வேற்றுமை நெறி (விளக்கம்)

(வேற்றுமை நெறி-விளக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழில் வேற்றுமையை நெறிப்படுத்தி எண்ணின் பெயரால் வழங்குகிறோம். அந்த நெறியின் பாங்கு ஓர் ஒழுங்கு முறைப்படி அமைந்துள்ளது.

தொல்காப்பியர் வேற்றுமையை வேற்றுமை-உருபின் பெயராலும் குறிப்பிடுகிறார்.

மொழியும்போது வினை எழுமிடம் (வினை தோன்றுமிடம்) (வினையாற்றும் பொருள்) எழுவாய்

பொருளை (எழுவாயை) வேறு இடத்துக்கு மாற்றுவது வேற்றுமை.

  • பெயர்ச்சொல் இடம் மாறுவதை வேற்றுமை என்கிறோம். வேற்றுமையை உணர்த்த ‘வேற்றுமை உருபுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. இந்த உருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் பொருந்தி வரும். இது ‘பின்னொட்டு’. (ஆங்கிலத்தில் வேற்றுமை உருபு முன்னொட்டாகவும் at the door பின்னொட்டாகவும் Ram’s father உள்ளொட்டாகவும் his pen தொகையாகவும் call him வரும். தமிழில் முன்னொட்டாவோ, உள்ளொட்டாகவோ வருவதில்லை.)

வேற்றுமையின் ஒழுங்குநெறி

தொகு
1. எழுவாய் 2. செயப்படுபொருள் 3. துணைக்கருவி 4. பொருந்த ஏற்கும் பொருள்
5. போரிட்டு நீக்கும் பொருள் (பொரூஉ) 6. கிழமையாகிய உடைமை 7. இருப்பிடம் 8. பொருளை அழைக்கும் விளிப்பொருள்

விளக்கம்

தொகு
  1. செய்தான் என்னும்போது செய்தவன் ஒருவன் தோன்றா எழுவாயாக இருக்கிறான். கண் பார்க்கும் என்னும்போது கண் எழுவாய். இங்கே கண் செயல்படும் முதலிடத்தில் இருக்கிறது. எனவே முதல் வேற்றுமை
  2. கண்ணைப் பார் என்னும்போது கண் செயப்படுபொருள். பார்ப்பவன் ஒருவன் இருக்கிறான். இங்கே கண் அடுத்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே இரண்டாம் வேற்றுமை
  3. கண்ணொடு வாயும் பூத்தது என்னும்போது கண்ணின் செயலுக்கு மற்றொன்று துணை வருகிறது. (இது முதல் வேற்றுமைக் கூறு) – கண்ணால் பேசினாள் என்னும்போது கண் கருவியாகிவிட்டது. (இது இரண்டாம் வேற்றுமைக் கூறு). எழுவாய் துணையாவதும் கருவியாவதும் அதன் மூன்றாம் நிலை. எனவே இது மூன்றாம் வேற்றுமை.
  4. கண்ணுக்கு மை இடு என்னும்போது கண் ஒன்றைப் பொருந்தப் பெற்றுக்கொள்ளும் அடுத்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே இது நான்காம் வேற்றுமை
  5. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை என்னும்போது கண்ணைக் காட்டிலும் சிறந்த உறுப்பு இல்லை எனக் கண்ணோடு போராட்டம் நிகழ்கிறது. ஏற்றுக்கொளவது நான்காம் வேற்றுமை. போரிடுவது ஐந்தாம் வேற்றுமை.
  6. கண்ணின் (கண்ணது) கருமை என்னும்போது 'கருமை' என்பது கண் பெற்றிருக்கும் உடைமை ஆகிவிடுகிறது. இப்படி எழுவாயின் கிழமையை (உடைமையை) கூறுவது ஆறாம் வேற்றுமை.
  7. கண்ணில் (கண்ணின்மேல்) பீளை என்னும்போது கண் இருப்பிடமாயிற்று. பீளை எழுவாயின் இருப்பாயிற்று. இது ஏழாம் வேற்றுமை.
  8. கண்ணே! உறங்கு என்னும்போது கண் அழைக்கப்படுகிறது. இது விளி. விளி எட்டாம் வேற்றுமை.

