அந்தேருஸ் (திருத்தந்தை)

235 முதல் 236 வரை உரோமின் ஆயராகவும் திருத்தந்தையாகவும் இருந்தவர்

திருத்தந்தை அந்தேருஸ் (Pope Anterus) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 235இலிருந்து 236 வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை போன்தியன் ஆவார். திருத்தந்தை அந்தேருஸ் கத்தோலிக்க திருச்சபையின் 19ஆம் திருத்தந்தை ஆவார்.

திருத்தந்தை அந்தேருஸ்
Pope Anterus
19ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்நவம்பர் 21, 235
ஆட்சி முடிவுசனவரி 3, 236
முன்னிருந்தவர்போன்தியன்
பின்வந்தவர்ஃபேபியன்
பிற தகவல்கள்
இயற்பெயர்அந்தேருஸ்
பிறப்புதெரியவில்லை;
தெரியவில்லை
இறப்பு(236-01-03)சனவரி 3, 236
உரோமை, உரோமைப் பேரரசு

பெயர் விளக்கம் தொகு

அந்தேருஸ் (பண்டைக் கிரேக்கம்Anteros; இலத்தீன்: Anterus) என்னும் பெயர் கிரேக்க கலாச்சாரத்தில் "அன்பு" என்னும் கடவுளைக் குறிக்கும்.

வரலாறு தொகு

இவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை போன்தியன் என்பவரும் அவருக்கு எதிர்-திருத்தந்தையாக இருந்த இப்போலித்து என்பவரும் சார்தீனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். ஆயினும் இவரது பதவிக்காலம் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே நீடித்தது.

இவரது தந்தை பெயர் ரோமுலுஸ் என்று தெரிகிறது.[2]

இவரது பூர்வீகம் கிரேக்க நாடு என்று கருதப்படுகிறது.[2] அவருடைய பெயரைப் பார்க்கும்போது, அவர் ஒருவேளை விடுதலைபெற்ற அடிமையாகவும் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.[3] இவர் ஓர் ஆயருக்குத் திருப்பொழிவு அளித்து அவரை ஃபோந்தி நகருக்கு ஆயராக நியமித்தார்.[2]

மறைச்சாட்சியாக உயிர்நீத்தல் தொகு

திருத்தந்தை அந்தேருஸ் உரோமை மன்னன் திரேசிய மாக்சிமினுஸ் (Maximinus the Thracian) ஆட்சியில் மறைச்சாட்சியாக இறந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.[2][3][4]

வத்திக்கான் நூலகம் தொடங்கியது தொகு

திருத்தந்தை அந்தேருஸ் இறந்த சூழ்நிலை பற்றி இன்னொரு மரபும் உள்ளது. திருச்சபையில் மறைச்சாட்சிகளாக உயிர்துறந்தவர்களைப் பற்றிய தகவல்களைச் சேர்த்து, ஓரிடத்தில் வைக்குமாறு அந்தேருஸ் ஏற்பாடு செய்தார். அதுவே வத்திக்கான் நூலகத்தின் தொடக்கமாக அமைந்திருக்கலாம். இதற்காக அந்தேருஸ் கொல்லப்பட்டார். அவர் தொடங்கிய ஏடுகள் தொகுப்பு மன்னன் தியோக்ளேசியனால் அழிக்கப்பட்டது.

கல்லறை தொகு

திருத்தந்தை அந்தேருசின் உடல் உரோமையில் ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[2] அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக் குழியை 1854இல் தெ ரோஸ்ஸி என்னும் அகழ்வாளர் கண்டுபிடித்தார். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட வாசகம் அடங்கிய மூடுகல் அவரது கல்லறைக்கு அடையாளமாக அமைந்தது.[5]. அதில் "ஆயர்" என்னும் பொருள்தரும் கிரேக்கச் சொல் மட்டும் வாசிக்கும் நிலையில் உள்ளது.[4]

திருத்தந்தையின் உடல் மீபொருள் மார்சிய வெளி என்னும் இடத்தில் அமைந்த புனித சில்வெஸ்தர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.[2] அங்கே அக்கோவிலை திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் புதுப்பித்த போது 1595 நவம்பர் 17ஆம் நாள் திருத்தந்தை அந்தேருசின் மீபொருள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது.[2]

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்பு தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pope Anterus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
திருத்தந்தை போன்தியன்
உரோமை ஆயர்
திருத்தந்தை

235–236
பின்னர்
ஃபேபியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தேருஸ்_(திருத்தந்தை)&oldid=3581424" இலிருந்து மீள்விக்கப்பட்டது