வில்லியம் அடைர் நெல்சன்

வில்லியம் அடைர் நெல்சன் (William Adair Nelson) ஒரு பிரித்தானியர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இலங்கையில் பணியாற்றியவர். அரண்கள், கோட்டைகள் போன்ற பாதுகாப்புத் தொடர்பான கட்டிடங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் இலங்கையில் ஒல்லாந்தர் காலக் கோட்டைகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்ததுடன், பிற்காலத்தில் இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டைகள் (The Dutch Forts of Sri Lanka) என்னும் தலைப்பிலான ஆங்கில நூலொன்றையும் வெளியிட்டார். இது இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்ட முக்கிய நூலாகும்.

இளமைக்காலம் தொகு

நெல்சன் 1907 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை எச். அடேர் நெல்சன், அபர்டீனில் மாட்சிமை தாங்கிய அரசரின் அரங்கில் மேலாளராக இருந்தவர். வில்லியம் நெல்சன் 1914 முதல் 1924 வரை அபர்டீன் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார். அபர்டீனில் இருந்த "வில்லியம்சன் அன்ட் டன்" என்னும் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் வேலை பழகுனராகச் சேர்ந்த வில்லியம் நெல்சன், 1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதித் தேர்வில் சிறப்புத் தகைமையுடன் வெற்றி பெற்றார். இதன்பின்னர் அக்காலத்தில் முன்னணியில் இருந்த பல பட்டயக் கணக்காளர் நிறுவனங்களில் பணியாற்றினார். 1930களின் நடுப் பகுதியில், அக்காலத்தில் பிரித்தானியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கைக்கு வந்த நெல்சன், கொழும்பில் இருந்த இலண்டனைச் சேர்ந்த "ஃபோர்ட், ரோட்சு அன்ட் தோர்ன்டன்" என்னும் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் அங்கே மேல்நிலை உதவியாளர் தரத்தில், கணக்காய்வு, கணக்கியல் துறைக்குப் பொறுப்பாக இருந்தார்[1].

கோட்டைகள் மீதான ஆர்வம் தொகு

நெல்சனுக்குப் பள்ளிக் காலத்தில் இருந்தே கோட்டைகள், அரண்கள் முதலியவற்றின் மீது ஆர்வம் இருந்தது. எனினும், இலங்கையில் இருந்த காலத்திலேயே இது தொடர்பில் ஆய்வு செய்யக்கூடிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது[2]. இலங்கையில் கரையோரப் பகுதிகளைத் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஒல்லாந்தர் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பல கோட்டைகளைக் கட்டியிருந்தனர். இவற்றை ஆய்வு செய்யப் புகுந்த நெல்சன் இலங்கையில் ஒல்லாந்தர் கோட்டைகள் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்து பல தகவல்களைத் திரட்டினார். ஒளிப்படங்களை எடுத்ததுடன், கோட்டைகளை அளந்து வரைபடங்களையும் வரைந்து, குறிப்புக்களையும் எடுத்தார்.

படைத்துறையில் பணி தொகு

1938 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்குத் திரும்பிய நெல்சன் ஓராண்டு பெல்சியம் நாட்டில் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டில் அவர் இலண்டனுக்குத் திரும்பினார். இலண்டனில் படையில் இணந்து கொண்ட நெல்சன் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பெரும்பாலும் மத்தியகிழக்குப் பகுதிகளில் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டில் போரில் காயமடைந்த இவர் 1945 அக்டோபரில் படையிலிருந்து விலகினார். அப்போது அவர் கப்டன் தரத்தில் இருந்தார்[3].

1942 ஆம் ஆண்டில் முரியேல் கார்டினர் என்பவரை நெல்சன் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கிளயர், சாரா என்னும் இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர். நெல்சனின் மனைவி 1977 ஆம் ஆண்டில் காலமானார்[4].

