வெங்கடேசுவரர் கோவில், பிட்சுபர்க், பென்சில்வேனியா

வெங்கடேஸ்வரர் கோவில், பிட்சுபர்க் என்பது ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், அலெகெனி கவுண்டி (Allegheny County), பிட்சுபர்க் நகரத்தின், கிழக்குப் புறநகர் பகுதியான பென் ஹில்சில் அமைந்துள்ள இந்துக் கோவிலாகும். இது ஐக்கிய அமெரிக்காவில் கட்டப்பட்ட பழமையான, மரபார்ந்த இந்து கோவில்களில் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவில், வெங்கடேசுவரரை மூலவராகக் கொண்டு கட்டப்பட்ட முதல் இந்துக் கோவிலும் இதுவே ஆகும்.[1]

சிறீ வெங்கடேசுவரர் கோவில்
வெங்கடேசுவரர் கோவில், பிட்சுபர்க், பென்சில்வேனியா is located in Pennsylvania
வெங்கடேசுவரர் கோவில், பிட்சுபர்க், பென்சில்வேனியா
Location in Pennsylvania
அமைவிடம்
நாடு:ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்:பென்சில்வேனியா
அமைவு:பென் ஹில்ஸ்
ஆள்கூறுகள்:40°26′28″N 79°48′19″W / 40.441001°N 79.805182°W / 40.441001; -79.805182
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ஆந்திரப் பிரதேசம் அறக்கட்டளைத் துறை.
இணையதளம்:www.svtemple.org#/

அமைவிடம் தொகு

இக்கோவில் ஐக்கிய அமெரிக்காவின் அலெகெனி கவுண்டி (Allegheny County), பிட்சுபர்க் நகரம், கிழக்குப் புறநகர் பகுதியான பென் ஹில்சில் அமைந்துள்ளது.[2] இக்கோவில் பிட்சுபர்க் கிழக்கிலிருந்து நியூ யார்க் வரை செல்லும் வில்லியம் பென் நெடுஞ்சாலையை ஒட்டி, தெற்கு மெக்கல்லி டிரைவ்வில் (South McCully Drive) அமைந்துள்ளது.[3][4] பென் ஹில்சு நகரியம், பிட்சுபர்க் நகரின் புறநகர்ப் பகுதியாகும். பென் ஹில்ஸ் அலெகெனி கவுண்டியின் இரண்டாவது பெரிய நகராட்சியாகும்.[5] மலைப்பாங்கான இப்பகுதி மிகவும் பசுமையாக உள்ளது. இக்கோவிலின் புவியமைவிடம் 40.441001°N அட்சரேகை 79.805182°W தீர்க்க ரேகை ஆகும். இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 938 அடி (286 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு தொகு

இக்கோவில் ஐந்து நிலை இராஜகோபுரம் தூய வெண்மை வண்ணத்தில் காட்சி தருகிறது. கோவிலைச் சுற்றிலும் மதிற்சுவர் எழுப்பியுள்ளார்கள். மதிற்சுவரை ஒட்டி வெளிப்பிரகாரமும் (தார்ச்சாலையும்) கார் நிறுத்துமிடமும் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தில் தங்கத் தேரோட்டம் (Golden Car Procession) நடைபெறுகிறது. கோவிலுனுள் நுழைந்ததும் வரவேற்பறையையும், கோவில் அலுவலகங்களையும் காணலாம். வரவேற்பறையில் கோவில் பிரசாதம், ஆலய நூல்கள் மற்றும் வெளியீடுகள் விலைக்குக் கிடைக்கின்றன. இங்கிருந்து முதல் தளத்திற்குச் செல்லும் படிக்கட்டில் ஏறிச்சென்றால் அங்குள்ள உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கோவில் வாகனங்களைக் காணலாம். இதனை ஒட்டி கருவறைக்கு முன்னர் கொடிமரமும் பலிபீடமும் அமைந்துள்ளன. மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் கணபதி சன்னதி அமைந்துள்ளது. கணபதி சன்னதியிலிருந்து படியேறிச் சென்றால் மகாமண்டபத்தை அடையலாம்.[6]

