ஹோலி (பஞ்சாப்)

பஞ்சாப் பகுதியின் ஹோலி, முல்தான் நகரிலுள்ள பிரகலாதபுரி கோவிலில் துவங்கிய பண்டிகையாகும்.[1][2] மூலப் பிரகலாதபுரி கோவில், முல்தான் நகரின் (கஷ்ய-பாப்புரா) அரசனான இரணியகசிபுவின் மகன் பிரகலாதனால் கட்டப்பட்டது.[3] இக்கோவில் பிரகலாதன் தன்னைக் காப்பாற்றத் தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரசிம்மருக்காகக் கட்டிய கோயில். [4][5][6][7] வசந்தத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும் ஹோலி அமைகிறது.[8][9]

பிரகலாதபுரிக் கோவிலின் இடிபாடுகள்
வண்ணப் பொடிகள் கடை-இந்தியா

ஹோலி இருநாட்களாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான முழுநிலவன்று ஹோலிகா தகனம் கொண்டாடப்படுகிறது. அடுத்த நாளான பஞ்சாபி நாட்காட்டியின் சேட் மாதத்தின் முதல் நாளில் ஹோலி கொண்டாடப்படுகிறது.[10]

சொற்பிறப்பியல்

தொகு

ஹோலி என்பது ஹோலா என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். ஹோலா என்பதன் பொருள் ”நல்ல அறுவடைக்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுதல்” ஆகும்.[11] அரைவேக்காட்டுச் சோளம் என்ற பொருள்கொண்ட ”ஹோலிகா” என்ற சொல்லோடு தொடர்புடையதாகவும் ’ஹோலி’ நம்பப்படுகிறது. பாதி வறுபட்ட பயிறு மற்றும் கரகரப்பான கோதுமை ஹோலி அன்று உண்ணப்படுகிறது.[12] பஞ்சாப் பகுதியில் ஹோலிக்கு இரண்டு மாதங்கள் கழித்துவரும் வைசாக் மாதத்தில்தான் கோதுமை அறுவடை செய்யப்படுகிறது. அதனால் இங்கு ஹோலியானது, வருகின்ற அறுவடைக்கு நன்றிநவிலும் பண்டிகையாகும்.

பிரகலாதபுரி கோவிலும் ஹோலிகா தகனமும்

தொகு
 
பிரகலாதன் முன் நரசிம்மரால் இரணியகசிபு வதக்கப்படுதல்
 
பிரகலாதனும் அவனது தாயும் வணங்கி நிற்க, நரசிம்மர் இரணியகசிபுவை நரசிம்மர் கொல்லும் காட்சி

மரபுவழிக் கதை:

பிரகலாதன் இறைவன் திருமாலின் பக்தன். திருமாலின் மீது அவன் கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் திருமால் அவனுக்குச் சிறப்பு சக்திகளை வழங்கினார். முல்தானின் அரசனும் பிரகலாதனின் தந்தையுமான இரணியகசிபு அனைவரும் தன்னையே இறைவனாக வணங்க வேண்டுமென்று ஆணையிட்டிருந்ததால் அவனுக்குத் தனது மகன் திருமாலை வணங்குவது பிடிக்கவில்லை.[8][13]

ஆத்திரமடைந்த இரணியகசிபு விஷமருந்தச் செய்தும், யானைகளின் காலால் இடறச் செய்தும், பாம்புகளுக்கிடையே அடைத்து வைத்தும் பிரகலாதனைக் கொல்ல முயற்சித்தான். அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போயின; பிரகலாதன் திருமாலின் அருளால் ஒவ்வொன்றிலுமிருந்தும் தப்பினான். இறுதியாக இரணியகசிபுத் தனது தங்கை ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகாவிடம் தீயால் பாதிக்கப்படாத ஒரு மாயப்போர்வை இருந்தது. அவள் அதனால் தன்னை மூடிக்கொண்டு பிரகலாதனை மடியிலமர்த்தியவாறு தீக்குள் இறங்கினாள்.[2] அப்போது ஒரு பெரிய காற்றுவீசியதில் போர்வை ஹோலிகாவிடமிருந்து விலகி பிரகலாதனை மூட, பிரகலாதன் தீயிலிருந்து தப்பினான்; ஹோலிகா தீயில் எரிந்து போனாள். ஹோலி நாளுக்கு முன்னாள் இரவில் ”ஹோலிகா தகனம்” என்றழைக்கப்படும் ஹோலிகாவின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்வுடன் பஞ்சாபில் ஹோலிப் பண்டிகை துவங்குகிறது.[8]

ஹோலிகா தீயில் எரிந்துகொண்டிருந்தபோது திருமால் நரசிம்ம வடிவில் (பாதி மனிதவுரு, பாதி சிங்கவுரு) தோன்றி இரணியகசிபுவை இரண்டாகப் பிளந்து கொன்றார். இந்நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே ஹோலியாகும். இது முல்தான் சூரிய கோவிலில் நடந்ததால் அக்கோயில் இந்நிகழ்வின் நினைவிடமாக உள்ளது.[2]