பொதுமை நோக்கு

தொகு
  • செய்பொருள் (1)
  • செயப்படுபொருள் (2)
  • உதவும்-பொருள் (3)
  • ஏற்கும்-பொருள் (4)
  • விலக்கும்-பொருள் (5)
  • உடைமைப்பொருள் (6)
  • இடப்பொருள் (7)
  • விளிப்பொருள் (8)

எழுவாய் வேற்றுமை

தொகு

தொல்காப்பியர் விளக்கம்

தொகு

எப்படியெல்லாம் பயனிலை ஏற்கும் என்பதற்குத் தொல்காப்பியர் தந்துள்ள விளக்கம்

  • காலம் காட்டாத சொல் 'பெயர்' எனப்படும்.
பெயர் பெயர்த்தொகை பயனிலை ஏற்றல்
ஆ உண்டு யானக்கோடு உண்டு பொருண்மை சுட்டல்
ஆ செல்க யானைக்கோடு செல்க வியங்கொள வருருதல்
ஆ கிடந்தது யானைக்கோடு கிடந்தது வினைநிலை உடைத்தல்
ஆ எது யானைக்கோடு எது வினாவிற்கு ஏற்றல்
ஆ அரிது யானைக்கோடு அரிது பண்பு கொள வருதல்
ஆ பல யானைக்கோடு பல பெயர் கொள வருதல்

இரண்டாம் வேற்றுமை

தொகு

தொல்காப்பியர் விளக்கம்

தொகு

வினையானது இரண்டாம் வேற்றுமைக்கு இரு வகையில் அமையும்

  1. மரத்தைக் குறைத்தான்
  2. குழலை உடையன்

இவை ஏற்கும் பொருள்கள்

  • ஊரைக் காக்கும் (காப்பு)
  • கிளியை ஒக்கும் (ஒப்பு)
  • யானையை ஊரும் (வினை)
  • எயிலை இழைக்கும் (இழை)
  • தாயை ஒக்கும் (ஒப்பு)
  • ஊரைப் புகழும் (புகழ்)
  • நாட்டைப் பழிக்கும் (பழி)
  • ஊரைப் பெறும் (பெறல்)
  • ஊரை இழக்கும் (இழவு)
  • மனைவியைக் காதலிக்கும் (காதல்)
  • படையை வெகுளும் (வெகுளி)
  • ஊரைச் செறும் (செறல்)
  • தாயை உவக்கும் (உவத்தல்)
  • நூலைக் கற்கும் (கற்பு)
  • ஞாணை அறுக்கும் (அறுத்தல்)
  • மரத்தைக் குறைக்கும் (குறைத்தல்)
  • நல்லைத் தொகுக்கும் (தொகுத்தல்)
  • வேலியைப் பிரிக்கும் (பிரித்தல்)
  • பொன்னை நிறுக்கும் (நிறுத்தல்)
  • அரிசியை அளக்கும் (அளத்தல்)
  • வெற்றிலையை எண்ணும் (எண்ணல்)
  • ஊரை ஆக்கும் (ஆக்கல்)
  • ஊரைச் சாரும் (சார்தல்)
  • வீட்டை அளக்கும் (அளவு)
  • நெறியைச் செல்லும் (செலவு)
  • சூதினைக் கன்றும் (கன்றல்)
  • செய்யை நோக்கும் (நோக்கல்)
  • கள்ளரை அஞ்சும் (அஞ்சல்)
  • நாட்டைச் சிதைக்கும் (சிதைப்பு)
    • அன்ன பிறவும் ஏற்கும்.

