புனித வெள்ளி

கிறித்தவ மத விடுமுறை, ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளி
(பெரிய வெள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

புனித வெள்ளி
இயேசு சிலுவையில் அறையுண்டு இறத்தல். ஆண்டு: 1868
அதிகாரப்பூர்வ பெயர்ஆண்டவருடைய திருப்பாடுகளின் பெரிய வெள்ளி
வகைகிறித்தவம், பொது விடுமுறை நாள்
முக்கியத்துவம்இயேசு கிறிஸ்துவின் இறப்பை நினைவுகூரல்
கொண்டாட்டங்கள்திருப்பலி முதலிய எவ்வகை கொண்டாட்டங்களும் இருக்காது
அனுசரிப்புகள்நோன்பு, ஈகை, இறைவேண்டல்
நாள்உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வெள்ளி
2023 இல் நாள்ஏப்பிரல் 7 (மேற்கு)
ஏப்பிரல் 14 (கிழக்கு)
2024 இல் நாள்மார்ச்சு 29 (மேற்கு)
மே 3 (கிழக்கு)
2025 இல் நாள்ஏப்பிரல் 18 (மேற்கு)
ஏப்பிரல் 18 (கிழக்கு)
2026 இல் நாள்ஏப்பிரல் 3 (மேற்கு)
ஏப்பிரல் 10 (கிழக்கு)

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.[1]

இயேசு இறந்த ஆண்டு

தொகு

இயேசு கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். சிலர் இயேசுவின் சாவு கி.பி. 34ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

விவிலிய ஆதாரங்கள்

தொகு

இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை நற்செய்தி நூல்கள் ஆகும். கீழ்வரும் பகுதிகளைக் காண்க:

விவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்

தொகு

நற்செய்திச் சான்றுப்படி, எருசலேம் கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட இயேசுவை முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.

இயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.

அப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்" என்று பதிலுரைக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் "இவன் சாக வேண்டியவன்" என்று கூறினர்.

இதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த பேதுரு கூட "இயேசுவை அறியேன்" என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான இயேசுவை மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.

அதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.

பின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், "சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்தினார்கள்.

இயேசுவை விடுதலை செய்தால் பெரிய கலவரம் நிகழும் என்றும் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து, "இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கூறித் தன் கைகளைக் கழுவினார்.

படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தார்கள். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மீது வைத்து, அவரது வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாட்படியிட்டு, "யூதரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். இவ்வாறு ஏளனம் செய்த பிறகு, அவருடைய பழைய ஆடைகளை அவருக்கு மீண்டும் உடுத்தி, அவருடைய தோள்மீது சிலுவையைச் சுமத்தினார்கள். இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" (கல்வாரி - Calvary = the place of the skull) என்னும் இலக்கு நோக்கி நடந்தார்.

சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவினார். பெருந்திரளான மக்கள் இயேசுவுக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்" என்றார்.

"மண்டை ஓடு" எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் ஏற்றினார்கள்.

இதுவே நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் பற்றியும் அவர் சிலுவையைச் சுமந்து சென்று, ஒரு குன்றின்மேல் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.

சிலுவையில் தொங்கிய இயேசு

தொகு

இயேசு சிலுவையில் தொங்கியபோது, மிகுந்த வேதனைக்கு நடுவிலும் சில சொற்களைக் கூறினார். அவற்றை நான்கு நற்செய்தியாளரும் சிறிது வேறுபட்ட விதத்தில் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்பு வருமாறு:

  • மாற்கு 15:33-34
  • லூக்கா 23:32-34
  • லூக்கா 23:39-43
  • லூக்கா 23:44-48
  • யோவான் 19:25-27
  • யோவான் 19:28-29
  • யோவான் 19:30

இயேசுவின் துன்பங்களையும் சாவையும் திருச்சபை நினைவுகூர்தல்

தொகு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது:

மிகப் பழைமையான வழக்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்:

