதே இந்த விரிச்சி. - தொல்காப்பியம் நூற்பா-1004

முல்லைப் பாட்டு தொகு

மாலை வேளையில் பெருமுது பெண்டிர் ஊருக்குப் பக்கத்தில் உள்ள இடத்துக்குச் சென்று விரிச்சிக்காகக் காத்திருக்கின்றனர். அவர்கள் நல்லையும் முல்லை அலரியையும்(அலர்ந்த பூவையிம்) தூவிக் கைகூப்பித் தொழுதுகொண்டு நிற்கின்றனர். இதன் பயனாக இவர்களுக்கு வாய்ப்புள் சகுனம் தெரிகிறது. (பாடல் அடி 11)

நற்றிணை தொகு

வீட்டின் முன் மணலைப் பரப்பி, பசுமையான இலைகளால் மூடிப் பந்தல் போட்டிருந்தார்கள். அப்போதுதான் பிறந்த பச்சிளங் குழந்தை தாயின் அரவணைப்பில் உறங்கிக்கொண்டிருக்கிறான். பெரும்பாண் இசைவாணர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திருந்திழை மகளிர் விரிச்சிக்காகக் காத்திருந்தனராம். (பிறந்துள்ள குழந்தையின் எதிர்காலத்தை இந்த விரிச்சியைக் கொண்டு அவர்கள் கணிப்பர்) - பாடல் 40

குறுந்தொகை தொகு

பாலைநிலத் தெய்வம் சூலி. பிரிந்து சென்ற தலைவன் எப்போது வருவான் என்று தலைவி இந்தச் சூலியிடம் வாய்ப்புள் கேட்பாள். விரிச்சி காண்பாள். இது ஒரு வழக்கம். இந்தப் பாடலில் ஒரு தலைவி சூலிக்கு நேர்த்திக் கடனும் பூணமாட்டேன். அவள் நூலைக் கையில் கட்டிக்கோள்ளவும் மாட்டேன். அவள் வாய்ப்புள்ளையும்(அசரீரி) கேட்கமாட்டேன். அவள் காட்டும் விரிச்சிகளையும் பார்க்கமாட்டேன். அவளை நினைக்கவும் மாட்டேன் என்று மனம் வெதும்பிக் கூறுகிறாள். (இந்தப் பாடலில் அமைந்துள்ள தொடர்கள் இவற்றைச் செய்து பிரிந்து சென்றுள்ளவரைக் காக்கும்படி வேண்டிக்கொள்வோம் எனப் பொருள் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.) - பாடல் 218

புறநானூறு தொகு

செம்முது பெண்டு நெல்லையும் நீரையும் நாலாப்பக்கமும் வீசி எறிந்து விரிச்சிக்காகக் காத்திருந்தாள். போரில் புண்ப்படுக் கிடக்கும் ஒருவன் பிழைப்பானா மாட்டானா என நிமித்தங்களைக் கொண்டு முடிவு செய்வதற்காக அவள் அவ்வாறு செய்தாள். அப்போது செம்முது பெண்டு பார்த்த விரிச்சியில் எதுவும் தெரியவில்லையாம். எனவே ஆனந்தப்பையுள் கொள்வான் (இறந்துபடுவான்) என முடிவு செய்கின்றனர். - பாடல் 280

இவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் தொகு

புள்
சகுனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிச்சி&oldid=737393" இலிருந்து மீள்விக்கப்பட்டது