விவிலிய இறை ஏவுதல்

விவிலிய இறை ஏவுதல் (biblical inspiration) என்பது கிறித்தவர்களின் திருநூலாகிய விவிலியம் கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற இறையியல் கொள்கை ஆகும்.

மத்தேயு நற்செய்தி ஆசிரியருக்கு வானதூதர் வழி இறை ஏவுதல் கிடைத்தல். ஓவியர்:ரெம்ப்ராண்ட் (1606-1669). ஓலாந்து.

இறை ஏவுதல் - சொற்பிறப்பு

தொகு

இறை ஏவுதல் என்னும் சொல்லமைப்பு இலத்தீன் மொழியில் அமைந்த inspiratio (ஆங்கிலம்: inspiration) என்பதிலிருந்து பிறப்பதாகும். இச்சொல்லுக்கு அடிப்படையாக அமைவது விவிலியத்தில் வருகின்ற ஒரு சொற்றொடர் ஆகும். அது திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் உள்ளது:

இந்த விவிலியக் கூற்றில் வருகின்ற "கடவுளின் தூண்டுதல்" என்பது கிரேக்க மூல பாடத்தில் theopneustos என்றும், இலத்தீனில் divinitus inspirata (ஆங்கிலம்: divinely inspired) என்றும் உள்ளது. விவிலியம் என்னும் திருநூல் தொகுப்பு கடவுளின் தூண்டுதலால் (இறை ஏவுதலால்) எழுதப்பட்டது என்பதை வெவ்வேறு திருச்சபைப் பிரிவுகள் வெவ்வேறு விதங்களில் புரிந்துகொண்டுள்ளன.

இறை ஏவுதல் பற்றிய விவிலியச் சான்றுகள்

தொகு

விவிலியத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் பல இடங்களில் கடவுளின் தூண்டுதலால் நூலாசிரியர் பேசுவது குறிக்கப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:

  • "ஆண்டவர் மோசேயை நோக்கி, 'இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை...' என்றார்" (விப 17:14).
  • "அப்போது இறையடியார் செமாயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு:..." (1 அர 12:22-24).
  • "அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:..." (1 குறி 17:3-4).
  • "இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:..." (எரே 35:13).
  • "கடவுள் எசேக்கியேலை நோக்கி, 'வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்...என்றார்" (எசே 2:4).
  • "படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:..." (செக் 7:9).

பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் என்னும் புதிய ஏற்பாட்டு நூல் இவ்வாறு கூறுகிறது:

பழைய ஏற்பாடு கடவுளிடமிருந்து வந்தது என்னும் உணர்வு புதிய ஏற்பாட்டிலும் உள்ளது. சான்றாக இயேசுவின் சாட்சியத்தைக் காட்டலாம்:

  • "இயேசு, 'கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள்' என்றார்" - யோவா 10:35.
  • இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்' என்றார்" - மத் 5:17.

விவிலியம் மறைநூல் என்னும் பெயர் பெறுதல்

தொகு

விவிலியத்தை மறைநூல் என அழைக்கும் பாணி விவிலியத்திலேயே உள்ளது. கிரேக்க மொழியில் γραφὴ (graphe) என்றும் இலத்தீனில் scriptura (ஆங்கிலம்: scripture) என்றும் அழைக்கப்படுவது சமயம் சார்ந்த எழுத்துத் தொகுப்பு என்னும் பொருள் கொண்டது. இதுவே தமிழில் மறைநூல் என்று வழங்கப்படுகிறது. மறைநூல் என்பது கடவுளின் வார்த்தை என்னும் பொருளில் விவிலியத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2 திமொ 3:16, உரோ 9:17; திப 1:16; கலா 3:8 முதலியவற்றைக் காண்க.

கடவுளின் குரல் திருநூலில் ஒலிக்கிறது என்னும் கருத்தும் பல இடங்களில் உள்ளது. காண்க: எபி 3:7, திபா 95:7; உரோ 15:9-12.

