அகுரி

பார்சி மக்களால் உருவாக்கப்படும் முட்டை உணவு

 

அகுரி
தக்காளி மற்றும் ரொட்டியுடன் பரிமாறப்படும் அகுரி.
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமேற்கு இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்வதக்கிய முட்டை

அகுரி என்பது இந்தியாவின் பார்சி மக்களால் செய்யப்படும் ஒரு வகை முட்டை உணவாகும். இதில் முட்டையுடன் மசாலாக்கள் சேர்த்து வதக்கப்பட்டு காரமான சுவையுடன் செய்யப்படுகிது. [1] [2] [3] அகுரியில் முட்டையானது மிதமான சூட்டில் வழிந்தோடும் வகையில் பாதி வெந்த நிலை வரை சமைக்கப்படுகிறது; முழுவதும் வேகுமாறு சமைக்கப்படுவதில்லை. இதில் உணவின் முதன்மைச் சுவைக்காக வதக்கிய வெங்காயம் சேர்க்கப்படுகிறது. அதனுடன் இஞ்சி, கொத்தமல்லி, நறுக்கிய மிளகாய் மற்றும் கருப்பு மிளகு போன்ற மசாலாக்களும் தூவப்படுகின்றன. [2] நவீன காலத்தில் அகுரியுடன் பாலாடைகளைச் சேர்க்கும் வழக்கமும் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும் வெவ்வேறு வகைகளில் அகுரியைச் சமைக்கின்றனர்.[4] அதில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் வேறுபட்டாலும் அதை சமைக்கப்படும் நிலையானது (பாதி வேகவைத்த நிலை) ஒரே மாதிரியாக உள்ளது. அகுரியைச் சமைப்பதற்கு சில நிமிடங்களே ஆகும். அகுரி பாரம்பரியமாக பாவ் ரொட்டி அல்லது இரட்டை ரொட்டியுடன் அல்லது தவா பாராத்தாவுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. தற்காலத்தில் சோறு போன்ற பல்வேறு வகை முதன்மை உணவுகளுடன் துணைக் கறியாகச் சேர்த்து சாப்பிடும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது.

அகுரியின் அதிக பிரபலமில்லாத வகை பருச்சி அகுரி ஆகும், இதில் மற்ற மசாலாப் பொருட்களுடன் கூடுதலாக முந்திரி, பாதாம் கொட்டைகள் மற்றும் உலர் திராட்சை போன்ற உலர் பழங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உணவு குஜராத்தில் உள்ள பருச் நகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது, எனவே இந்தப் பெயரைப் பெற்றது.

இது தவிர லீலா லாசன் அகுரி வகையும் சில பகுதிகளில் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த வகை அகுரி குளிர்காலங்களில் செய்யப்படுகிறது இதில் முட்டையுடன் அதிக அளவு லீலா லாசன் (பச்சைப் பூண்டு பற்கள்) சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முட்டைக் கலவையுடன் சேர்த்து சமைக்கப்படுகின்றன.[5]

முட்டை புர்ஜி என்பது இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில் சாப்பிடப்படும் இதே போன்ற ஒரு முட்டை உணவாகும். அகுரி, முட்டை புர்ஜியில் பயன்படுத்தப்படும் உட்பொருட்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் சமைக்கும் முறை வேறுபடுகிறது. இந்திய வதக்கிய முட்டை வகை உணவுகளை நன்கு அறிந்தவர்கள், முட்டை புர்ஜியும் அகுரியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை ஆனால் சுவையில் வேறுபட்ட உணவுகள் என்று தெரிவிக்கின்றனர்.

அகுரி உணவுகள் சேமித்து வைப்பதற்கு ஏற்றவையல்ல, இதனை சமைத்த உடனே பரிமாறி சாப்பிட வேண்டும். தாமதமாகச் பரிமாறினால் முட்டை உலர்ந்து தண்ணீர் விடுகிறது. அகுரியை மீண்டும் சூடாக்குவது இதன் சுவையைப் பாதிக்கிறது. ஏனெனில் பாதி வெந்த நிலையில் உள்ள முட்டை மீண்டும் சூடாக்கப்படும் போது நன்கு சமைக்கப்பட்டு விடுவதால் அகுரியின் சுவை முட்டை புர்ஜியின் சுவைக்கு மாறிவிடுகிறது.

உசாத்துணைகள் தொகு

  1. "Akuri (Spiced Scrambled Eggs)".
  2. 2.0 2.1 Some like it hot: spicy favorites from the world's hot zones. https://archive.org/details/isbn_9781558322691. 
  3. "A Caspian experience Chef's Corner". http://www.hindu.com/mp/2007/09/08/stories/2007090852480300.htm. 
  4. https://www.archanaskitchen.com/akuri-recipe-parsi-style-seasoned-scrambled-eggs-recipe. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. https://www.archanaskitchen.com/akuri-recipe-parsi-style-seasoned-scrambled-eggs-recipe. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுரி&oldid=3885596" இலிருந்து மீள்விக்கப்பட்டது