மகாமண்டபச் சுவர்களும், ஒப்பனை உட்கூரையும் (False ceiling) சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. அறை வெப்பநிலையைப் பராமரிக்க சூடாக்கி (Heater) வைத்துள்ளார்கள். நடைபாதை முழுக்க கம்பளம் விரித்துள்ளார்கள். மகாமண்டபத்தின் மேற்குச் சுவரையொட்டி மூன்று கருவறைகளும், அர்த்தமண்டபங்களும் கிழக்குப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள மூலவர் கருவறையில் ஸ்ரீ வெங்கடேசுவர பெருமாள் நின்ற நிலையில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கரம் வரத முத்திரையையும், இடது கரம் கட்யவிளம்பித முத்திரையையும் காட்டுகின்றன. மூலவர் சன்னதிக்கு எதிரே கருடன், பெருமாளை வணங்கிய நிலையில், தனி சன்னதி கொண்டுள்ளார். இதன் அருகிலேயே அனுமன் சன்னதியும் அமைந்துள்ளது. வெங்கடேசுவர பெருமாள் சன்னதியின் வலதுபுறம் இலக்குமி (பத்மாவதித் தாயார்) கருவறை அமைந்துள்ளது. இடது புறம் ஆண்டாள் கருவறை அமைந்துள்ளது. ஆலயத்தின் முதல் திருச்சுற்று விசாலமாக அமைந்துள்ளது. முதல் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் உற்சவரையும் வடமேற்கு மூலையில் சத்தியநாராயணர் படத்துடன் கூடிய பீடத்தையும் காணலாம்.[7]

தெய்வ சன்னதிகள் தொகு

இக்கோவிலில் கணபதி, இலக்குமி, ஆண்டாள், அனுமன், சக்கரத்தாழ்வார் மற்றும் கருடன் ஆகிய துணை தெய்வங்களுக்கு தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[7]

கோவில் முகவரி - திறந்திருக்கும் நேரங்கள் தொகு

  • முகவரி: 1230 மெக்கல்லி டிரைவ், பிட்ஸ்பர்க் PA 15235. தொலைபேசி (412) 373-3380. மின்னஞ்சல்: srivaru@svtemple.org [7]
  • திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9:00 முதல் இரவு 8:30 மணி வரை.
  • வெள்ளிக்கிழமை காலை 9:00 முதல் இரவு 9:30 மணி வரை
  • சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 8:00 முதல் இரவு 8:30 வரை.[7]

பஞ்சராத்ர ஆகமம் தொகு

பிட்ஸ்பர்க்கில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில், 108 சம்ஹிதைகள் (தொகுப்பு) கொண்ட பஞ்சராத்ர ஆகமம் எனப்படும் வைணவ கோவில் ஆகம முறையைப் பின்பற்றுகிறது. பஞ்சராத்ர ஆகமம் திருவுருவச் சிலைகள் மற்றும் கோவில் கட்டமைப்பு, வழிபாட்டு முறைகளையும், அவற்றின் சிறப்புகளையும் விவரிக்கிறது.[1]

கோவில் பூசாரிகள் தொகு

இக்கோவிலில் அன்றாடம் மற்றும் வாரநாட்களில் நடைபெறும் அர்ச்சனை, திருமுழுக்காட்டு, வேதபாராயணம் போன்ற சடங்குகளை பக்தாசாரியர்கள் அல்லது பட்டாச்சாரியர்கள் அல்லது பட்டர் என்று அழைக்கப்படும் வைணவப் பூசாரிகளே நடத்துகிறார்கள். இவர்கள் வைணவ பூசாரிகள் குலத்தவர்கள் ஆவர்: சிறுவயதிலேயே வேதபாடசாலைகளில், குருகுலவாசமாகத் தங்கியிருந்து, பஞ்சராத்ர ஆகமம் பயின்றவர்கள். இக்கோவிலில் குடமுழுக்கு போன்ற விழாக்களை நடத்த கூடுதலாக பட்டர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள்.[1]

கோவில் பூசைகள் தொகு

தினசரி பூசைகள் தொகு

கோவிலில் உள்ள தெய்வங்களுக்கான தினசரி வழிப்பாட்டு சடங்குகள் நாள்தோறும் அர்ச்சகர்களால் நடத்தப்படுகின்றன. வெங்கடேசுவரர், இலக்குமி, ஆகிய தெய்வங்களுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆண்டாள், அனுமன், கணபதி ஆகிய துணை தெய்வங்களுக்கு அர்ச்சனையும் நடைபெறுகிறது. ஏகாந்தசேவை மூலவருக்கு நடைபெறுகிறது. சீனிவாச கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.[8]

வார பூசைகள் தொகு

வாரம் முழுவதும் பல்வேறு பூசைகள் நடைபெறுகின்றன. வெங்கடேசுவரருக்கான முழுக்காட்டு, ஸ்ரீவாரு தோமால சேவை, ஶ்ரீவாரு அட்ட தள பாத பத்மராதன சேவை, வெங்கடேசுவரருக்கு தங்க மலர் அர்ச்சனை, ஆகிய சேவைகள் சனிக்கிழமைகளிலும், சத்தியநாராயண விரதம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறுகின்றன.[8]

மாத பூசைகள் தொகு

சக்கரத்தாழ்வாருக்கு அர்ச்சனையும், கணபதி, பத்மாவதி, ஆண்டாள், அனுமன், சக்கரத்தாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு திருமுழுக்காட்டும், அனுமனுக்கு வடைமாலை சாற்றுதலும் மாதந்தோறும் நடைபெறுகின்றன.[8]

