அனைத்துலகக் கூட்டுறவு ஆண்டு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2012 ஆம் ஆண்டைக் கூட்டுறவுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. சமூக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கைச் எடுத்துக் காட்டியும், குறிப்பாக வறுமையைக் குறைப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம், சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றில் கூட்டுறவின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டும் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி தொகு

கூட்டுறவு என்பது ஆட்கள், கூட்டாக உரிமை கொள்வதும் சனநாயக முறைப்படி கட்டுப்படுத்தப்படுவதுமான ஒரு தொழில்முயற்சியின் மூலம் தமது பொதுவான பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இதன்படி கூட்டுறவு அமைப்புக்களின் உறுப்பினராக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அதன் கூட்டு உரிமையாளர்களுள் ஒருவராக இருப்பதுடன் அதைக் கட்டுப்படுத்தி அதிலிருந்து பயன்பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். பல்வேறு கூட்டுறவு அமைப்புக்கள் தம்மிடையே ஒத்துழைப்பை உருவாக்கிக் கொள்வதன்மூலம் அவை தம்மைப் பொருளாதார அடிப்படையில் வலுப்படுத்திக் கொள்கின்றன. இவை நடைமுறைக்கு ஒத்த கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகின்றன. உலகில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு பில்லியன் வரையான மக்கள் பன்னாட்டுக் கூட்டுறவுக் கூட்டமைப்பு ஊடாகக் கூட்டுறவு இயக்கத்தில் இணைந்துள்ளனர். பல நாடுகளில் அவற்றின் மக்கள்தொகையின் குறிப்பிடத்தக்க வீதத்தினர் கூட்டுறவு அமைப்புக்களில் உறுப்பினராக உள்ளனர். சில நாடுகளில் இது 50 வீதம் வரை உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பல நாடுகளில் கூட்டுறவுத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது. நோர்வே, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் பால் உற்பத்தியின் 80 - 90 வீதம் கூட்டுறவுத்துறை ஊடாகவே நடைபெறுகிறது. அத்துடன், கூட்டுறவுத்துறை உலகம் முழுவதிலும் 100 மில்லியனுக்கு மேற்பட்ட வேலை வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத்துறை ஆற்றும் முக்கியமான பங்கை ஐக்கிய நாடுகள் அவை பெரிதும் மதிக்கிறது. 1995 ஆம் ஆண்டில் கோப்பன்கேகனில் நடைபெற்ற சமூக வளர்ச்சிக்கான உலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வளர்ச்சிக்கான மக்களை மையப்படுத்திய அணுகுமுறையில் கூட்டுறவின் முக்கியத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக ஒருமைப்பாடு ஆகியவை உட்பட்ட சமூக வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காகக் கூட்டுறவுத் துறையைப் பயன்படுத்துவதற்கும் அதன் ஆற்றலை முழுமையாக வளர்ப்பதற்கும் மாநாட்டில் ஒத்துக்கொண்டது.

இவற்றையும் பார்க்கவும் தொகு