மூன்றாம் வேற்றுமை

தொகு

தொல்காப்பியர் விளக்கம்

தொகு

மூன்றாம் வேற்றுமை உருபைக் கையாளும் மரபு

  • ஆல் – கண்ணால் பார்த்தான்
  • ஆன் – கண்ணான் அளந்தான் (உயிர்முன்)
  • ஒடு – கோலொடு நின்றான்
  • ஓடு – கோலோடு ஓடினான் (உயிர்முன்)
  • உடன் – என்னுடன் இருந்தான், நின்றான்

மூன்றாம் வேற்றுமை உருபினை ஏற்ற பெயர் எத்தகைய பொருள்களை வினையாகக் கொள்ளும் எனத் தொல்காப்பியர் எண்ணிப்பார்க்கிறார்.

  • வாழ்ச்சியால் தக்கது வாய்ச்சி (அதற்றகு கிளவி)
  • நாயால் கடிக்கப்பட்டான் (அதன்வினைப் படுதல்)
  • வாணிகத்தான் ஆயினான் (அதனின் ஆதல்)
  • கரணத்தால் கொண்ட அரிசி (அதனிற் கோடல்)
  • எள்ளொடு கலந்த அரிசி (அதனொடு மயங்கல்)
  • அவனோடு அவள் வந்தாள் (அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி)
  • மலையொடு பொருத மாஅல் யானை (அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி)
  • முத்தொடு மலரைத் தொடுப்பதா (அதனோடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு)
    • அன்ன பிற

நான்காம் வேற்றுமை

தொகு

தொல்காப்பியர் விளக்கம்

தொகு

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ இன்னின்ன பொருளை இணைத்துக்கொள்ளும் எனத் தொல்காப்பியர் தொகுத்துக் காண முனைந்துள்ளார். சாத்தற்குச்சோறு என்பது போல் எப்பொருளும் கொள்ளும் எனக் கூறிவிட்டுப் பட்டியலிடுகிறார்.

கரும்பிற்கு வேலி அதற்கு வினையுடைமை
சாத்தற்கு மகள் உடம்பட்டார் சான்றோர் அதற்கு உடம்படுதல்
சாத்தற்குப் படுபொருள் (நினைவெல்லாம்) கொற்றன் அதற்குப் படுபொருள்
தாலிக்குப் பொன் அதுவாகு கிளவி
கைக்கு யாப்புடையது கடகம் (தோள்வளை) அதற்கு யாப்புடைமை
கூலிக்கும் குற்றேவல் செய்யும் அதன்பொருட்டு ஆதல்
நாய்க்கு நட்புடையன் நட்பு
மக்கட்குப் பகை பாம்பு பகை
தாய்க்குக் காதலன் (அன்புடையன்) காதல்
குடிமக்களுக்குச் சிறந்தார் கோமகன் சிறப்பு

பண்ணனுக்குத் தக்கது பண்ணிசைப்பாடல் என்பதனை உரையாசிரியர் 'பிற' என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார்.

ஐந்தாம் வேற்றுமை

தொகு

ஐந்தாம் வேற்றுமை உருபு ‘இன்’. இதற்குப் பொருள் ‘பொரூஉ’. பொரூஉ என்பது போரிட்டு விலக்குமிடம். பொருந்தாமல் நீங்குவதும் இதனுள் இணைந்ததே. தொல்காப்பியர் நீங்கலைப் ‘பற்றுவிடுதல்’ எனக் குறிப்பிடுகிறார்.

உரையாசிரியரும், பிற்கால நன்னூலாரும் எல்லை, ஏது என்று மேலும் இரண்டு பொருள்களைக் கூட்டி நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஏன நான்கு பொருள்களைக் காட்டுகின்றனர்.

