வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு

'வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு' (வே.ந.வி.ப) (Registry of Toxic Effects of Chemical Substances, RTECS) என்பது வேதியியல் பொருள்களைப் பற்றித் திறந்த அறிவியல் இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ள நச்சு விளைவுகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து வைத்திருக்கும் தரவுக்களஞ்சியம். இத்தரவுகள் முற்றிலும் அறுதியும் உறுதியும் செய்யப்பட்டதாகவோ, பயனுடையதாகவோ இருக்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் தொகுத்தவை. 2001 ஆம் ஆண்டுவரை இதனை ஐக்கிய அமெரிக்காவின் தேசிய தொழிற்சூழல் பாதுகாப்புக் கழகத்தின் (NIOSH)) பராமரித்து வந்தது. இதன் தரவுகளும் இலவசமாகக் கிடைத்தன. இப்பொழுது சைமிக்ஃசு தொழில்நுட்பங்கள் (Symyx Technologies) என்னும் தனியார் நிறுவனத்தின் கீழ மேலாண்மை செய்து வருகின்றது. இதன் தரவுகளைப் பெற பணம் கட்ட வேண்டும் அலல்து பணம் கொடுத்து சந்தா பெற வேண்டும்.

உள்ளடக்கம்

தொகு

இதன் கோப்பில் ஆறு வகையான நச்சுத்தன்மைகள் பற்றிய தரவு சேர்க்கப்பட்டுள்ளன:

  1. முதன்மையான எரிச்சல் ஊட்டுகை
  2. மரபணுப்பிறழ்ச்சி விளைவுகள் (mutagenic effects)
  3. இனப்பெருக்கத் தீவிளைவுகள்
  4. புற்றுக்கட்டி விளைவுகள்
  5. கடும் நச்சு விளைவுகள்
  6. பல்படிவு (பல முறை தாக்குற்ற) விளைவுகள்

வரலாறு

தொகு

வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு (வே.ந.வி.ப) என்பது ஐக்கிய அமெரிக்காவின் மக்களவை ('காங்கிரசு') பணிப்பித்த நடவடிக்கை. இது 1970 ஆம் ஆண்டின் தொழிற்சூழல் பாதுகாப்பும் உடல்நலச் சட்டத்தின் பகுதி 20(a)(6) -இன் படி நிறுவப்பட்டது (PL 91-596). முதல் பதிப்பானது நச்சுப் பொருள்களின் பட்டியல் (Toxic Substances List) என்று அழைக்கப்பெற்று சூன் 28, 1971 இல் வெளியிடப்பட்டது; இதில் ஏறத்தாழ 5,000 வேதிப்பொருள்கள் பற்றிய நச்சியல்சார்பான தரவுகள் அடங்கி இருந்தன. இப்பெயர் பின்னர் மாற்றப்பட்டு வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு என்று பொருள்படும் Registry of Toxic Effects of Chemical SubstancesRTECS, என்று அழைக்கப்பட்டது. சனவரி 2001 இல் இந்தத் தரவுக்களஞ்சியம் 152,970 வேதிப்பொருள்கள் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. திசம்பர் 2001 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய தொழிற்சூழல் பாதுகாப்புக் கழகம் (NIOSH) இத்தரவுக் களஞ்சியத்தைத் தனியார் நிறுவனமாகிய எல்சிவியர் எம்டிஎல் (Elsevier MDL) என்னும் நிறுவந்த்துக்கு மாற்றியது. சைமிக்ஃசு (Symyx) என்னும் நிறுவனம் எல்சிவியெர் எம்டிஎல்-ஐ 2007 இல் வாங்கியது. இப்பொழுது இதன் தரவுகளைப் பெற பணம் கட்ட வேண்டும் அல்லது பணம் கொடுத்து ஆண்டுச் சந்தா பெற வேண்டும். .

வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு (வே.ந.வி.ப) இப்பொழுது ஆங்கிலம் பிரான்சியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளில் தொழில்சூழல் நலம்- பாதுகாப்புக்கான கனடிய நடுவகத்தில் இருந்து கிடைக்கின்றன. தரவுக்களஞ்சிய சந்தாவானது இணையவலை வழியாகவோ இறுவட்டிலோ, உள்நிறுவன இணையவலை வடிவிலோ கிடைக்கின்றது. . தரவுக்களஞ்சியம் இணையவழி தேசிய தகவல் சேவை கூட்டுநிறுவனம் (National Information Services Corporation, NISC ), "RightAnswer.com", எக்ஃசுபபு ("ExPub") (Expert Publishing, LLC) ஆகியவற்றின் ஊடாகக் கிடைக்கின்றது.

வெளியிணைப்புகள்

தொகு