வெளியார் ஓவியம்

தாமே கற்றுக்கொண்டவர்களால் அல்லது குறைந்த ஓவிய அறிவு கொண்டவர்களால் வரையப்படும் ஓவியங்களைக் க

வெளியார் ஓவியம் (Outsider art) என்பது, தாமே கற்றுக்கொண்டவர்களால் அல்லது குறைந்த ஓவிய அறிவு கொண்டவர்களால் வரையப்படும் ஓவியங்களைக் குறிக்கும். வெளியார் ஓவியர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓவிய உலகத்துடனோ, ஓவிய நிறுவனங்களுடனோ மிகக் குறைவான தொடர்பு உள்ளவர்கள் அல்லது ஒரு தொடர்பும் அற்றவர்கள். பல வேளைகளில் இவர்களுடைய ஆக்கங்கள் இறப்புக்குப் பின்னரே கண்டறியப்படுகின்றன. பெரும்பாலும் வெளியார் ஓவியங்கள் தீவிரமான மனநிலைகளையோ, வழமைக்கு மாறான எண்ணங்களையோ, கற்பனை உலக விடயங்களையோ வெளிப்படுத்துவனவாக உள்ளன.

அடொல்ஃப் வொல்ஃபிளீயின் Irren-Anstalt Band-Hain, 1910
அன்னா செமன்கோவா, தலைப்பு இல்லை, 1960கள்

வெளியார் ஓவியம் என்னும் தொடர் Outsider art என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பாகப் பயன்படுகின்றது. Outsider art என்னும் சொல்லை முதன் முதலில் கலைத் திறனாய்வாளரான ரோஜர் கார்டினல் என்பவர் அறிமுகம் செய்தார். இவர் இச்சொல்லை ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த பிரெஞ்சு மொழிச் சொல்லான art brut என்பதற்கு ஒத்த பொருளில் பயன்படுத்தினார். பிரெஞ்சு ஓவியர் யோன் டுபுஃபே உருவாக்கிய மேற்படி பிரெஞ்சுச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு கரடுமுரடான அல்லது செம்மையற்ற ஓவியம் என்பதாகும். வழமையான பண்பாட்டு எல்லைகளுக்கு வெளியே உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் குறிக்க அவர் இச் சொல்லைப் பயன்படுத்தினார். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓவிய நடைமுறைச் சூழலுக்கு வெளியே உள்ளவர்களின் ஓவியங்களைச் சிறப்பாகக் கவனித்த டுபுஃபே, எடுத்துக்காட்டுகளாக மனநல மருத்துவமனை நோயாளர்களதும், சிறுவர்களதும் ஓவியங்களைப் பயன்படுத்தினார்.[1][2]

வெளியார் ஓவியம் ஒரு வெற்றிகரமான ஓவியச் சந்தை வகையாக உருவானது. 1993 இலிருந்து ஆண்டுதோறும் நியூயார்க்கில் வெளியார் ஓவியச் சந்தை நடைபெற்றுவந்தது.[3] இவ்வகை ஓவியத்துக்காகவே குறைந்தது இரண்டு ஒழுங்காக வெளிவரும் ஆய்விதழ்கள் உள்ளன. சில சமயங்களில், ஓவியங்கள் உருவான சூழலையோ, அவற்றின் உள்ளடக்கத்தையோ கருத்தில் கொள்ளாமல், சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக, வழமையான "ஓவிய உலகுக்கோ", "ஓவியக் காட்சியக முறைமைக்கோ" வெளியில் உள்ள எல்லாருடைய ஓவியங்களுக்கும் பிழையாக இச்சொல்லைப் பயன்படுத்துவது உண்டு.[4]

மன நோயாளர் வரைந்த ஓவியங்கள்

தொகு

சிறுவர் ஓவியங்கள், குடியானவர் ஓவியங்கள் ஆகியவற்றுடன் மனநிலை பாதிக்கப்பட்டவர்களதும் ஓவியங்கள் மீதான ஆர்வத்தை முதலில் "டெர் பிளவே ரெய்ட்டர்" (Der Blaue Reiter) குழுவினர் வெளிப்படுத்தினர். இக்குழுவில் வசிலி கன்டின்சுக்கி, ஒகசுத் மக்கே, பிராண்சு மார்க், அலெக்சே யவ்லென்சுக்கி போன்ற புகழ் பெற்ற ஓவியர்களும் மற்றும் பலரும் இருந்தனர். இக்குழுவினர், கல்விசார் பண்புக் குறைவினால் உருவாகும் வெளிப்படுத்தல் ஆற்றலை முன் குறிப்பிட்ட மனநோயாளர், சிறுவர், குடியானவர்கள் ஆகியோரின் ஆக்கங்களில் கண்டனர். இந்த ஆக்கங்கள் தொடர்பான எடுத்துக்காட்டுகளை அவர்களது முதலும் கடைசியுமான இதழில் வெளியிட்டனர். மக்கே, மார்க் ஆகியோர் முறையே 1914 இலும், 1916 இலும் நடந்த சண்டைகளில் கொல்லப்பட்டனர். இவர்களது இறப்பினால் ஏற்பட்ட இடைவெளியை பால் கிளீ ஓரளவுக்கு நிரப்பினார். இவருக்கு அவ்வாறான ஆக்கங்களில் இருந்து தொடர்ந்தும் அகத்தூண்டல்கள் கிடைத்தன.

மனநோயாளர் இல்லங்களில் உள்ளவர்களின் ஓவியங்கள் தொடர்பான ஆர்வம் 1920கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்தது. 1921 இல் மருத்துவர் வால்ட்டர் மோர்கென்தாலர் ஓவியராக ஒரு மனநோயாளி (Ein Geisteskranker als Künstler) என்னும் நூலொன்றை வெளியிட்டார். இது அம்மருத்துவரின் கவனிப்பில் இருந்த அடோல்ஃப் வொல்ஃபிளி என்னும் ஒரு மனநோயாளியைப் பற்றியது. இவர் தன்னியல்பாகவே படங்களை வரைந்தார். இது அவரைச் சாந்தப்படுத்தியதாகத் தெரிகின்றது. இவருடைய முக்கியமான ஆக்கம் 45 தொகுதிகளைக் கொண்டதும், படங்களுடன் கூடியதுமான கற்பனையான அவரது வாழ்க்கைக் கதை ஆகும். இது 25,000 பக்கங்களையும் 1,600 படங்களையும் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Roger Cardinal, Outsider Art, London, 1972
  2. Bibliography The 20th Century Art Book. New York, NY: Phaidon Press, 1996.
  3. "Outsider Art Fair". Outsider Art Fair. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
  4. ""What the Dickens is Outsider Art?" The Pantograph Punch, December 2016, retrieved 2017-01-16". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளியார்_ஓவியம்&oldid=3949842" இலிருந்து மீள்விக்கப்பட்டது