தொல்காப்பியர் கூறும் 'தீர்தல்', ‘பற்றுவிடுதல்’ ஆகிய பொருள்களைப் பிற்காலத்தில் ‘நீங்கல்’ என்றனர். பிற்காத்தவர் சேர்த்துக்கொண்ட ‘எல்லை’ப் பொருளும், ‘ஏது’ப் பொருளும் ‘பற்றுவிடுதல்’ பொருளுக்குள் அடங்குதலை அவற்றிற்குத் தரப்படும் எடுத்துக்காட்டுகளால் நாம் உணரமுடியும்.

பொரூஉ என்னும் ஒப்பு சீக்கம் காக்கையிற் கரிது களம்பழம் (காக்கையைக் காட்டிலும்)
பற்றுவிடுதல் என்னும் நீங்கல் ஊரின் பற்றுவிட்டான் (ஊரிலிருந்து நீங்கினான்)
தீர்தல் ஊரின் தீர்ந்தான் (ஊரிலிருந்து விலகினான்)
எல்லை வேங்கடத்தின் தெற்கு தமிழ்நாடு (வேங்கடத்துக்குத் தெற்கில் எனில் இது நான்காம் வேற்றுமைமையும் ஆகும்)
ஏது (காரணம்) முயற்சியிற் பிறத்தலின் ஒலி நிலையாது (முயற்சியிலிருந்து, முயற்சியால் எனின் இது மூன்றாம் வேற்றுமை ஆகும்)

ஒப்புமையோடு வேறுபடுதல்

தொகு
  • பால் போல் வெளிது பஞ்சு (உவமை)
  • பாலின் வெளிது பஞ்சு (ஐந்தாம் வேற்றுமை)
  • மலையின் வீழ் அருவி (ஐந்தாம் வேற்றுமை)
  • அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது (ஐந்தாம் வேற்றுமை) [1]

தொல்காப்பியர்

தொகு

பொரூஉப் பொருளுக்குத் தொல்காப்பியர் 26 பண்புகளைக் குறிப்பிடுகிறார். இவற்றை நன்னூலார் ‘ஒப்பு’ என்கிறார்.

  • வண்ணம் – காக்கையிற் கரிது களம்பழம்
  • வடிவு - இதனின் வட்டம் இது
  • அளவு - இதனின் நெடிது இது
  • சுவை - இதனின் இனிப்பு இது
  • தண்மை - இதனின் தண்ணிது இது
  • வெம்மை - இதனின் வெய்யது இது
  • அச்சம் – கள்ளரின் அஞ்சும்
  • நன்மை - இதனின் நன்று இது
  • தீமை - இதனின் தீது இது
  • சிறுமை - இதனின் சிறிது இது
  • பெருமை - இதனின் பெரிது இது
  • வன்மை - இதனின் வலிது இது
  • மென்மை - இதனின் மெலிது இது
  • கடுமை - இதனின் கடிது இது
  • மூதுமை - இவனின் மூத்தான் இவன்
  • இளமை - இவனின் இளையன் இவன்
  • சிறத்தல் - இவனின் சிறந்தான் இவன்
  • இழித்தல் - அவனின் இழிந்தான் அவன்
  • புதுமை - இவனின் புதியன் இவன்
  • பழைமை - இவனின் பழையன் இவன்
  • ஆக்கம் - இவனின் ஆயினான் இவன்
  • இன்மை - இவனின் இலன் இவன்
  • உடைமை - இவனின் உடையன் இவன்
  • நாற்றம் - இதனின் நாற்றம் இது
  • பன்மை - இவரின் பலர் இவர்
  • சிலர் - இவரின் சிலர் இவர்

ஆறாம் வேற்றுமை

தொகு

ஆறாம் வேற்றுமை கிழமைப் பொருளில் வரும்.
தொல்காப்பியர் இதனை அது-வேற்றுமை எனக் குறிப்பிடுகிறார்.
‘அது’, ‘ஆது’ என்னும் உருபுகள் ஒருமைக்கும், ‘அ’ உருபு பன்மைக்கும் வரும் என நன்னூல் குறிப்பிடுகிறது.
இக்காலத்தில் ‘உடைய’ என்னும் உருபும் வழக்குக்கு வந்துவிட்டது.

