அதிபத்த நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'பரதவர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்[1][2]. இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள்.[3]

அதிபத்த நாயனார்
அதிபத்த நாயனார்
பெயர்:அதிபத்த நாயனார்
குலம்:பரதவர்
பூசை நாள்:ஆவணி ஆயில்யம்
அவதாரத் தலம்:திருநாகை
முக்தித் தலம்:திருநாகை

இவரை "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.

சொல்லிலக்கணம்தொகு

அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.

வாழ்க்கைப் புராணம்தொகு

சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.

ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியோடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.

அதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபக்தரின் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்.[4]

தங்க மீன் அர்ப்பணிக்கும் விழாதொகு

ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.[5][6]

குரு பூசைதொகு

அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.[7]

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (19 ஜனவரி 2011). அதிபத்த நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1365. 
  2. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 
  3. http://www.shaivam.org/baktas/nayanmar/nayanmar-athipathar.htm பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம் அதிபத்த நாயனார் புராணம் - ஆறுமுகநாவலர் சைவம் ஆர்க் தளம்
  4. "Kayaroganeswarar Temple : Kayaroganeswarar Kayaroganeswarar Temple Details - Kayaroganeswarar- Nagapattinam - Tamilnadu Temple - காயாரோகணேஸ்வரர்". temple.dinamalar.com.
  5. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3349&Cat=3 கடலில் உற்சாக திருவிழா : சிவனுக்கு தங்க மீன் அர்ப்பணிப்பு - தினகரன் நாளிதழ் 2013-09-04
  6. http://dinamani.com/edition_trichy/article1266920.ece?service=print நாகையில் அதிபத்த நாயனார் ஐதீக விழா தினமணி நாளிதழ் Sep 14, 2012
  7. "அதிபத்த நாயனார்". தினமலர்.

வெளியிணைப்புதொகு

  1. அதிபத்தநாயனார் புராணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிபத்த_நாயனார்&oldid=3395131" இருந்து மீள்விக்கப்பட்டது