ஸதகத்துல் ஃபித்ர்

ரமழான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏழைகளின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது.

  • முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு போத்தம் பழம் ஆகியவற்றைத் தர்மமாகக் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
  • நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
  • ரமழானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
  • நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

சட்டங்கள் தொகு

கடமை தொகு

இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பீன் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.

அளவு தொகு

இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.

நாள் தொகு

இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸதகத்துல்_ஃபித்ர்&oldid=2414523" இலிருந்து மீள்விக்கப்பட்டது