வீட்டு வடிவமும் பண்பாடும் (நூல்)

வீட்டு வடிவமும் பண்பாடும் (House Form and Culture) என்பது கட்டிடக்கலைஞரும், கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியருமான அமாசு ராப்பப்போர்ட் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல் ஆகும். பிரென்டிசு-ஆல் பண்பாட்டுப் புவியியல் தொடரின் ஒரு பகுதியாக இந்நூல் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. உலகெங்கிலும் வாழும் பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்தில் இருக்கும் வீடுகளின் வடிவங்களைப் பண்பாட்டுக் காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதை இந்நூல் நிறுவமுயல்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் அறுபதுகளில், உலகம் முழுவதிலும் உள்ள சாதாரண மக்களுடைய கட்டிடங்களைக் கட்டிடக்கலையின் ஆய்வுப் பரப்புக்குள் கொண்டு வருவதில் இந்நூலின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.


நோக்கம்

தொகு

பல ஆண்டுகள் ஒரு சூழல் வடிவமைப்பாளரின் நோக்கில், தொடக்கநிலை மற்றும் நாட்டார் கட்டிடங்கள், குடியிருப்புக்கள் என்பவை தொடர்பில் செய்த ஆய்வுகளின் விளைவே இந்நூல் என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இத்தகைய கட்டிடங்களை உருவாக்கும் காரணிகள் அவற்றுக்குத் தெளிவானவையும், அடையாளம் காணத்தக்கவையுமான இயல்புகளை அளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அவற்றிலிருந்து தற்காலத்துக்குத் தேவையான பாடங்களைப் பெற்றுக்கொள்வதே ஆசிரியரது நோக்கமாகக் காட்டப்படுகிறது[1].


உள்ளடக்கம்

தொகு

வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை என்னும் கேள்விக்கு விடையாகப் பல்வேறு காரணிகளை முன்வைத்துக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. தட்பவெப்ப நிலையும் அதன் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையுமே வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிக்கிறது என்பது ஒரு கொள்கை. கட்டிடப் பொருட்கள், கட்டுமானமுறை, தொழில்நுட்பம் என்பனவே இக் காரணிகள் என்பது இன்னொரு கருத்து. கட்டிடக்களம், பாதுகாப்புத் தேவைகள், பொருளாதாரம், சமயம், என்பவற்றையும் இத்தகைய காரணிகளாக முதன்மைப்படுத்திய கோட்பாடுகள் உள்ளன. இக் காரணிகள் வீட்டு வடிவத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் ராப்பப்போர்ட், முதன்மைக் காரணியாக விளங்குவது பண்பாடே என்கிறார். உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல சமுதாயங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி எடுத்துக் கொண்ட பொருளை விளக்குகிறது இந்த நூல்.


குறிப்புக்கள்

தொகு
  1. Rapoport, Amos., 1969, பக். vii

உசாத்துணைகள்

தொகு
  • Rapoport, Amos., House Form and Culture, Prentice-Hall Cultural Geography Series, New Jersey, 1969.