வெங்கடேச சுப்ரபாதம்
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் (English:Sri Venkatesa Suprabatham / Sri Venkateswara Suprabatham) எனும் திருப்பள்ளியெழுச்சி, கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் சுவாமி இராமானுசரின் மறுஅவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற மணவாள மாமுனிகள் ஆணைப்படி திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டது.
உட்பொருள்
தொகுதிருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும், ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்களாக கருதப்படுகின்றன.
முன்னோடி
தொகுஆழ்வார்களுள் ஒருவரான திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. மார்கழி நீங்கலாக, ஆண்டு முழுவதும் திருமலை நடைதிறக்கும் பொழுது தாளலயத்தோடு தங்கவாயில் முன்பு கோயில் அந்தணர்களால் அனுதினமும் பாடப்பட்டு வருகிறது. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.
பகுதிகள்
தொகுசுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே "ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்" ஆகும்.
தற்காலத்தில்
தொகுஎம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் இந்த சுப்ரபாதம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இதன் தமிழ் வடிவமும் எம். எஸ். சுப்புலட்சுமியாலே பாடப்பட்டுள்ளது.
ச. பார்த்தசாரதி (சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றவர்) தன் தாயின் ஆசையின்படி சுப்ரபாதத்தை சமசுகிருதத்தில் இருந்து தமிழில் திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.[1] 1986 ஆம் ஆண்டு இறுதியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.[சான்று தேவை]
அப்போது குடியரசுத்தலைவராக இருந்த ஆர்.வெங்கடராமன், அவரது அலுவலக ஊழியர் ராஜன் வைத்திருந்த இந்தப் புத்தகத்தைப் பார்த்து அவரிடம் படித்துவிட்டு தருவதாக வாங்கிச் சென்றுள்ளார். அவ்வாறே படித்து முடித்து ராஜனிடம் திருப்பித் தருகையில் மொழி பெயர்ப்பு மிக அருமையாக உள்ளது அவருக்கு என் பாராட்டுதலை சொல்லுங்கள் என சொன்னார். மேலும் இதனை நல்ல இசைக் கலைஞர்களை தொடர்புகொண்டு ஒலிநாடாவாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சொன்னார். ராஜன் அவர்கள் குடியரசுத் தலைவரிடம், நீங்கள் சொன்னதை எழுத்துமூலமாக தந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என சொல்ல, குடியரசுத் தலைவர் அவ்வாறே ச. பார்த்தசாரதிக்கு கடிதம் அனுப்பினார்.[சான்று தேவை]
அதன்பின்னர் எம். எஸ். சுப்புலக்சுமியை தொடர்புகொள்ள, அவரும் பாட இசைந்து எச். எம். வி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழா 1992இல் சென்னை நாரத கான சபாவில், முன்னாள் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், தி. வே. கோபாலைய்யர் முன்னிலையில், அப்போதைய திருமலை தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலரால் வெளியிடப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்!, சங்கர் வெங்கட்ராமன், இந்து தமிழ், 2020 திசம்பர் 17