அகிரிகோலா சார்சியஸ்

அகிரிகோலா சார்சியஸ் (Georgius Agricola, 24 மார்ச் 1494 – 21 நவம்பர் 1555) “கனிமவியலின் தந்தை” என்று போற்றப்படும் செருமனி அறிவியல் அறிஞர். ஆராய்ச்சியாலும், வளர்ச்சியாலும் அறிவியல் கட்டுப்படுத்தப்படுகிறதேயன்றி அப்பாலைச் (Metaphysical) சிந்தனைகளால் உருவாக்கப்படுவதில்லை என உணர்ந்த இயற்கை அறிவியலார்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.[1][2][3]

அகிரிகோலா சார்சியஸ்

பிறப்பு

தொகு

இவர் 1494 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் 24 ஆம் நாளன்று பிறந்தார். அகிரிகோலா சார்சியஸ் என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும்.

படிப்பு

தொகு

1514 இல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய பாடங்களை இலெப்சிக் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அந்த காலத்து வழக்கப்படி அவர் தமது பெயரை இலத்தீன் வடிவில் அமைத்துக் கொண்டார். 1518ல் இருந்து 1522 வரை சுவிக்கா என்னும் பள்ளியில் இலத்தீனையும், கிரேக்கப் பாடங்களையும் கற்றார். பின்னர் அவர் இலெப்சிக்குக்குத் திரும்பி மருத்துவம் படிக்க தொடங்கினார். ஆனால் அங்கு நடந்த இறையியல் சண்டைகளால் பல்கலைக் கழகம் சரிவர நடக்காததால் அவரால் தொடர்ந்து அப்படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. காலம் முழுவதும் கத்தோலிக்கக் கிறித்துவராக இருந்த இவர் நல்லதொரு சூழ்நிலை நிலவிய இத்தாலி நாட்டுக்கு 1523இல் சென்றடைந்தார். அங்கு இவர் மருத்துவம், இயற்கை அறிவியல், தத்துவம் ஆகிய பாடங்களை பலோக்னா, பாடுவா ஆகிய இடங்களில் கற்றார். வெனிஸ் நகரத்தில் தமது மருத்துவ ஆய்வகப் படிப்புகளை முடித்தார்.

வெனிஸ் நகரத்தில் அல்டைன் அச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து “காலென்” என்பவரின் மருத்துவ நூல் தொகுப்பைத் தயாரித்தார். இது 1525-ல் வெளியிடப்பட்டது. இந்த பணியில் இவர் தாமஸ் மூர் மற்றும் அவருடைய செயலாளர் ஆக இருந்த சான் கிளமண்ட் என்பவருடன் இணைந்து செயல்பட்டார். மூரினுடைய “கற்பனை வாதம்” (உட்டோப்பியா) என்ற நுால் இவரை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். இது இவர் சாக்சன் சுரங்க மாவட்டத்தில் இருந்த போது சட்டத்தையும் சமூக வழக்கங்களையும் படிக்க உதவியது. உடலியலில் மாபெரும் அறிஞரான எராஸ்மஸைச் சந்தித்து அவரது நண்பர் ஆனார். ஏராஸ்மாஸ் அக்ரிகோலாவைப் பல நுால்கள் எழுதும்படி தூண்டிவிட்டார். இவர் ஏராஸ்மஸின் நுால்கள் பலவற்றை வெளியிட்டார். அக்ரிகோலாவின் கனிம இயல் நூலான பெர்மான்னஸ் என்ற நுாலுக்கு ஏராஸ்மஸ் முன்னுரை எழுதினார். அக்ரிகோலா, மூரும் பிற மூன்று அறிஞர்களுடன் மட்டுமே இம்மதிப்பைப் பெற்றார்.