பிற்காலம் தொகு

போருக்குப் பின்னர் 1946 ஆம் ஆண்டில் "குளோவின் பே" என்னும் இடத்தில் இருந்த உணவு அமைச்சில் நிதிக் கண்காணிப்பாளராகப் பணியேற்றார். பின்னர் அங்கிருந்து இலண்டனுக்குச் சென்ற நெல்சன், தேசிய நிலக்கரிச் சபையில் நிதி அலுவலராகப் பதவியில் அமர்ந்தார். அபர்டீனுக்குத் திரும்புவதில் ஆர்வம் கொண்டிருந்த நெல்சன், அபர்டீன் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்து 1948ல், அங்கே பொருளாளர் மற்றும் துணைச் செயலராகப் பதவியேற்றார். 1960 ஆம் ஆண்டில் அபர்தீன் பல்கலைக் கழகம் இவருக்குக் கௌரவ முதுமாணிப் பட்டம் வழங்கியது[5]. ஓய்வுபெறும்வரை 30 ஆண்டுகள் அப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய நெல்சன் 1975 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இதன் பின்னரே இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டைகள் தொடர்பான அவரது ஆய்வை நிறைவு செய்யக்கூடிய நேரமும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தன. தனது ஆய்வு விவரங்களை ஒரு பெரிய முழுமையான நூலாக வெளியிட இவர் ஆர்வம் கொண்டிருந்தார் ஆயினும் நூல் வெளியீட்டுக்கான செலவுகள் அதிகமாகும் என்பதால் அவரது எண்ணம் முழுமையாகக் கைகூடவில்லை. அவர் சேகரித்த பல தகவல்களை நூலில் சேர்க்காமல் விடவேண்டியதாயிற்று. பெரும்பாலான தகவல்களைச் சேகரித்து 45 ஆண்டுகள் கழிந்த பின்னரே 1984 ஆம் ஆண்டில் இவரது நூல் வெளியானது. எனினும் முதலில் தகவல் சேகரித்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் கழிந்துவிட்டமையால், கோட்டைகளின் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்துகொள்வதற்காக நெல்சன் 1984 ஆம் ஆண்டு ஆகத்தில் இலங்கை வந்து இரண்டு கிழமைகள் தங்கியிருந்தார். இக்காலத்தில் தான் ஆய்வு செய்த பல கோட்டைகளுக்கும் சென்றார். எனினும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்ததால் வடபகுதிக் கோட்டைகளுக்கு அவரால் செல்ல முடியவில்லை[6].


ஓய்வு பெற்ற பின்னர், இலங்கையின் கோட்டைகள் தொடர்பான ஆய்வுகளை நிறைவு செய்தது மட்டுமன்றிப் பல இடங்களுக்கும் பயணம் செய்து பாதுகாப்புக்கான அமைப்புக்கள் தொடர்பில் மேலும் பல ஆய்வுகளையும் செய்து கட்டுரைகளை எழுதியுள்ளார். பெலின்சோனாவின் மத்தியகாலக் காப்பரண்கள், லாகோசின் காப்பரண்கள், இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோட்டைகள் என்பன இவரது ஆய்வுத் தலைப்புக்களில் சிலவாகும். இவை தவிரத் துருக்கியில் உள்ள கோட்டைகள் பற்றி ஆய்வுகள் செய்வதற்கும் திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால், இத் திட்டங்களை நிறைவேற்றுமுன்பே 1993 ஆகத்து மாதம் 23 ஆம் நாள் அபர்தீனில் நெல்சன் காலமானார். இவர் காலமான பின்னர் 1994ல் இவரது இரண்டாவ நூலான "மொம்பாசாவின் யேசுக் கோட்டை" என்னும் நூல் வெளியிடப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. அபர்டீன் கிராமர் பள்ளி சஞ்சிகையில் இருந்து, Nesson, W. A., 2004ல் மேற்கோள் காட்டியபடி
  2. Nesson, W. A., 2004, பக். 11j
  3. அபர்டீன் கிராமர் பள்ளி சஞ்சிகையில் இருந்து, Nesson, W. A., 2004ல் மேற்கோள் காட்டியபடி. பக். 11k
  4. Nesson, W. A., 2004, இற்றைப்படுத்தல் முன்னுரையில் ஆர். கே. டி சில்வா, பக். 11h.
  5. அபர்டீன் கிராமர் பள்ளி சஞ்சிகையில் இருந்து, Nesson, W. A., 2004ல் மேற்கோள் காட்டியபடி. பக். 11k.
  6. Nesson, W. A., 2004, இணைக்கப்பட்டுள்ள, கோட்டைகளின் 1984 ஆம் ஆண்டின் நிலை குறித்த நெல்சனின் அறிக்கை. பக். 11c.

உசாத்துணைகள் தொகு

  • Nelson, W. A, The Dutch Forts of Sri Lanka", Sri Lanka - Nederland Association, 2004 (updated by de Silva, R. K. D.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_அடைர்_நெல்சன்&oldid=748540" இலிருந்து மீள்விக்கப்பட்டது