இறை ஏவுதல் பற்றிய யூத மரபுச் சான்றுகள்

தொகு

யூத மக்கள் விவிலியம் எனக் கொள்கின்ற பழைய ஏற்பாடு கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டது என்பது அவர்களது நம்பிக்கை. இதை மறுத்த யூதர்கள் நாத்திகர் என்று அழைக்கப்பட்டனர். கி.பி. முதல் நூற்றாண்டவரான் ஃபிளாவியுசு ஜொசிஃபஸ் என்னும் யூத அறிஞர் (கி.பி.37-95) இவ்வாறு கூறுகிறார்:

இறை ஏவுதல் பற்றிய கிறித்தவ மரபுச் சான்றுகள்

தொகு

தொடக்க காலக் கிறித்தவர்கள் விவிலியத்தை மிகவும் போற்றி அதற்கு மதிப்பும் மரியாதையும் அளித்தனர்.

  • விவிலியம் திருவழிபாட்டில் பயன்படுத்தப்பட்டது.
  • மறையுரை வாயிலாக விளக்கப்பட்டது.
  • தனி வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைந்தது.

தொடக்ககாலக் கிறித்தவ அறிஞர்கள் சிலர் விவிலியம் குறித்துக் கூறியவை இதோ:

  • "விவிலியம் இறைவனிடமிருந்து புறப்படுவதால் விவாதிக்கக் கூடாத, விவாதிக்க முடியாத உண்மைகளைக் கொண்டுள்ளது" - உரோமை நகர் தூய கிளமெந்து.
  • "விவிலியம் தூய ஆவியிடமிருந்து புறப்படுகிறது" - புனித யுஸ்தீன்.
  • விவிலியம் கடவுளால் ஏவப்பட்டது" - புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்
  • "விவிலியத்தின் ஆசிரியர் கடவுள்" - எருசலேம் நகர் புனித சிரில்.
  • "விவிலியம் கடவுளால் சொல்லப்பட்டது" - தூய எரோணிமுசு.

இறை ஏவுதலின் பண்புகள்

தொகு

கடவுளே விவிலியத்தின் "மூல ஆசிரியர்" என்பதன் பொருள் என்ன என்னும் கேள்விக்குப் பல பதில்கள் தரப்பட்டுள்ளன. அப்பதில்களுள் சில:

  • கடவுள் சொல்லச் சொல்ல விவிலிய நூல் ஆசிரியர் எழுதினார்.
  • கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் சுய உணர்வு மறந்து, மயக்க நிலையில் எழுதினார்கள்.
  • விவிலிய ஆசிரியர்கள் தவறான செய்திகளை எழுதுவதிலிருந்து கடவுள் காத்தார்.
  • விவிலியம் வானகத்திலிருந்து நேரடியாக மண்ணகம் வந்தது.
  • விவிலியம் முழுக்க முழுக்க மனிதப் படைப்பே; திருச்சபை அங்கீகரிப்பதால் மட்டுமே அது கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதப்படுகிறது.
  • விவிலியத்தை எடுத்து வாசிப்பவரின் உள்ளத்தில் கடவுளின் தூய ஆவி உள்ளுணர்வைத் தூண்டி எழுப்புவதே விவிலிய இறை ஏவுதல்.

மேற்கூறிய பதில்களில் ஓரளவு உண்மை உளது என்பதை மறுக்கமுடியாது. எனினும், விவிலிய இறை ஏவுதல் என்பது அடிப்படையில் "விவிலியம் மனித வார்த்தையில் வெளிப்படுகின்ற இறைவார்த்தை" என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. விவிலியத்தை எழுதியதில் கடவுளுக்கும் பங்கு உண்டு, மனித ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு.

இதைக் கீழ்வருமாறு விளக்கலாம்:

1) விவிலிய நூல்களை எழுதிய ஆசிரியர்கள் முழு அறிவுடனும், சுதந்திரத்துடனும் எழுதினார்கள். கடவுள் அவர்களுடைய அறிவையும் சுதந்திரத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் என்பது தவறான கருத்து.

2) இறைவெளிப்பாட்டின் மேன்மையான செய்தியைப் புரிந்துகொள்வதற்கு, மனித அறிவுக்குத் தேவையான ஒளியை இறை ஏவுதல் அளிக்கிறது; கடவுள் தாம் விரும்புவதை எழுதுவதற்கு மனிதரின் புலன்களுக்கு ஆற்றல் அளிக்கிறது.

3) இவ்வாறு விவிலியத்தின் ஆசிரியர் கடவுள் என்றும், அதே நேரத்தில் மனிதரே அதை எழுதினர் என்றும் கூறலாம்.

