அட்டப்பாடி மது கொலை வழக்கு
அட்டப்பாடி மது கொலை வழக்கு என்பது கேரள மாநிலம், அட்டப்பாடியில் அரிசி திருடியதாக கும்பலால் அடித்து பழங்குடியின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்காகும். [1] மது கைகள் கட்டப்பட்டு அழைத்து வரப்படும் காணொளியும், மது தாக்கப்படும் காணொளியும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நாட்டின் கவனம் பெற்றது. மதுவின் இறப்பினை செய்தி ஊடகங்கள் பேசு பொருளாக மாற்றினர். இதனால் அட்டப்பாடி மது கொலை வழக்கு முக்கியத்துவம் பெற்றது.
நிகழ்வு
தொகுஅட்டப்பாடி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு மது என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர் குகையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு பலசரக்கு கடை ஒன்றில் அரிசி திருடியதாக கட்டிவைத்து மது தாக்கப்பட்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வழக்கு
தொகுமதுவை அடித்துக் கொன்ற வழக்கில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதுதொடர்பான வழக்கை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பு
தொகுஇந்த வழக்கில் இறுதி வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 4, 2023 இல் 14 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. இந்திய தண்டனை சட்டம் 304 (2) பிரிவின் கீழ் குற்றவாளிகாக அவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
உசைன், மரைக்காயர், ச்ம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜுமோன், முனீர் சஞ்சீவ், சதீஷ், ஹரீஷ் மற்றும் பிஜு உள்ளிட்டோரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11 ஆம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22இல் மது கொல்லப்பட்டமைக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2013 ஏப்ரல் 4 இல் நீதிமன்றம் தீர்ப்பு கிடைத்தது.
தண்டனை விவரம்
தொகு- குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.
- 16 ஆவது குற்றவாளியான முனீருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும்.
- மற்ற 13 குற்றவாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம். இந்த ஒரு லட்சம் அபராதத்தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும்.[2]