வே. வசந்தி தேவி
வே. வசந்தி தேவி (Vasanthi Devi) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளர், சமூக ஆர்வலர் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டில் பிறந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கான சங்கத்தின் தலைவராகவும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலராகவும் உள்ளார். 1992-1998 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பின்னர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக 2002முதல் 2005 வரை பதவி வகித்தார். [1]
வே. வசந்தி தேவி | |
---|---|
2-ஆம் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | |
பதவியில் 1992 - 1998 | |
முன்னையவர் | வேதகிரி சண்முகசுந்தரம் |
பின்னவர் | க. ப. அறவாணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 நவம்பர் 1938 திண்டுக்கல், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
உறவுகள் |
|
பெற்றோர் | பி. வி. தாஸ் (தந்தை) |
பணி | சமூக ஆர்வலர், கல்வியாளர் |
வாழ்க்கை வரலாறு
தொகுவசந்தி தேவி 1938 ஆம் ஆண்டில் தமிழகத்தின் திண்டுக்கல்லில் பிறந்தார். தொழிற்சங்கவாதியும் கிறித்தவ அறவாணரும் சிந்தனையாளருமான சக்கரைச்செட்டியாரின் மகள் வழி பெயர்த்தி.[2] இவருடைய தந்தை பி. வி. தாஸ் வழக்கறிஞராகவும் திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். இவருடைய தாத்தா காலத்திலிருந்து மதம் சாதி கடந்து இவருடைய குடும்பத்தில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. வசந்தி தேவி திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் படித்தார். 15 ஆவது வயதில், இவர் சென்னை நகருக்கு குடிபெயர்ந்தார். மேல்நிலைக் கல்வியை முடிக்க சென்னை ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார்.[3] சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றார்.[4] பின்னர், இவர் 1970 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு அரசியல் குழுக்கள் மற்றும் இயக்கவியலில் முனைவர் பட்டத்திற்காக பிலிப்பைன்சு நாட்டுக்குச் சென்றார். 1980 ஆம் ஆண்டு பிலிப்பைன்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[4][5]
இராணி மேரி கல்லூரியில் பேராசிரியையான இவர், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.[6][7] 1988 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார் [3] 1992 மற்றும் 1998 ஆண்டுகளுக்கு இடையில், அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[1]
பணிகளும் பதவிகளும்
தொகு- தமிழ் நாட்டின் கல்லூரிகளில் துணைப்பேராசிரியர், பேராசிரியர் துறைத்தலைவர் (1960-1988)
- முதல்வர், அரசு மகளிர் கல்லூரி குடந்தை (1988-1990)
- இந்திய சமூக அறிவியல் கவுன்சிலின் ஆய்வாளர் (1990-92)
- துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (1992-98)
- தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் செப் 2001-ஜூலை 2002)
- தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் (2002-2005)
சாதனைகள்
தொகு- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
- மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பட்டவகுப்புகளின் படிப்புத் திட்டத்தை மாற்றி அமைத்தார்.
- சமூக அக்கறையுடன் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
- ஆசிரியர் நலன், மாணவர் நலன் ஆகியவற்றில் அக்கறை செலுத்தினார்.
பொதுப்பணி
தொகு- "கல்வி" என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு கட்டாய இலவசத் தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்கப் பாடுபடுகிறது.
- மதுரையைத் தலைமை இடமாகக் கொண்ட மனித உரிமைகள் கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிறுவனம் 14 மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைக் கல்வியை வழங்கியது. 4000 பள்ளிகள், 35000 மாணவர்கள் 4500 ஆசிரியர்கள் பயனடைந்தனர்.
- இந்திய வளர்ச்சி நிறுவனத் தலைவராக அடிமட்டக் குழந்தைகளின் கல்வித்திறன்கள் வளர புதிய கற்றல், கற்பித்தல் முறைகளை உருவாக்கினார்.
- சமூக, பொருளாதார, கலாச்சார ஆய்வுகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மெண்டு ஸ்டடீஸ் என்னும் நிறுவனத்தில் காப்பாளராக உள்ளார்.
- பாண்டிச்சேரி பல்கலைக்கழகச் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
- தில்லியில் 1960களில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிற சமூக வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இக்குழு சமூகவளர்ச்சிக்கான ஆய்வுகள் செய்து தேசியக் கொள்கை உருவாக்கத்திற்கு வழி வகைகளைச் செய்து வருகிறது.
- இவர் தலைமையில் மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு நீதி கிட்ட பாடுபட்டது. அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் இயங்கியது. காவல்துறை உயரதிகாரிகள் முதல் சமுதாயத்தில் வலிமைமிக்கவர்கள் வரை அநீதிகளுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கும் சூழலை உருவாக்கியது.
பொது இயக்கம்
தொகுபொதுப் பள்ளி முறையைச் செயல்படுத்தக் கோரி பரப்புரை ஆற்றினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதும் ஆற்றல் பெற்ற வசந்தி தேவி மக்களின் கல்வி உரிமை, மனித உரிமை, தலித்துகளின் நலன், பெண்கள் விடுதலை, சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இயக்கங்களில் முனைப்பாகச் செயல்படுகிறார்.
அரசியல் செயல்பாடு
தொகுவசந்தி தேவி 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெ. ஜெயலலிதாவை எதிர்த்து டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்சி சார்பில் போட்டியிட்டார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Radhakrishnan, R. K. (13 May 2016). "An unusual contestant". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2020-11-21.
- ↑ வாசகசாலை (2020-04-21). "அடையாளம்: 4- வசந்திதேவி". வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-06.
- ↑ 3.0 3.1 Das, Monalisa (2016-04-21). "PWF's candidate against Jayalalithaa is a respected academic, and she wants to put up a tough fight". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2020-11-21.
- ↑ 4.0 4.1 "Vasanthi Devi". myneta.info. Association for Democratic Reforms.
- ↑ Srinivasan, Meera (11 May 2016). "Tamil Nadu Elections: A Professor's Big Fight Against Jayalalithaa". The Wire. Retrieved 2020-11-21.
- ↑ Kumar, Divya (2010-05-18). "Memories of Madras – Lessons by the beach" (in en-IN). https://www.thehindu.com/features/metroplus/memories-of-madras-lessons-by-the-beach/article432894.ece.
- ↑ Janardhanan, Arun (2016-04-21). "Educationist and former ministers' kin line up against Jayalalithaa". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Retrieved 2020-11-21.
- ↑ "வசந்திதேவியும் ராமச்சந்திரனும்". 2016-04-25.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)