அது ஆது உடைய
எனது கை தான் நாட்டித் தனாது நிறுப்பு [2] என கைகள் என்னுடைய வீடு

இவை தற்கிழமை, பிறிதின் கிழமை என இரண்டாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. நன்னூல் 300

தற்கிழமை பிறிதின் கிழமை

சாத்தனது எருமை (பண்பு)
சாத்தனது வரவு (தொழில்)
சாத்தனது கை (உறுப்பு)
மரத்தது தொகுதி (ஒன்றன் கூட்டம்)
நெல்லினது பொறி (திரிபின் ஆக்கம்)

சாத்தனது பசு (பொருள்)
சாத்தனது வீடு (இடம்)
சாத்தனது நாள் (காலம்)

தொல்காப்பியர்

தொகு

தொல்காப்பியர் “ஒன்றினும் பிறிதினும் இதன் இது எனும் அன்ன கிளவிக் கிழமை” எனக் குறிப்பிடுவதை நன்னூல் தற்கிழமை, பிறிதின் கிழமை எனப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.

  • இயற்கை – சாத்தனது இயல்பு
  • உடைமை – சாத்தனது உடைமை (பொருளுடைமை)
  • ஒருவழியுறுப்பு – யானையது கோடு (தந்தம் உணர்வு இல்லாதது)
  • கருவி – சாத்தனது வாள்
  • கலம் – சாத்தனது கலம்
  • கிழமை – சாத்தனது கிழமை (பண்புடைமை)
  • குழூஉ – படையது குழூஉ
  • செயற்கை – செயற்கை (செயல்)
  • திரிந்து வேறுபட்டது – எள்ளது சாந்து
  • துணை – அவனது துணை
  • தெரிந்துமொழி செய்தி – கபிலரது பாட்டு
  • நிலை – சாத்தனது நிலை (ஒழுக்கம்)
  • முதல் – சாத்தனது முதல் (முதலீடு)
  • முதுமை – சாத்தனது முதுமை
  • முறைமை – ஆவினது கன்று
  • வாழ்ச்சி – சாத்தனது வாழ்ச்சி (வாழ்வு)
  • வினை –அவனது வினை (செயல் விளைவு)

ஏழாம் வேற்றுமை

தொகு

ஏழாம் வேற்றுமை வேற்றுமையைத் தொல்காப்பியர் ‘கண்’-வேற்றுமை எனவும் குறிப்பிடுகிறார். இது வினைசெய் இடம், நிலம், காலம் ஆகிய குறிப்புகளில் தோன்றும் என்கிறார். ஆறு பொருள் மேலும் வரும் என்கிறது நன்னூல். இதனை மேலும் தற்கிழமை, பிறிதின் கிழமை எனப் பாகுபடுத்தி நன்னூல் காண்டிகை உரை எடுத்துக்காட்டுகளைத் தருகிறது.

பெயர் மேல்

தொகு
பெயர் தற்கிழமை பிறிதின் கிழமை
பொருள் மணியின்கண் ஒளி மரத்தின்கண் காக்கை
இடம் ஊரின்கண் வீடு ஆகாயத்தின்கண் பறக்கும் பருந்து
காலம் நாளின்கண் நாழிகை வேனிலின்கண் பாதிரி
சினை விரலின்கண் நகம் கையின்கண் வளையல்
குணம் கறுப்பின்கண் அழகு இளமையின்கண் செல்வம்
தொழில் ஆட்டத்தின்கண் அசைவு ஆட்டத்தின்கண் பாட்டு

