அனைத்துலக நீர்க் கூட்டுறவு ஆண்டு

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2013 ஆம் ஆண்டை நீர்க் கூட்டுறவுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. நீர் சூழியல் ஒருமைப்பாடு, வறுமை, பசி ஆகியவற்றின் ஒழிப்பு என்பவற்றை உள்ளடக்கிய பேண்தகு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றும், மனித நலத்துக்கும், நல்வாழ்வுக்கும் அடிப்படையானது என்றும், ஆயிரவாண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு அவசியமானது என்றும் இதற்கான தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பின்னணி

தொகு

நீர்க் கூட்டுறவு தொடர்பான முன்முயற்சி தாசிக்கிசுத்தான் குடியரசின் சனாதிபதி திரு. எமோமலி ரகுமோனால் எடுக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் இசுத்தான்புல்லில் இடம்பெற்ற ஐந்தாவது உலக நீர் மன்றத்தில் இதனை அறிவித்தார். இதன் முதல் வரைவு, பொதுச் சபையின் நீர் தொடர்பான முன்னைய தீர்மானங்களின் அடிப்படையிலும், "வாழ்க்கைக்கு நீர்" என்னும் பத்தாண்டுச் செயல்திட்டம் (2005 - 2015) நிறைவேற்றப்படுவது தொடர்பிலான இடைக்கால ஆய்வுக்காக இடம்பெற்ற உயர்மட்ட அனைத்துலக மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் விரிவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தாசிக்கிசுத்தானுடன், ஆப்கானிசுத்தான், ஆர்மீனியா, ஆசுத்திரேலியா, பகரேன், பொலீவியா, சிலி, கொசுத்தாரிக்கா, கபொன், ஒன்டூராசு, ஈராக், கசாக்கிசுத்தான், மடகாசுக்கர், மங்கோலியா, நேபாளம், பாகிசுத்தான், ரசியா, தாய்லாந்து, உக்ரேன் ஆகிய நாடுகள் கூட்டாக முன்மொழிந்திருந்தன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு