வெறுத்திசை (செய்யுள்)

வெறுத்திசை என்பது வெறுக்கத்தக்க இனிமையல்லாத இசை ஆகும். வெறுத்திசை மென்னடை ஒழுக்கத்தில் வல்லொற்று அடுத்து மிகுந்து வந்தது போலவும், உயிரெழுத்து அடுத்துப் பொய்ந்நலம் பட்டு அறுத்திசைப்பது போலவும் வருவது.

ஆக்கம் புகழ்பெற்ற தாவி இவள் பெற்றாள்
பூக்கட் குழற்கார் பொறைபெற்ற - மாக்கடல்சூழ்
மண்பெறற ஒற்றைக் குடையாய் வரப்பெற்றெம்
கண்பெற்ற இன்று களி.

இப்பாடலில் பூக்கண் குழற்கார் என இருக்க வேண்டியது பூக்கட்குழற்கார் என வல்லொற்று தேவையின்றி அடுத்து வந்தது. எனவே வெறுத்திசையாயிற்று.[1]

வெறுத்து இசைப்பு

தொகு

பாடலில் வரும் வெறுக்கத் தக்க இசை இங்குத் தடித்த எழ்த்துக்களில் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சுட்டி யாப்பருங்கலம் விருத்தியுரை காட்டும் பாடல்கள் [2]

ஓங்கிலை வேலோன் ஒளியால் அளிபெற்ற
பூந்துழாய் போன்றேமும் யாமேமற்(று) - ஏய்ந்து
தகைமொய்ம்பில் தாழ்தடக்கைத் தண்ணருவி[3] நாடன்
பகைமுனை போன்றேமும் யாம்

சிறுநன்றி இன்றிவர்க்கியாம்[4] செய்தக்கால் நாளைப்
பெறுநன்றி பின்னும் பெரிதென் - றுறுநன்றி
தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே
வானவாம் உள்ளத் தவர்.

கற்றற் றற்ற சுடற்ற கடற்றிரை
விற்றற் றற்ற வில்லேர் புருவத்தள்
சொற்றற் றற்ற சுடர்க்குழை மாதரோ(டு)
உற்றற் றிற்றதென் நெஞ்சு.[5]

மேற்கோள்

தொகு
  1. தா.ம. வெள்ளைவாரணம், தண்டியலங்காரம். திருப்பனந்தாள் மட வெளியீடு.1968
  2. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 330
  3. வஞ்சித் தூங்கிசை
  4. குற்றியலிகரம் வந்து இன்னாங்காய் இசைக்கிறது
  5. [ற] வல்லினம் மிக்க வெறுப்பான இசைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெறுத்திசை_(செய்யுள்)&oldid=3456610" இலிருந்து மீள்விக்கப்பட்டது