வூல்ஸ்தோர்ப் மனோர்
இங்கிலாந்து, லிங்கன்ஷயர் என்னுமிடத்திலுள்ள வூல்ஸ்தோர்ப் மனோர் (Woolsthorpe Manor), சர். ஐசாக் நியூட்டன் பிறந்தவீடாகும். இவர் 1642, டிசம்பர் 25ல் (பழைய காலக்கணிப்பு) இங்கே பிறந்தார். அக்காலத்தில் இது செம்மறி ஆடுகளை வளர்க்கும் ஒரு பண்ணையாக இருந்தது. இதன் காரணமாகவே "வூல்" (கம்பளி) என்ற சொல் இப் பெயரில் உள்ளது. "தோர்ப்" என்பது டேனிஷ் மொழியில் பண்ணையைக் குறிக்கும்.
கொள்ளை நோய் (plague) காரணமாக கேம்பிரிச் பல்கலைக்கழகம் மூடப்பட்டபோது, நியூட்டன் இங்கே வந்தார். ஒளி மற்றும் ஒளியியல் சம்பந்தமான சோதனைகள் உட்படப் பல புகழ் பெற்ற இவரது சோதனைகளுக்குக் களமாக அமைந்தது இவ்விடமே.[1]
17 ஆம் நூற்றாண்டில் சில வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பாக (hamlet) இருந்த வூல்ஸ்தோர்ப், இன்று பல நூறு வீடுகளைக் கொண்ட ஒரு சிறு ஊராக வளர்ந்துள்ளது. வூல்ஸ்தோர்ப் மனோர் அமைந்திருந்த நிலத்தின் பெரும்பகுதி, அண்மையிலிருந்த ஒரு குடும்பத்தினருக்கு விற்கப்பட்டது. இதற்கு அருகிலிருந்த வெற்று நிலங்கள் பலவற்றிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆயினும், வூல்ஸ்தோர்ப் மனோர் இன்றும் ஊரின் எல்லையை அண்டி, வயல்கள் சூழ அமைந்துள்ளதைக் காணலாம்.
தேசிய நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பிலுள்ள இக் கட்டிடம், வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்படுகின்றது.
வூல்ஸ்தோர்ப் மனோர், இலண்டனிலிருந்து ஏறத்தாழ 100 மைல்கள் தொலைவிலுள்ளது. இங்கிருந்து வடக்காகப் பத்து மைல் தொலைவிலுள்ள, கிரந்தாம் (Grantham) புகைவண்டி நிலையத்திலிருந்து, மோட்டார் வண்டியில் இவ்விடத்திற்குச் செல்லமுடியும். வூல்ஸ்தோர்ப் என்னும் பெயரில் லிங்கன்ஷயரில் இன்னொரு ஊரும் உள்ளது. இது "பீவர் அருகிலுள்ள வூல்ஸ்தோப்" எனவும், வூல்ஸ்தோர்ப் மனோர் அமைந்துள்ள இடம், "கோல்ஸ்வர்த் அருகிலான வூல்ஸ்தோர்ப்" எனவும் குறிப்பிடப் படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Woolsthorpe Manor - Year of Wonders 1665-1667". National Trust. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.