விவிலிய சிலுவைப் பாதை (Scriptural Way of the Cross) என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும். இது மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும்[1].
சிலுவையைச் சுமந்துசென்ற இயேசுவின் அடியொற்றி நடந்துசென்று, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, தியானிப்பதைப் பதினான்கு நிலைகளில் செய்வது மரபு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவகப்படுத்தும். அக்காட்சியில் வருகின்ற ஆள்கள் இடங்கள் நிகழ்வுகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு, உணர்வில் ஏற்று, இயேசுவோடு மக்கள் தம்மை ஒன்றுபடுத்துவர். அந்நிலைகள் பின்வருமாறு:
இயேசுவின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு மரியாவின் மடியில் வளர்த்தப்படுதல்
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுதல்
மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு பதினைந்தாம் நிலையாக "இயேசு கல்லறையினின்று உயிர்பெற்றெழுதல்" என்பதையும் இணைப்பது இன்றைய வழக்கம் ஆகும்.
மேலே தரப்பட்ட 14 நிலைகளுள் எட்டு நிலைகளுக்கு மட்டுமே உறுதியான விவிலிய அடிப்படை உள்ளது. அவை: நிலைகள் 1, 2, 5, 8, 10, 11, 12, 14 ஆகியவையாம். எஞ்சிய ஆறு நிலைகளுள் "வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைத்தல்" என்னும் 6ஆம் நிலை நற்செய்தி நூல்களில் இல்லை. நடுக்கால சிலுவைப் பாதைகளில்தான் அது காணப்படுகிறது.
இயேசு மும்முறை கீழே விழுந்தார் என்பதற்கும் நற்செய்தியில் தகவல் இல்லை (நிலைகள் 3, 6, 9). சிலுவை சுமந்து சென்றபோது இயேசு தம் அன்னை மரியாவைச் சந்தித்தார் (நிலை 4) என்னும் தகவலும் நற்செய்தியில் காணப்படவில்லை. இறுதியாக, "இயேசுவின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு மரியாவின் மடியில் வளர்த்தப்பட்டது" என்னும் செய்தியையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிடவில்லை. மாறாக, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவைக் கல்லறையில் அடக்கிய செய்தி உள்ளது.
இதனால், மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையில் கற்பனை நிகழ்வுகள் புகுத்தப்பட்டன எனப் பொருளாகாது என்றும், பொதுமக்களின் பக்தி முயற்சியாக வளர்ந்த சிலுவைப் பாதையில், இயேசு சிலுவை சுமந்து சென்றபோது என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணி உள்ளத்தில் சிந்தித்து இறைவேண்டல் செய்திட வெவ்வேறு நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டன என்றும் அறிஞர் கூறுகின்றனர்.
இயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்த நிகழ்வோடு தொடர்புடைய தகவல்கள் வெளிப்படையாக நற்செய்தி நூல்களில் உள்ளனவா என்று ஆய்ந்து அவற்றை மட்டுமே சிலுவைப் பாதையின் நிலைகளாகக் கருதுவது நல்லது என்னும் எண்ணத்தில் பலர் "விவிலிய சிலுவைப் பாதை" உருவாக்கலாயினர். இத்தகைய விவிலிய சிலுவைப் பாதை ஒன்றினைக் காலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) உருவாக்கினார். அதை 1991ஆம் ஆண்டு பெரிய வெள்ளியன்று அவரே முன்னின்று உரோமை கொலொசேயத்தில் பயன்படுத்தி வழிபாடு நடத்தினார்.
அந்த விவிலிய சிலுவைப் பாதையை எல்லாக் கிறித்தவ மக்களும் பொது வழிபாட்டின்போது பயன்படுத்துவது நலம் என்று கூறி, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இசைவு வழங்கினார்.
