2024 கவரைப்பேட்டை தொடருந்து விபத்து

கவரைப்பேட்டை தொடருந்து விபத்து (2024 Kavaraipettai Train Accident) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரைப்பேட்டை என்ற இடத்தில் நிகழ்ந்த தொடருந்து விபத்து ஆகும்.[1] 11 அக்டோபர் 2024 இல் இரவு 8.27 மணியளவில் கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து பீகார் மாநிலம், தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு இரயில் (வண்டி எண்:12578) திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 75 கி.மீ வேகத்தில் வந்த ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்தது.

2024 கவரைப்பேட்டை தொடருந்து விபத்து
தேதி12 அக்டோபர் 2024
இடம்கவரைப்பேட்டை தொடருந்து நிலையம்
ஆள்கூறுகள்13°21′41″N 80°08′32″E / 13.3615°N 80.1423°E / 13.3615; 80.1423
நாடுஇந்தியா
விபத்தின் வகைநின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில் மோதல்
காரணம்தொழிநுட்பக் கோளாறு (விசாரிக்கப்படுகிறது)
புள்ளிவிவரம்
புகைவண்டிகள்1
இறப்பு0
காயம்>19
சேதம்13 இரயில் பெட்டிகள் சேதம்

சேத விவரம்

தொகு

இந்த விபத்தில் 13 தொடருந்துப் பெட்டிகள் தடம் புரண்டன. அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன.[2] இரு இரயில் பெட்டிகள் தீப்பற்றி எறிந்தன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.[3] இவ்விபத்து காரணமாக 18 தொடருந்து சேவைகளை இரத்து செய்வதாக தென்னக இரயில்வே அறிவித்தது.[4]

விசாரணைக் குழு

தொகு

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான தேசிய புலணாய்வு நிறுவன அதிகாரிகளும் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.[5] மேலும் இவ்விபத்து தொடர்பாக விசாரிக்க இரயில் சாரதி உள்ளிட்ட தனது 13 ஊழியர்களை நேரில் வருகை தந்து விளக்கமளிக்க தென்னக இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.[6]

சீரமைப்புப் பணிகள்

தொகு

விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம்புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் பாரந்தூக்கும் இராட்சத இயந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டன. 12.10.2024 இரவுக்குள் 2 ரயில் பாதைகளும், 13.10.2024 காலைக்குள் மற்ற 2 பாதைகளும் சீர் செய்யப்பட்டு இரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ஊடகங்கள் தெரிவித்தன.[7]. விபத்து நடைபெற்ற இடத்துக்கு அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.[8]

விபத்துக்கான காரணம்

தொகு

இந்த அதிவிரைவு இரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சமிஞ்ஞை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, பலமான அதிர்வு உண்டாகி, கிளைப் பாதையில் (லூப் லைனில்) செல்லத் தொடங்கியது. ஆதலால் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலில் மோதி விபத்து ஏற்பட்டதாக இரயில்வே வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. [9] இருப்பினும் விசாரணை அமைப்புகளின் புலணாய்வுகளுக்குப் பிறகே விபத்துக்கான அனைத்து காரணங்களும் தெரிய வரும்.

வழக்குகள்

தொகு

கவனக்குறைவாக செயல்படுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், காயங்கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கொருக்குப்பேட்டை தொடருந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தொடருந்து ஓட்டுநர், சமிஞ்ஞை ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்கள், தொழிநுட்ப பணியாளர்கள், தண்டவாளப் பராமாிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேரிடம் காவல்துறை விசாரணை செய்து வந்தனர்.[10][11] விசாரணையில் தொடருந்து தடங்களில் இருந்த திருகு மற்றும் திருகாணிகள் கழட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பிரிவை (ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) இவ்வழக்கில் ரயில்வே போலீசார் கூடுதலாக சேர்த்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.[12]


மேற்கோள்கள்

தொகு