அடால்ஃப் எங்ளர்
எயின்ரிச் கசுடாவ் அடால்ஃப் எங்ளர் (Heinrich Gustav Adolf Engler) என்பவர் 25 மார்ச்சு 1844 – முதல் 10 அக்டோபர் 1930 வரையிலான காலத்தில் வாழ்ந்த செருமன் நாட்டு தாவரவியல் அறிஞர் ஆவார். தாவரவகைப்பாட்டியல் மற்றும் தாவரப்புவியியல் ஆய்வுகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.
அடால்ஃப் எங்ளர் Adolf Engler | |
---|---|
பிறப்பு | 25 மார்ச்சு 1844 புருசிய இராச்சியம், சாகன் |
இறப்பு | அக்டோபர் 10 1930 பெர்லின், செருமனி |
தேசியம் | செருமன் |
துறை | தாவரவியல், தாவர வகைப்பாட்டியல் |
கல்வி கற்ற இடங்கள் | பிரசுலாவ் பல்கலைக் கழகம் |
அறியப்படுவது | தாவரவகைப்பாட்டியல் மற்றும் தாவரப்புவியியல் |
விருதுகள் | லின்னேயன் பதக்கம் |
இக்காலத்திலும் கூட தாவர வகைப்படுத்தலின் எங்ளர் வகைப்பாடு பல மூலிகை ஆய்வர்களாலும் தாவரவியல் வல்லுநர்களாலும் பல கையேடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாசிகள் தொடங்கி பூக்கும் தாவரங்கள் வரை விரிவான முறையில் வகைப்படுத்த வகை செய்யும் ஒரே வகைப்பாட்டு முறையாக எங்ளர் வகைப்பாட்டு முறை கருதப்படுகிறது [1].
1889-1921 ஆம் ஆண்டு வரை பெர்லினில் உள்ள தாவரவியல் பூங்காவின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் எங்ளர் பணியாற்றினார். அப்போது இவருக்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள உயிருள்ள தாவரங்களையும் வாழ்ந்து மடிந்த தொல்லுயிர்ப்படிவத் தாவரங்களையும் நுணுகி ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது, இந்தக் கால இடைவெளியின் போது தாவரப்புவியியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார். இவருடைய புத்தகங்களை விளக்குவதற்கு பல்வேறு ஓவியர்களைப் பயன்படுத்தினார். குறிப்பாக 1864-1939 காலத்தில் வாழ்ந்த யோசப் போல் என்ற மரச்செதுக்கு ஓவியர் முக்கியமானவர் ஆவார். ஓவியர் போலின் திறமை எங்ளரின் கவனத்தை ஈர்த்தது, இவர்களின் 40 ஆண்டுகால ஒத்துழைப்பும் துவங்கியது. இவர்தம் நுண்ணிய தொடர்ந்த ஆராய்ச்சித் திறமை காரணமாக உலகில் உள்ள பலவகையான தாவரங்களையும் இனம் கண்டு பிடிக்கத் தகுந்ததொரு விரிவான இயற்கை வகைப் பாட்டுத் தொகுப்பையும் உருவாக்கினார். தி நேச்சரலிசென் பிளான்சென் என்ற இவ்வகைப்பாட்டுத் தொகுப்புக்குத் தேவையான 33000 வரைபடங்களை போல் வரைந்து கொடுத்தார். டேசு பிப்ளான்சென்ரெய்ச்சு (1900–1953), டைபிப்ளான்சென்வெல்ட்டு ஆப்ரிக்காசு (1908–1910), மோன்போர்டியன் ஆப்ரிக்கானிச்சர் (1898-1904) மற்றும் பல ஓவியர்களையும் இவர் பயன்படுத்திக் கொண்டார் [2].
வாழ்க்கை வரலாறு
தொகுஎயின்ரிச் கசுடாவ் அடால்ஃப் எங்ளர் செருமானிய நாட்டில் உள்ள சாகன் என்னும் இடத்தில் 1844 இல் பிறந்தார். 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் பெர்லினில் இறந்தார்.
1866 ஆம் ஆண்டில் பிரசுலாவ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் சிலகாலம் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராக இருந்தார். 1889-1921 ஆம் ஆண்டு வரை பெர்லினில் உள்ள தாவரவியல் பூங்காவின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்போது இவருக்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள உயிருள்ள தாவரங்களையும் முன்னர் வாழ்ந்து மடிந்த தொல்லுயிர்ப்படிவத் தாவரங்களையும் நுணுகி ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது.
உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த இவர் தாவரப் பரவலின் அறிந்து தன்னுடைய அறிவைப் பெருக்கிக் கொண்டார்.
பணிகள்
தொகுஉறவுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடு, செயல்திறம் ஆகியவற்றை விளக்கும் படிமலர்ச்சிக் கருத்துக்களுக்கு இணைந்த ஒர் இயற்கை வகைப்பாட்டுத் தொகுப்பை உருவாக்கினார். தாவரங்கள் அனைத்தையும் குடும்பங்கள், துறைகள் என வகைப்படுத்தினார். நுட்பமான விவரங்களைத் தருவதிலும் பெரும் தொகுதிகளின் பெயரிடுமுறையிலும் இவரின் வகைப்பாடு சிறந்திருக்கிறது. இவரின் வகைப்பாட்டியல் தொகுப்பை முதன் முதலில் உண்டான மரபுவழி வகைப்பாடு எனக்கூறலாம்.
பரிசும் பெருமையும்
தொகு1913 ஆம் ஆண்டில் இவருக்கு லின்னேயன் பதக்கம் வழங்கப்பட்டது. அனைத்துலக தாவர வகைப்பாட்டியல் குழுமம் 1986 இல் தாவர வகைபாட்டியலில் சிறந்தவர்களுக்கு வழங்க எங்களர் பதக்கம் என்ற பரிசை உருவாக்கி நிர்வகிக்கிறது [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Woodland, Dennis W. (1997). Contemporary Plant Systematics (2nd ed.). Andrews University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-883925-14-2.
- ↑ 10. about the illustrators and illustrations பரணிடப்பட்டது சூலை 4, 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ IAPT 2016.
புற இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் அடால்ஃப் எங்ளர் பற்றிய தரவுகள்
- Botanische Jahrbücher für Systematik, Pflanzengeschichte und Pflanzengeographie
- Englera
- Review of 'Vegetation der Erde'
- Adolf Engler Encyclopædia Britannica
- Notes and News: A new professor of botany in Berlin. The Medical Age vol. vii 1889 p. 379
- "Search for 'Engl.'". International Plant Names Index (IPNI). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ; Harvard University Herbaria & Harvard Library; Australian National Botanic Gardens. பார்க்கப்பட்ட நாள் March 25, 2008.
- பொதுவகத்தில் Das Pflanzenreich தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Die naturlichen Pflanzenfamilien தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.