1) இறைவாக்கு வழிபாடு

தொகு

பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இவ்வாசகங்கள் கீழ்வருமாறு:

விவிலியம் இயேசு அனுபவித்த துன்பங்களையும் சாவையும் முன்னறிவித்தது எசாயா நூலில் உள்ளது. இயேசுவின் வாழ்க்கையின் இறுதியில் நடந்த நிகழ்ச்சிகளை வரலாறு போல எடுத்துரைக்கின்ற உரைக்கூற்று யோவான் நற்செய்தியில் உள்ளது. எபிரேயர் நூல்) இயேசு அனுபவித்த துன்பத்தின் பொருள் என்னவென்று விளக்குகிறது.

இந்த வாசகங்கள் முடிந்ததும் கீழ்வரும் பொது மன்றாட்டுகள் மக்கள் பெயரால் எழுப்பப்படும்:

  • திருச்சபைக்காக
  • திருத்தந்தைக்காக
  • திருநிலையோர் மற்றும் பொதுநிலையோருக்காக
  • திருமுழுக்குப் பெற தங்களைத் தயாரிப்போருக்காக
  • கிறித்தவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதற்காக
  • யூத மக்களுக்காக
  • இயேசுவை ஏற்காதோருக்காக
  • கடவுளை ஏற்காதோருக்காக
  • பொதுப்பணி புரிவோருக்காக
  • சிறப்புத் தேவையுடையோருக்காக

2) சிலுவைக்கு வணக்கம் செலுத்துதல்

தொகு

இயேசு உயிர்துறந்த சிலுவை கிறித்தவர்களுக்குத் தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும். எனவே, பெரிய வெள்ளிக் கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். எரியும் மெழுகுவத்திகள் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்படும். குருவும் மக்களும் சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம். அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.

3) நற்கருணை விருந்து

தொகு

இயேசு சிலுவையில் உயிர்துறந்து மக்களுக்கு விண்ணக வாயிலைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அவர் இறந்த நிகழ்ச்சியைத் திருப்பலியாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பெரிய வெள்ளிக்கிழமையன்று தனியாகத் திருப்பலி நிகழ்வதில்லை. ஏனென்றால் இயேசுவே இப்பலியைக் கல்வாரி மலைமேல் ஒப்புக்கொடுத்தார். தம்மையே மனிதரின் மீட்புக்காகக் கையளித்தார். இவ்வாறு தம்மை அன்புக் காணிக்கையாகக் கொடுத்த இயேசுவோடு அன்புறவு கொள்ளும் விதத்தில் கிறித்தவர்கள் இயேசுவின் உடலை அப்ப வடிவில் அடையாளமாக உண்பார்கள்.

பின்னர் அனைவரும் அமைதியாகப் பிரிந்து செல்வார்கள்.

பெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வு

தொகு
 
புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர், மேதகு மிக்கேல் அகுஸ்தீன் ஆண்டகை புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை செய்யும் காட்சி

பெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற இன்னொரு முக்கிய நிகழ்ச்சி சிலுவைப் பாதை ஆகும். இது அதிகாரப்பூர்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டம் ஆகும். தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. ஏனென்றால் இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, தாங்கள் கடவுளுக்கும் பிறருக்கும் எதிராக நடப்பதே இயேசு துன்புற்றுச் சாவதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக சிலுவைப் பாதை அமைகின்றது.

உரோமையில் திருத்தந்தை நிகழ்த்தும் சிலுவைப் பாதை தொலைக்காட்சி வழியாக உலக மக்கள் அனைவரையும் சென்றடைகிறது. முன்னாளைய திருத்தந்தையர்களாகிய ஆறாம் பவுல் (சின்னப்பர்), மற்றும் இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) ஆகியோர் தாமாகவே சிலுவையைச் சுமந்துகொண்டு, உரோமையில் அமைந்துள்ள முன்னாளைய கேளிக்கை அரங்கமாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் களமாக மாறிய கொலொசேயம் என்னும் இடத்தில் சிலுவைப் பாதை ஆண்டுதோறும் நிகழ்த்துவது வழக்கம். அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் அங்கு சிலுவைப் பாதை நிகழ்த்தியுள்ளார். 2011ஆம் ஆண்டிலும் பெரிய வெள்ளியன்று (ஏப்ரல் 22) சிலுவைப் பாதையை நிகழ்த்தினார்[2].

