மிச்சிகன்-ஹுரோன் ஏரி
மிச்சிகன்-ஹுரோன் ஏரி என்பது சில சமயங்களில், மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என இரண்டு ஏரிகளாகக் கருதப்படும் நீர்ப் பரப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஏரியாகும். இது வட அமெரிக்கப் பேரேரிகளின் ஒரு பகுதியாகும். நீரியலின் படி இவை இரண்டும் ஒரே ஏரிகளாகும். இரண்டும் ஒரே 577 அடி (176மீட்டர்) உயரத்தில் உள்ளதுடன், இவற்றுக்கிடையில், மாக்கினாக் நீரிணை ஊடாக நீரோட்டமும் உண்டு. இந் நீரிணை 5 மைல்கள் (8.0 கிமீ) அகலமும், 120 அடி (37 மீ) ஆழமும் கொண்டது. மிச்சிகன்-ஹூரோன் ஒரே ஏரியாகக் கொள்ளப்படும்போது வட அமெரிக்கப் பேரேரிகளுள் மிகப் பெரியதாக இருப்பது மட்டுமன்றி, பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரியாகவும் ஆகின்றது. நீர்க் கொள்ளளவின் அடிப்படையில், 3,000 கனமைல்கள் (12,500 கிமீ3) சுப்பீரியர் ஏரி, 2,000 கனமைல்கள் (8,300 3) நீர்க் கொள்ளளவு கொண்ட மிச்சிகன்-ஹுரோன் ஏரியை விடப் பெரியதாகும். நீர்க் கொள்ளளவின் அடிப்படையில், மிச்சிகன்-ஹுரோன் ஏரி உலகின் நான்காவது பெரிய நன்னீர் ஏரியாகும்.