பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்

(ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் (ஆங்கிலம்:Sri Perungaraiyadi Meenda Ayyanar Temple), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள குளமங்களம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வில்லுணி ஆற்றின் வடபுறமாக அமைந்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை[சான்று தேவை] குளமங்கலம்

வரலாறு

தொகு

இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு எதுவென்பது சரியாகத் தெரியவில்லை. 8ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது இக்கோவில் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குதிரை சிலை

தொகு

இங்கு மிகப்பெரிய குதிரை சிலை உள்ளது. இக்குதிரைச் சிலை 33 அடி உயரமுள்ள சிலை ஆகும். இது ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலை ஆகும். இது பண்டையத் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிறந்து விளங்குகிறது.

யானை சிலை

தொகு

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அய்யனார் கோவில்களில் யானை சிலை அமைப்பது அரிதான நடைமுறை என்றாலும், இக்கோவிலில் அமைந்துள்ள குதிரை சிலையின் எதிரே யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்துள்ளது. மேலும் இது இந்த கோயிலின் முக்கியத்துவமாக கருதப்பட்டது. கடும் மழைக்காலம் ஒன்றில் வில்லுணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் யானை சிலையின் அடிப்பகுதியை மட்டும் விட்டு விட்டு யானை சிலை முற்றாக அழிந்தது தெரிய வந்தது.

மாசி மகம் திருவிழா

தொகு

இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் திருவிழா சிறப்புடையது. இரண்டாம் நாள் தெப்ப உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்கள் நிறைவேறியவுடன் , வண்ணமயமான காகிதங்கள் மற்றும் மலர்களால் கட்டப்பட்ட பெரிய குதிரை சிலையின் உயரம் கொண்ட மாலைகளை தங்களுடைய மகிழுந்து, டிராக்டர், போன்ற நான்கு சக்கர வாகனங்களில் எடுத்து வந்து குதிரை சிலைக்கு காணிக்கையாக அணிவிக்கின்றனர். குதிரைக்கு கோவில் நிர்வாகம் சார்பாக முதல் மாலை அணிவிக்கப்படும். அதன் பிறகு பக்தர்களின் மாலைகள் போடப்படும். இந்த திருவிழாவின்போது கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் அன்னதானம் வழங்கப்படும்.

சீரமைப்பு

தொகு

இந்த ஆலயம் பக்தர்களின் பங்களிப்புடன் புதுப்பிப்பதற்காக, முன்னாள் ஆலங்குடி எம்.எல்.ஏ திரு. ஏ. வெங்கடாசலம் அவர்களால் கிராம மக்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. பழங்கால குதிரையின் அழகைக் கூட்டுவற்காக மீண்டும் வர்ணம் பூசப்பட்டது. மேலும் கோவில் முன்புறம் மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. திருப்பணிக்குப் பிறகு, கடந்த 2010 ஆண்டு மே22 அன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

போக்குவரத்து வசதி

தொகு

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அரசால் சிறப்பு வசதிகள் செய்யப்படும். அறந்தாங்கி, கீரமங்கலம், ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். மற்ற நாட்களில் சொந்த வாகனங்களில் வருவதையே அறிவுறுத்தப்படுகிறது.