கிறித்தவ நம்பிக்கையில் விவிலிய இறை ஏவுதல்

தொகு

விவிலியம் கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டது என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். உண்மைக்கு ஊற்றான கடவுளிடமிருந்து விவிலியம் தோன்றியது. விவிலியம் வழியாகக் கடவுள் மனிதருக்குத் தம்மைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த உண்மையின் பண்பு என்ன?

கடவுள் வெளிப்படுத்தும் உண்மை "மீட்பு உண்மை" (salvific truth) என அழைக்கப்படுகிறது. அதாவது, மனிதர் கடவுளின் திருவுளத்துக்கு ஏற்ப இவ்வுலகில் வாழ்ந்திடவும், அவர்கள் தம் இறுதிக் கதியாகிய விண்ணகப் பேரின்பம் அடைந்திடவும் கடவுள் அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு, நிலைவாழ்வில் பங்கேற்கச் செய்கிறார் என்பதே "மீட்பு உண்மை". இது இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தப்பட்டதை விவிலியம் பதிவுசெய்துள்ளது. ஆக, விவிலியத்தில் அறநெறிப் போதனை அடங்கியுள்ளது; இறை வழிபாடு பற்றிய படிப்பினைகள் உள்ளன; கடவுள் மனிதரோடு எவ்வாறு உறவாடுகிறார் என்பது பற்றிய விளக்கம் உள்ளது. இதன் அடிப்படையில் திருச்சபையும் விவிலியம் கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டது என்று கற்பிக்கிறது.

எனவே, விவிலியத்தில் "மீட்பு வரலாறு" (salvation history) அடங்கியுள்ளது என கிறித்தவர்கள் நம்புகிறார்கள். உலகு பற்றியும், வரலாறு பற்றியும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கைகள் பற்றியும் துல்லியமான தகவல்களை வழங்குவது விவிலியத்தின் நோக்கம் அல்ல. இது பற்றி தூய அகுஸ்தீன் (கி.பி. 354-430) கூறுவது கருதத்தக்கது:

நவீன அறிவியல் விவிலியம் எழுதப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கவில்லை. மக்கள் பூமி தட்டையாக இருக்கிறது என்றும் கதிரவன் பூமியைச் சுற்றிவருகிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றன என்றும் நம்பினர். 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கொப்பேர்னிக்கசு (கி.பி. 1473-1543) மற்றும் கலிலேயோ கலிலேயி (கி.பி. 1564-1642) போன்ற அறிவியலார் பூமிதான் கதிரவனைச் சுற்றிவருகிறது என்று விளக்கினர். எனவே, விவிலியத்தில் அறிவியல் உண்மைகளைத் தேடுவது பொருத்தமற்றது.

விவிலியம் என்பது ஒரே நேரத்தில் இலக்கியமும் கடவுளின் செய்தியும் ஆகும்

தொகு

விவிலிய இறை ஏவுதல் எனும் இறையியல் கருத்து இரு உண்மைகளை வலியுறுத்துவதற்காக எழுந்தது. அவை:

  1. விவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் இலக்கியம் என்னும் அடிப்படையில் இலக்கிய ஆய்வுக்கும் மொழி ஆய்வுக்கும் உட்பட்டவை.
  2. விவிலியம் வெறுமனே ஓர் இலக்கியத் தொகுப்பு மட்டுமல்ல; அது கடவுள் மனிதருக்கு வழங்கிய மீட்புச் செய்தியையும் உள்ளடக்கி அமைந்த இலக்கியப் படைப்பாக உள்ளது.

எனவேதான், விவிலியம் "மனித மொழியில் அமைந்த இறைவாக்கு" என்று அழைக்கப்படுகிறது.

விவிலிய இறை ஏவுதல் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம்

தொகு

1962-1965இல் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் விவிலிய நூல்கள் இறை ஏவுதலால் எழுதப்பட்டன என்னும் உண்மையை "இறை வெளிப்பாடு" என்னும் ஏட்டில் கீழ்வருமாறு எடுத்துக் கூறுகிறது:

ஆதாரங்கள்

தொகு
  1. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - விவிலிய இறை ஏவுதல்
  2. அகுஸ்தீன் - விவிலியம் எழுதப்பட்டதன் நோக்கம்
  3. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தமிழ் மொழிபெயர்ப்பு, "இறை வெளிப்பாடு", எண் 11 (பதிப்பு: தேடல் வெளியீடு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2001).
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_இறை_ஏவுதல்&oldid=4040961" இலிருந்து மீள்விக்கப்பட்டது