ஹெஸ்ஸிய மூசை
ஹெஸ்ஸிய மூசை அல்லது எசனிய மூசை (Hessian crucible) என்பது இடைக்காலத்துக்கும் மறுமலர்ச்சிக் காலத்துக்கும் இடையில் டாய்ச்லாந்தின் ஹெஸ்ஸன் பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒருவகையான பீங்கான் மூசை. மிக உயர்ந்த வெப்பநிலைகள், விரைவான வெப்பநிலை மாற்றங்கள், கடுமையான வினைப்பொருட்கள் போன்றவற்றைத் தாங்கும் திறனுக்காக அவை அறியப்பட்டன. அவை இரசவாதத்திலும் தொடக்ககால மாழையியலிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. மில்லியன் கணக்கான மூசைகள் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும், எசுக்காண்டினாவியாவுக்கும் அமெரிக்காவிலுள்ள காலனிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த மூசைகள் வெண்களிமண்ணை 1100 ℃ க்கும் மேலான வெப்பநிலையில் சுடுவதன் மூலம் உருவாக்கப்பட்டன.[1] அவற்றின் செய்முறையின் போது முல்லைட்டு எனும் ஒரு அலுமினிய சிலிக்கேட்டு உருவாவது இருபதாம் நூற்றாண்டில்தான் விளக்கப்பட்டது. ஹெஸ்ஸிய மூசைகளின் சிறப்பான பண்புகளுக்கு முல்லைட்டுகள் முதன்மைக் காரணிகளாகும்.[2] ஹெஸ்ஸனிலுள்ள குரோஸல்மெரோட என்ற சிற்றூர், இந்த வகை மூசைகளுக்கான முதன்மைத் தயாரிப்பு மையமாக இருந்தது.