வேலுசாமி (Velusamy) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர் ஆவார். வேலுச்சாமிப்பிள்ளை என்ற பெயராலும் வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை என்ற பெயராலும் அறியப்படுகிறார்.[1] 1854 ஆம் ஆண்டு சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள தில்லைவிடங்கன் எனும் ஊரில் சுப்பிரமணிய பிள்ளை, சுந்தரம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். வெண்பா செய்யுள்களை விரைவாகவும், இலக்கணத்தோடும் படைப்பது இவரது பலமாகும். வெண்பா இயற்றும் இவருடைய திறமையைப் பாராட்டி திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவருக்கு வெண்பாப்புலி என்ற சிறப்புப் பெயரை அளித்தார்.

கல்வியும் பணியும்

தொகு

வேலுச்சாமி சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வித்துவான் சின்னசாமிப் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். மேலும், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடமும் தமிழ்ப் பயின்றார். திருவாவடுதுறை ஆதீனத்துச் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் கல்வி பயின்றுள்ளார். பச்சையப்பன் உயர்தரப் பள்ளியில் 1890 முதல் 1920 வரை 30 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள்

தொகு

கந்தபுராணத்தை 5663 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை 22-5-1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார். மேலும் இவர், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் தேரடியின் கீழ் அருளும் ஆஞ்சநேயரைப் புகழ்ந்து, ஆஞ்சநேய புராணம் எனும் நூலைப் பாடி இழந்த தன் பார்வையைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

  • தேவார சிவதல வெண்பா[2]
  • ஐயனார் நொண்டி
  • வருணாபுரிக் குறவஞ்சி
  • அநீதி நாடகம்
  • திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம்
  • தில்லைவிடங்கன் புராணம்
  • திருவேட்டக்குடிப் புராணம்
  • தில்லைவிடங்கன் நீரோட்டக யமக அந்தாதி
  • சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது
  • தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை.

மறைவு

தொகு

வேலுசாமி 1926 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று மறைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. இராமசாமிப் புலவர், சு அ (1955), தமிழ்ப் புலவர் வரிசை  : எட்டாம் புத்தகம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சென்னை ), பார்க்கப்பட்ட நாள் 2024-07-11
  2. "தேவாரச் சிவதல வெண்பா", www.tamildigitallibrary.in (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-07-11

உசாத்துணை

தொகு

1) மயிலை சீனி.வேங்கடசாமி," பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் " மணிவாசர் பதிப்பகம் -2001.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலுசாமி&oldid=4082358" இலிருந்து மீள்விக்கப்பட்டது