ஹோலாஷ்டக்

தொகு
 
ஹோலிகா தகனம்

இந்திய பஞ்சாபில், ஒன்பது நாட்கள் கொண்ட ஹோலாஷ்டக் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது.[14] ஹோலாஷ்டக் பண்டிகை ஹோலியன்று வண்ணப்பொடிகளுடனும் குலாலுடனும் முடிவடைகிறது. இப்பண்டிகை ஹோலியின் வருகையைத் தெரிவிப்பதாக உள்ளது. இப்பண்டிகை நாளிலிருந்து ஹோலிகா தகனத்திற்காக ஆயத்தங்கள் துவங்குகின்றன. [15]

ஹோலிகா தகனத்திற்கு எட்டு நாட்களுக்கு முன் அவ்விடம் புனிதநீர்கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. அங்கு பிரகலாதன், ஹோலிகாவைக் குறிக்க இரு குச்சிகள் ஊன்றப்படுகின்றன. அவற்றுக்கிடையே பசுமாட்டுச் சாண எரு, காய்ந்த சுள்ளிகள், புற்கள், விறகுகள் வைக்கப்படுகின்றன. ஹோலாஷ்டக் நாளிலிருந்து ஹோலிகா தகன நாள் வரை வைக்கப்படும் எரிபொருட்கள் பெருங்குவியலாக சேர்ந்துவிடுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட எரிபொருட்கள் ஹோலிகா தகனத்தன்று எரியூட்டப்படுகின்றன. அப்போது சிறியளவில் ஹோலி வண்ணங்களும் தூவப்படுகிறது.[16] மகாராசா இரஞ்சித் சிங்கால் ஒருவாரம் அனுசரிக்கப்பட்ட ஹோலி, லாகூரின் பாரம்பரிய ஹோலி கொண்டாட்டமாக மாறியது.[17]

ஹோலியும் வசந்தமும்

தொகு

ஹோலி பஞ்சாப் பகுதியில் குளிர்கால முடிவைக் குறிக்கிறது.[18]

பஞ்சாப் பகுதியில் குளிர்காலம் இரு பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது:

  • மாகர், போ (நவம்பர்-ஜனவரி) மாதங்களில் - ஹேமந்த்
  • மாக், பகன் (ஜனவரி-மார்ச்) மாதங்களில் - ஷிஷிர்

ஷிஷிர் காலத்தின் முடிவாக ஹோலிகா தகனமும், வசந்த காலத் துவக்கமாக ஹோலியும் அமைகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. A White Trail: A Journey into the heart of Pakistan's Religious Minorities by HAROON KHALID [1]
  2. 2.0 2.1 2.2 "Sohaib Arshad The Friday Times 31 12 2010". Archived from the original on 2018-11-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26.
  3. Syad Muhammad Latif (1963). The early history of Multan. p. 3,54. Kasyapa, is believed, according to the Sanscrit texts, to have founded Kashyapa-pura (otherwise known as Multan
  4. Gazetteer of the Multan District, 1923-24 Sir Edward Maclagan, Punjab (Pakistan). 1926. pp. 276–77.
  5. Imperial rule in Punjab: the conquest and administration of Multan, 1818-1881 by J. Royal Roseberry. pp. 243, 263.
  6. All the year round , Volume 51. Charles Dickens. 1883.
  7. Temple of Prahladpuri-Multan Survey & Studies for Conservation of Historical Monuments of Multan. Department of Archeology & Museums, Ministry of Culture, Government of Pakistan
  8. 8.0 8.1 8.2 "Haroon Khalid The Friday Times 15 04 2011". Archived from the original on 2013-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26.
  9. Temple of Prahladpuri Department of Archaeology & Museums Ministry of Culture, Government of Pakistan [2] பரணிடப்பட்டது 2015-01-07 at the வந்தவழி இயந்திரம்
  10. Fuller, Christopher John. (2004) The Camphor Flame: Popular Hinduism and Society in India. Princeton University Press [3]
  11. About Hinduism by Gyan Rajhans
  12. Bhavan's Journal, Volume 14, Issues 14-26 Bharatiya Vidya Bhavan 1968
  13. Legend of Ram–Retold By Sanujit Ghose
  14. [4] The Tribune 25 February 2012
  15. [5][தொடர்பிழந்த இணைப்பு] Himachal News Kullu Celebrates Brij Ki Holi Dr Dev Kanya Thakur 8 January 2015
  16. http://www.astrobix.com/festivals_of_india/holi/holi_holaastak.aspx
  17. [6] The Sunday Tribune Holi on Canvas Kanwarjit Singh Kang 13 March 2011
  18. A Different Springtime Rite Wall Street Journal
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோலி_(பஞ்சாப்)&oldid=3573875" இலிருந்து மீள்விக்கப்பட்டது