2012ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் பெரிய வெள்ளி ஆகும்.

2013 பெரிய வெள்ளி கொண்டாட்டம்

தொகு

2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு பெரிய வெள்ளிக் கொண்டாட்டத்தை 2013 மார்ச்சு 29ஆம் நாள் பிற்பகலில் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தினார். மாலை வேளையில் உரோமையின் பண்டைய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகிய கொலொசேயம் என்னும் வட்டவடிவ அரங்கில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டபோதிலும் தம் பகைவரை மன்னித்தது போன்று இன்றைய உலகிலும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.[3][4]

2014 பெரிய வெள்ளி கொண்டாட்டம்

தொகு

2014 ஏப்ரல் 18ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரின் 2000 ஆண்டு வரலாறு மிக்க வட்டவடிவ அரங்கமான கொலொசேயம் என்னும் இடத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இது திருத்தந்தை பிரான்சிசு கொலொசேயத்தில் இரண்டாம் ஆண்டாகத் தலைமை தாங்குகின்ற சிலுவைப் பாதை ஆகும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்நீத்த நிகழ்ச்சியை சிலுவைப் பாதை நினைவுகூர்கின்றது. வத்திக்கானின் மறையுரையாளரான தந்தை ரனியேரோ காந்தலமேசா என்பவர் மறையுரை வழங்கினார். பேராசையும் பொருளாசையும் உலகில் பல தீமைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அவர் கூறினார். மேலும், மனிதர்கள் பிற மனிதர்களை விற்பனைப் பொருள் போல நடத்தும் இழிவைச் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழலை மாசுறச் செய்வது மனித இனத்திற்குப் பெரும் தீங்கு விளைப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதையின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் "எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களை நாம் கைவிடலாகாது." என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், "தீமை ஒருபோதும் வெற்றியடையாது. அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே இறுதியில் வெற்றிபெறும்" என்றுரைத்தார்.

சிலுவைப் பாதையின் 14 நிலைகளில் தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. உலகத்தின் பலபகுதிகளில் சிறுவர்கள் போர்ச்செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வறுமை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பெயர்ந்து செல்ல முனைவோர் பலர் சாவுக்கு உள்ளாகின்றனர். சிறைக்கூடங்களில் கைதிகள் இடவசதியோ பிற வசதிகளோ இன்றி அவதிப்படுகிறார்கள். முதியோர் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பலவிதமான அநீதிகளும் தீங்குகளும் இன்றைய உலகில் இன்னும் நீடிக்கின்றன. அவற்றை அகற்றிட இயேசுவின் சிலுவைச் சாவு மனிதருக்கு ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும் என்ற சிந்தனை சிலுவைப் பாதை வழிபாட்டின்போது வழங்கப்பட்டது.[5]

மேலும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. https://tamil.oneindia.com/news/tamilnadu/mass-prayers-held-across-nation-mark-good-friday-224012.html
  2. பதினாறாம் பெனடிக்ட் நிகழ்த்தும் சிலுவைப் பாதை
  3. உரோமையில் சிலுவைப் பாதை
  4. "திருத்தந்தை பிரான்சிசு தலைமை தாங்கிய சிலுவைப் பாதை". Archived from the original on 2018-03-06. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
  5. 2014ஆம் ஆண்டு பெரிய வெள்ளி - திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதை நிகழ்த்துதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_வெள்ளி&oldid=4041114" இலிருந்து மீள்விக்கப்பட்டது