ஆண்டு விழாக்கள் தொகு

ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது [8]

இல்லத்து விழாக்கள் தொகு

ஓமம், புதுமனைபுகு விழா, சீமந்தம், சிரார்த்தம், புண்ணியவசணம், உபநயனம், நிச்சயதார்த்தம், திருமணம், அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, என்பதாம் ஆண்டு நிறைவு விழா, ஆகிய விழாக்களை கோவில் புரோகிதர்கள் மெய்யன்பர்களின் இல்லத்திற்கே சென்று நடத்தித் தருகிறார்கள்.[9]

வரலாறு தொகு

  • பிட்சுபர்க் இந்து கோவில் சங்கம், பிட்சுபர்க், பிஏ ( The Hindu Temple Society of Pittsburgh, Pittsburgh, PA) என்ற அமைப்பு மார்ச் 1973 ஆம் தேதி நிறுவப்பட்டது.
  • இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசின் அறக்கட்டளைத் துறையின், பொறியியல் பிரிவில் பணிபுரிந்த, கணபதி ஸ்தபதியால் கோவில் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. சிறீ வெங்கடேசுவரா கோவிலுக்கான திட்டங்கள், ஆகஸ்ட் 2, 1973 அன்று, வடிவமைக்கப்பட்டது. சிறீ வெங்கடேசுவரா கருவறை, சிறீ தாயார் (லட்சுமி) கருவறை, சிறீ ஆண்டாள் கருவறை, ஆகியவற்றை இவர் வடிவமைத்தார். இந்த வடிவமைப்பு ஆந்திரப் பிரதேச மாநிலம், திருமலை - திருப்பதியில் அமைந்துள்ள சிறீ வெங்கடேசுவரா கோவில் வடிவமைப்பிலிருந்து வேறுபட்டது ஆகும்..
  • பிட்ஸ்பர்க், சிறீ வெங்கடேசுவரா கோவில் அமைப்பு (Pittsburgh, Sri Venkateshwara Temple Organization) ஆகஸ்ட் 7, 1975 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் (TTD), சிறீ வெங்கடேசுவரா கோவில் கட்டுவதற்கான நிதி உதவி வேண்டி ஒரு கோரிக்கை விண்ணப்பம், 1975ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று விடுக்கப்பட்டது. இதே நாளில் இந்த விண்ணப்பத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்று, நிதி உதவி வழங்கியது.
  • 1976 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று கால்கோள் விழா நடைபெற்றது.
  • நவம்பர் 17, 1976 ஆம் தேதியன்று தெய்வச்சிலைகள் பிரதிட்டை செய்யப்பட்டன.
  • ஜூன் 8, 1977: குடமுழுக்கு விழா நடைபெற்றது
  • அன்றிலிருந்து தினமும் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • அக்டோபர் 22, 1978: இராஜகோபுரம் பிரதிட்டை செய்யப்பட்டது.
  • மே 28, 1979: தெப்பக்குளம் பிரதிட்டை செய்யப்பட்டது.
  • நவம்பர் 17, 1986: 10ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
  • மார்ச் 22, 1989 முதல் மே 21, 1989 வரை கோவிலில் சிதலமானவற்றைப் புதுப்பிக்கும் (ஜீர்ணோத்தரணம்) சடங்கு நடைபெற்றது.
  • மே 25, 1989: குடமுழுக்கு விழா நடைபெற்றது
  • நவம்பர் 23, 1990: அரங்கம் (Auditorium) மற்றும் கல்யாணமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது
  • மே 25, 1991 முதல் மே 27, 1991 வரை: மகா சத்தியநாராயண பூசை நடத்தப்பட்டது.
  • ஆகஸ்ட் 26 முதல் 30, 2009 வரை: குடமுழுக்கு விழா நடைபெற்றது.[10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 About Temple Sri Venkateswara Temple, Pitsburg
  2. "Find a County". National Association of Counties. Archived from the original on May 31, 2011. பார்க்கப்பட்ட நாள் June 7, 2011.
  3. Sri Venkateswara Temple Pittsburgh City Paper
  4. William Penn Highway Wikipedia
  5. Penn Hills Township, Allegheny County, Pennsylvania Wikipedia
  6. வெங்கடேஸ்வரா திருத்தலம், பிட்ஸ்பர்க், அமெரிக்கா தினமலர் ஜூலை 1, 2017
  7. 7.0 7.1 7.2 7.3 Home Sri Venkateswara Temple, Pittsburgh
  8. 8.0 8.1 8.2 8.3 Services at Temple Sri Venkateswara Temple, Pittsburgh
  9. Services Outside Temple Sri Venkateswara Temple, Pittsburgh
  10. Temple History Sri Venkateswara Temple, Pittsburgh