1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வு

1707ன் சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வு (Scilly naval disaster of 1707) என்பது, 22 அக்டோபர் 1707ல் இங்கிலாந்து அரச கடற்படையின் நான்கு போர்க் கப்பல்கள் சில்லித் தீவுகளுக்கு அருகே மோசமான காலநிலையில் அகப்பட்டு இழக்கப்பட்டதைக் குறிக்கிறது. மோதிச் சேதமடைந்த கப்பலில் இருந்த 1,550 படையினர் உயிரிழந்தனர். இது, இந்த நிகழ்வை பிரித்தானியத் தீவுகளின் வரலாற்றில் மிக மோசமான கடற் துன்பியல் நிகழ்வு ஆக்கியது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணம் கப்பல்களின் இருப்பிடத்தை மாலுமிகளால் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் இருந்ததேயாகும்.[1]

இத் துன்பியல் நிகழ்வைக் காட்டும் 18ம் நூற்றாண்டுப் படம் ஒன்று. எச்.எம்.எசு அசோசியேசன் நடுவில் உள்ளது
நிகழ்வு சுருக்கம்
நாள்22 அக்டோபர் 1707
சுருக்கம்கப்பல் விபத்து
இடம்சில்லி தீவுகள், கோர்ண்வால், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
49°51′56″N 6°23′50″W / 49.86556°N 6.39722°W / 49.86556; -6.39722
காயமுற்றோர்13
உயிரிழப்புகள்1,550
தப்பியவர்கள்13
இயக்கம்அரச கடற்படை
சேருமிடம்போர்ட்ஸ்மவுத், இங்கிலாந்து

பின்னணி தொகு

1707 கோடையில், எசுப்பானிய வாரிசுரிமைக்கான போரின்போது, சவோயின் இளவரசர் யூசீன் என்பவரின் தலைமையிலான பிரித்தானியா, ஆசுத்திரியா, ஒல்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள் பிரான்சின் தூலோன் துறைமுகத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்ற முயற்சி செய்தன. யூலை 29 முதல், ஆகத்து 21 வரை இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது பெரிய பிரித்தானியா, கப்பற்படைத் தொகுதியொன்றை அனுப்பியது. பிரித்தானியக் கடற்படையின் தலைமைத் தளபதி சர் கிளவுட்சிலி சோவெல்லின் தலைமையில் கப்பல்கள் நடுநிலக்கடற் பகுதிக்குச் சென்று தூலோனைத் தாக்கியதுடன், முற்றுகையில் அகப்பட்டிருந்த பிரான்சின் கப்பற் படைக்கும் சேதங்களை விளைவித்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கூட்டுப்படைகளின் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை. கூட்டுப் படைகள் பிரான்சு-எசுப்பானியப் படைகளிடம் தோல்வியுற்றன. நாடு திரும்புமாறு விடுக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் சிப்ரால்டரில் இருந்து போர்ட்சுமவுத்துக்குப் புறப்பட்டன. சொவெல்லின் தலைமையின் கீழ் பதினைந்து வரிசைக் கப்பல்களும், நான்கு வெடிக்கப்பல்களும், ஒரு சுலூப் வகைக் கப்பலும், ஒரு பாய்மரப் படகும் இருந்தன.[2]

விபத்து தொகு

சோவெல்லின் 21 கப்பல்களும் செப்டெம்பர் 29ம் தேதி சிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்டன. எச்.எம்.எசு அசோசியேசன் அவரது தலைமைக் கப்பலாக இருந்தது. எச்.எம்.எசு ரோயல் ஆன் வைசு அட்மிரல் சர் சார்ச் பிங்கின் தலைமைக் கப்பலாகவும், எச்.எம்.எச்ய் டோர்பே ரியர் அட்மிரல் சர் யோன் நேரிசின் தலைமைக் கப்பலாகவும் இருந்தன.[2] பயணம் முழுவதும் மோசமான காலநிலை இருந்ததுடன், தொடர்ச்சியான திடீர்ப் புயல்களையும், கடுங் காற்றையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. கப்பல்கள் அத்திலாந்திக்கை விட்டு நீங்கி பிசுக்கே குடாவைக் கடந்து இங்கிலாந்து நோக்கிச் செல்லும்போது, காலநிலை மேலும் மோசமாகியதுடன், கடுங்காற்று கப்பல்களைத் திட்டமிட்ட பாதையில் இருந்து வேறு திசை நோக்கித் திருப்பியது. இறுதியாக பழைய முறையின்படி 22 அக்டோபர் 1707 (தற்கால முறை 2 நவம்பர் 1707) இரவு கப்பல்கள் ஆங்கிலக் கால்வாயின் வாயிலில் நுழைந்தன. சேவெல்லின் மாலுமிகள் தாம் தமது பயணத்தின் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாக நம்பினர். கப்பல் தொடர் பிரிட்டனியின் கரைக்கு அப்பல் உள்ள தீவு வெளியரணான உசாந்துக்கு மேற்கே பாதுகாப்பாகச் செல்வதாக அவர்கள் எண்ணினர். ஆனால், கடுமையான காலநிலையாலும், தமது இருப்பிட நெடுங்கோட்டைச் சரியாகக் கணிக்க முடியாமையினாலும் கப்பல்கள் பாதையை விட்டு விலகி சிலித் தீவுகளை நெருங்கியதை அவர்கள் உணரவில்லை.[3] இத்தவறு திருத்தப்படுவதற்கு முன்னரே நான்கு கப்பல்கள் பாறைகளில் மோதி உடைந்து கடலுள் மூழ்கின.

மேற்கோள்கள் தொகு