அன்டச்சபில்

அன்டச்சபில் (Untouchable) என்பது முல்க் ராச் ஆனந்த் எழுதிய புதினம். கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞரான இவரது முதல் ஆங்கிலப் புதினம் இது. இந்நூலுக்கு அவரது வகுப்பு தோழரான இ எம் பாரச்ட்டர் என்பவர் முன்னுரை எழுதியுள்ளார். 1935ல் வெளிவந்த இந்த புதினம் மேற்குலகிற்கு இந்தியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எளியவர்களை, சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களை பற்றி எழுதியதால், மேற்குலக வாசகர்கள் முல்க் ராச் ஆனந்தை சார்லசு டிக்கன்சோடு ஒப்பிட்டனர். ஆங்கிலத்தில் எழுதக்கூடிய இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக இவரை அடையாளம் காட்டியது இந் நூல்.[1]

அன்டச்சபில்
Untouchable
நூலாசிரியர்முல்க் ராஜ் ஆனந்த்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைபுதினம்
வெளியிடப்பட்ட நாள்
1935
ஊடக வகைஅச்சு
ISBN978-0-14-018395-5
OCLC22686185
அடுத்த நூல்கூலி

வெளியீடு தொகு

இந் நூலின் முதற்பதிப்பு 1935 இல் வெளியானது.[2] அதற்குப் பின் வெளியிடப்பட்ட பதிப்புகள் இ. எம். பாரஸ்ட்டரின் முன்னுரையுடன் வெளிவந்தன[3][4]. 2004 ஆம் ஆண்டு, இந் நூல் அடங்கிய நினைவுப் பதிப்பொன்று அன்றைய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது.[5]

நூலின் உள்ளே தொகு

இப் புதினத்தில், துப்புரவு தொழிலாளர் சமூகத்தில் பிறந்த பக்கா என்னும் இளைஞனின் ஒரு நாள் வாழ்க்கை தான் இருக்கிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்குலக நாகரீக உடை அணியவேண்டும் என்ற கனவோடு வாழும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞன் இவன். தன் பிறப்பை எண்ணி நொந்துபோகும் ஒவ்வொரு முறையும் - இந்த கட்டமைப்பை உருவாக்கிய இந்து மதத்தின் மீது அடங்கா ஆத்திரம் கொப்பளிக்கும். ஒரு பதின்மூன்று வயது தங்கை, அவளை யாராவது திருமணம் என்ற பெயரில், பணம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களா என்று சிந்திக்கும் பக்காவின் தந்தை, இவர்களோடு பக்கா.

இராணுவ வீரர்களின் முகாமில் தொடங்கும் பக்காவின் பொழுது இனிமையானது. துப்புரவு வேலை தான் என்றாலும் அங்கு யாரும் பக்காவை ஒரு அடிமையாகவோ ஒரு தீண்டத்தகாதவனாகவோ பார்ப்பது கிடையாது. அதனால் அவர்களின் மீதும் ராணுவத்தின் மீதும் பக்காவிற்கு ஒரு வகை ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. அடுத்து கோவில் வளாகத்தை சுற்றிய பகுதிகளை துப்புரவு செய்யும் பணி, அதுவரை அழகாய் வானில் பறந்த ஒரு பட்டம் கிழிந்து தரையில் விழுந்ததுபோல், பக்காவின் பிறப்பை நினைவுபடுத்தும் ஒரு கூட்டம் அதை கேட்டு நொடிக்கு நொடி நொறுங்கும் அந்த இளைஞனின் உள்ளம்.

அடுத்து, வீடுகளுக்கு சென்று மலம் அள்ளும் வேலை, 'பக்கா வருகிறேன்! பக்கா வருகிறேன்' என்று உரக்க கத்திக்கொண்டே போகவேண்டும், இதன் பொருள், அசுத்தமான ஒருவன் வருகிறேன் யாரும் என்னை தொட்டு அசுத்தமாகிவிடாதீர்கள் என்பது தான். இவன் வருவதை அறிவிக்காமல் சென்றால் அதுவும் பெருங்குற்றம். ஒருமுறை அறிவிக்காமல் சென்றதால் பெற்ற அடி உதை அவன் நினைவில் என்றுமே இருந்துகொண்டே அவனை அறிவிக்க செய்யும்.

மலம் அள்ளும் இந்த வேலையினாலே தன் பிறப்பு ஏன் இப்படி இருக்கிறது என்றும், உயர்ந்த சாதிகள் தான் தங்களை இவ்வாறு நடத்துகிறார்கள் என்றால், மற்ற பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து தீண்டாமையினை கடைபிடிப்பது எண்ணி மேலும் நொந்து போவான். ஒரு முறை பக்காவின் தங்கை கிணற்றில் நீர் இறைக்க காலையில் சென்றவள் நீர் இறைக்க உயர்சாதியினர் யாரும் அனுமதிக்காததால் மாலை வரை நீர் இறைக்காமல் திரும்புவாள். கடைக்கு செல்லும் இவர்களை எட்டி நின்று பணம் கொடுக்கசொல்லி, அதன் மீது தண்ணீர் தெளித்து பின் எடுத்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், இவர்கள் பணம் கொடுத்து வாங்கும் பொருளை வீசி எறிவார்கள். அவர்களின் அந்த நடத்தை பழகிப்போனபடியால் இவர்களும் சகித்துக்கொள்வார்கள்.

ஒரு காலத்தில் கிருத்துவ பணிக்குழுக்களை நம்பிய பக்கா, அவர்களால் சமூக மாற்றம் ஏற்படாது, அவர்களின் நோக்கம் மதம் பரப்புவது மட்டுமே என்று உணர்ந்தபோது, மக்களை நவீன கழிவறைகளை கட்டுங்கள் என்ற அண்ணல் காந்தியின் சொற்பொழிவினை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நவீன கழிவறைகளில் நாம் மலம் அள்ளவேண்டி இருக்காது என்பதை அறிந்த பக்காவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. சமூக மாற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் அறிவியலுக்கு மட்டுமே இருக்கிறது என்று பக்கா நம்புவதாக முடிகிறது இந்தக் கதை.

மேற்கோள்கள் தொகு

  1. "Mulk Raj Anand, 98; Wrote About India's Injustices". Los Angeles Times. October 1, 2004. http://pqasb.pqarchiver.com/latimes/access/703453161.html?dids=703453161:703453161&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Oct+01%2C+2004&author=&pub=Los+Angeles+Times&desc=Mulk+Raj+Anand%2C+98%3B+Wrote+About+India%27s+Injustices&pqatl=google. பார்த்த நாள்: 2009-08-31. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Mulk Raj Anand draws closer to 100". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. December 11, 2003 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024142857/http://articles.timesofindia.indiatimes.com/2003-12-11/pune/27205329_1_mulk-raj-anand-anand-seats-dagdi. பார்த்த நாள்: 2009-08-31. 
  3. "Indian author Mulk Raj Anand dies". பிபிசி. September 28, 2004. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3696478.stm. பார்த்த நாள்: 2009-08-31. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  5. "PM releases special commemorative edition on Mulk Raj Anand". Govt of India, Press Information Bureau. December 11, 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டச்சபில்&oldid=3665456" இலிருந்து மீள்விக்கப்பட்டது