உருபு

தொகு
  • அகம் (பல்லாரகத்து)
  • அயல் (வரப்பயல்)
  • அளை (கல்லளை)
  • இடம் (இவ்விடம்
  • இடை (நம்மிடை)
  • இல் (பெட்டியில்)
  • உழி (உறையுழி) (மழையில்)
  • உழை (யாருழைச் சேறி என் நெஞ்சு) [3]
  • உள் (பெட்டிக்குள்)
  • உளி (காவுளி) (காட்டுக்குள்)
  • கடை (போகாறு அகலாக்கடை) [4]
  • கண் (மனத்துக்கண் மாசிலன் ஆதல்) [5]
  • கால் (நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்) [6]
  • கீழ் (பெட்டியின்கீழ்)
  • சார் (நாட்டுச்சார்) (நாட்டுப்பக்கம்)
  • தலை (அதன்தலை) (அதற்கு மேல்)
  • திசை (நேர்த்திசை)
  • தேம் (கிழவோள் தேஎத்து)
  • பாடு (பிற்பாடு)
  • பின் (காதலன்பின்)
  • புடை (எயிற்புடை) (மதிலோரம்)
  • புறம் (வலப்புறம்)
  • முதல் (சுரன்முதல்)
  • முன் (என் ஐமுன்) [7]
  • மேல் (பெட்டியின்மேல்)
  • வயின் (யார்வயின்) யாரிடம்
  • வலம் (கைவலம்)
  • வழி (நிழல்வழி)
  • வாய் (கால்வாய்)

எட்டாம் வேற்றுமை

தொகு
எட்டாம் வேற்றுமையைத் தொல்காப்பியர் ’விளிமரபு’ என்னும் தனி இயலில் விளக்குகிறார். காரணம் அவருக்கு முன் வேற்றுமையை ஏழு எனக் கொண்டிருந்தனர். இவர் எட்டு எனக் கொண்டதால் சிறப்பாக விளக்கவேண்டியதாயிற்று.

வடமொழியைத் தழுவியதா

தொகு

தொல்காப்பியருக்கு முன் தமிழில் வேற்றுமை ஏழு என்றனர் [8] [9] தொல்காப்பியர் விளி வேற்றுமையையும் சேர்த்து எட்டு என வகைப்படுத்தினார்.

  • பாணினியின் வடமொழி இலக்கணம் வேற்றுமையை எட்டாகப் பாகுபடுத்திக் காட்டுகிறது.
  • பாணினியம் வேர்ச்சொற்களைத் 'தாது' எனப் பாகுபடுத்துகிறது. தொல்காப்பியத்தில் இந்தப் பாகுபாடு இல்லை. 13ஆம் நூற்றாண்டு நன்னூல் 'பகுதி' எனக் காட்டுகிறது.
  • பாணினி பின்பற்றிய இலக்கண முன்னோடி 'ஐந்திரம்' நூலை அறிந்தவர் தொல்காப்பியர். [10] பாணினி வியாகரணம் தொல்காப்பியருக்குத் தெரியாது. பின்னோன் பாணினியை முன்னோன் தொல்காப்பியர் பின்பற்றினார் என்பது சாலாது.
  • தமிழ் வேற்றுமையின் நெறியமைதி மேலே காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை பாணினி தொல்காப்பியத்தைப் பின்பற்றியாருகலாம். வேற்றுமை 7 என்பதும், 8 என்பதும் தமிழ்நெறி.

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. திருக்குறள் 124
  2. நன்னூல் 11
  3. திருக்குறள் 1249
  4. திருக்குறள் 478
  5. திருக்குறள் 34
  6. திருக்குறள் 379
  7. திருக்குறள் 771
  8. வேற்றுமை தானே ஏழென மொழிப - தொல்காப்பியம், வேற்றுமையியல் 1
  9. விளி கொள்வதன்கண் விளியோடு எட்டே - தொல்காப்பியம், வேற்றுமையியல் 2
  10. ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் - தொல்காப்பியம், பாயிரம்

வெளிப் பார்வை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேற்றுமை_நெறி_(விளக்கம்)&oldid=3313147" இலிருந்து மீள்விக்கப்பட்டது