உச்சிட்ட கணபதி
உச்சிட்ட கணபதி (சமக்கிருதம்: उच्छिष्ट-गणपति, Ucchiṣṭa Gaṇapati) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும்.
திருவுருவ அமைப்பு
தொகுஇந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.[1] வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.[2] உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும். பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும். மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு. இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ Rao pp. 53-5
- ↑ Satguru Sivaya Subramuniyaswami. Loving Ganesha. Himalayan Academy Publications. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934145-17-3.