1526 இல் இவர் சாக்சனுக்குத் திரும்பி அங்கு 1527 முதல் 1533 வரை ஜோக்கிம்ஸ்தால் என்ற நகரில் நகர உடலியல் மருத்துவராகப் பணி புரிந்தார். இந்த நகரம் ஐரோப்பாவில் உள்ள உலோகக் கனிமங்கள் செரிந்த சுரங்கங்கள் நிறைந்த ஒரு மாவட்டத்தில் உள்ளது. கனிமங்களில் இருந்து புதிய மருந்தினங்களைக் கண்டறிய அந்த மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சுரங்கங்களுக்கும் உருக்காலைகளுக்கும் சென்று நன்கு கல்வி கற்ற சுரங்க இயலாளர்களுடனும் பழகினார். சுரங்க இயலின் பழைய நுாலாசிரியர் எழுதிய நுால்களை எல்லாம் கற்றறிந்தார். இந்தப் பழக்கம் இவருடைய பிற்கால வாழ்க்கையையும், நுால்களையும் உருவாக்க உதவியது. பெர்மான்னஸ், சிவேடிரி மெட்டாலியா என்ற இவருடைய நுால்களில் இந்த அறிவு சுடர்விட்டுத் தெறிப்பதைக் காணலாம்.

இவருடைய நுாலில் சுரங்கத் தொழில் நோய்கள் பற்றிய பல குறிப்புகளைக் காணலாம். இவர் மிகத் தலைசிறந்த உடலியல் மருத்துவராகச் செயல்பட்டதால் 1532ல் செம்நிட்ஸ் நகரின் நகர உடலியல் மருத்துவர் ஆகி வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார். இவர் கீழ்கண்ட பெயர் பெற்ற நுால்களை எழுதினார். அவை டிரிமெட்டாலியா 12 பகுதிகள் (சுரங்க இயல், உலோக இயல், புவி பொதி இயல் பற்றியவை), டிநேச்சுரா ஃபாசிலியம் பத்து தொகுதிகள் (கனிமவியல் பற்றியன), டிஆர்டுயட் காளிஸ் சப்டிடரான்யி ஓரம் 5 தொகுதிகள் (புவிபொதியியல் பற்றியன) என்பனவாகும்.

இவர்தம் 52ஆவது வயதில் பொது வாழ்க்கையில் பர்காவாக (நகரமன்ற உறுப்பினர்) ஈடுபடத் தொடங்கினார். பின்னர் செம்நிட்ஸ் பர்கோமாஸ்டராக (நகரத் தலைவர்) உயர்ந்தார். அமெரிக்கச் சுரங்கப் பொறியாளர் ஹெர்பர்ட் ஹீவர் (பின்னர் அமெரிக்க ஒன்றிய நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆனவர்) இவருடைய டிரிமெட்டாலியா என்ற நுாலை 1912இல் மொழி பெயர்த்தார். அறிவியலின் செய்முறை அணுகுமுறையைக் கண்டுபிடித்த முன்னோடி அக்ரிகோலாதான் என இவர் தமது நுாலில் பாராட்டிஎழுதி உள்ளார்.

உசாத்துணைகள்

தொகு
  • Encyclopedia. Britannica, Micropedia, vol.1, 16th edition
  • Encyclopedia. Britannica,lnc., Chicago, 1985
  • அறிவியல் களஞ்சியம் தொகுதி ஒன்று தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Marshall, James L.; Marshall, Virginia R. (Autumn 2005). "Rediscovery of the Elements: Agricola". The Hexagon (Alpha Chi Sigma) 96 (3): 59. பன்னாட்டுத் தர தொடர் எண்:0164-6109. இணையக் கணினி நூலக மையம்:4478114. https://chemistry.unt.edu/sites/default/files/users/owj0001/agricola.pdf. பார்த்த நாள்: 7 January 2024. 
  2. "Georgius Agricola". University of California - Museum of Paleontology. பார்க்கப்பட்ட நாள் April 4, 2019.
  3. Rafferty, John P. (2012). Geological Sciences; Geology: Landforms, Minerals, and Rocks. New York: Britannica Educational Publishing, p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781615305445
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிரிகோலா_சார்சியஸ்&oldid=3893567" இலிருந்து மீள்விக்கப்பட்டது