இவ்வாறு திருத்தந்தையரின் ஆதரவையும் இசைவையும் பெற்ற, விவிலிய அடிப்படையிலான சிலுவைப் பாதையின் 14 நிலைகள் கீழ்வருவன:[2]
இயேசு கெத்சமனி தோட்டத்தில் இறைவேண்டல் செய்தல்
இயேசு யூதாசினால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதுசெய்யப்படுதல்
இயேசு யூதர்களின் தலைமைச் சங்கத்தால் கண்டனம் செய்யப்படுதல்
இயேசுவைப் பேதுரு மறுதலித்தல்
இயேசுவைப் பிலாத்து சாவுக்குத் தீர்ப்பிடுதல்
இயேசு கசைகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள்முடி சூட்டப்படுதல்
இயேசு சிலுவையைச் சுமந்து செல்லுதல்
இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவிசெய்தல்
இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்தல்
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
இயேசுவோடு தொங்கிய மனம் மாறிய குற்றவாளிக்கு அவர் பேரின்ப வீட்டை வாக்களித்தல்
இயேசு மரியாவையும் யோவானையும் ஒருவரொருவரிடம் ஒப்படைத்தல்
இயேசு சிலுவையில் இறத்தல்
இயேசு கல்லறையில் அடக்கப்படுதல்
இந்த 14 நிலைகளோடு "இயேசு கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுதல்" என்பதையும் பலர் சேர்த்துக் கொள்வார்கள். இவ்வாறு விவிலிய அடிப்படையிலான நிகழ்வுகளை இயேசுவின் துன்பங்கள், சாவு, ஆகிவற்றோடு தொடர்புபடுத்தி, இயேசு வழங்குகின்ற புது வாழ்வில் பங்குபெற கிறித்தவ மக்கள் சிலுவைப் பாதை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.
மேலே தரப்பட்டுள்ள 14 நிலைகளுக்கும் அடிப்படையான விவிலிய பாடங்கள் கீழே தரப்படுகின்றன. ஒவ்வொரு நிலையைத் தொடங்கும் போதும் வழக்கம்போல, "இயேசுவே, நாங்கள் உம்மை வழிபட்டு வாழ்த்துகின்றோம்" என்று நடத்துநர் கூறுவார். அதற்கு மக்கள் எல்லாரும், "ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டுக் காப்பாற்றினீர்" என்று பதில் கூறுவார்கள். அதன் பின் விவிலிய பாடம் வாசிக்கப்படும். எல்லாரும் அப்பாடத்தின் அடிப்படையில் தியானம் செய்வார்கள்.
முதல் நிலை: இயேசு கெத்சமனி தோட்டத்தில் இறைவேண்டல் செய்தல்
பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்" என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார் (மத்தேயு 26:36-41).
”
இரண்டாம் நிலை: இயேசு யூதாசினால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதுசெய்யப்படுதல்
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்" என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, "ரபி" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர் (மாற்கு 14:43-46).
”
மூன்றாம் நிலை: இயேசு யூதர்களின் தலைமைச் சங்கத்தால் கண்டனம் செய்யப்படுதல்
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். அவர்கள், "நீ மெசியா தானா? எங்களிடம் சொல்" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், "அப்படியானால் நீ இறைமகனா?" என்று கேட்டனர். அவரோ, "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார். அதற்கு அவர்கள், "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே" என்றார்கள் (லூக்கா 22:66-71).
பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்றார். அவரோ, "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு, "இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்" என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, "உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது" என்று கூறினார்கள். அப்பொழுது அவர், "இந்த மனிதனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார் (மத்தேயு 26:69-75).
”
ஐந்தாம் நிலை: இயேசுவைப் பிலாத்து சாவுக்குத் தீர்ப்பிடுதல்
பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, "நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!" என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்...ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான் (மாற்கு 15:1-5, 15).
”
ஆறாம் நிலை: இயேசு கசைகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள்முடி சூட்டப்படுதல்
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள் (யோவான் 19:1-3).
அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்றான். அவர்கள், "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?" என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை" என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர் (யோவான் 19:6, 15-17).
”
எட்டாம் நிலை: இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவிசெய்தல்
அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள் (மாற்கு 15:21).
”
ஒன்பதாம் நிலை: இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்தல்
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது 'மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் 'பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார் (லூக்கா 23:27-31).
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள் (லூக்கா 23:33-34).
”
பதினொன்றாம் நிலை: இயேசுவோடு தொங்கிய மனம் மாறிய குற்றவாளிக்கு அவர் பேரின்ப வீட்டை வாக்களித்தல்
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார் (லூக்கா 23:39-43).
”
பன்னிரண்டாம் நிலை: இயேசு மரியாவையும் யோவானையும் ஒருவரொருவரிடம் ஒப்படைத்தல்
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார் (யோவான் 19:25-27).
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார் (லூக்கா 23:44-46).
மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். (மத்தேயு 27:57-60).