அப்கார் எண்ணிக்கை
அப்கார் எண்ணிக்கை (Apgar score) என்பது பிறந்த குழந்தையின் உடல்நிலையைக் கணித்து, உயிர்ப்பிப்பு முறைகளைத் திட்டமிடும் ஒரு எளிய முறையாகும். 1952 ஆம் ஆண்டில் மயக்கமருந்து மருத்துவரான டாக்டர் வர்கினியா அப்கார், அப்கார் எண்ணிக்கை என்ற ஒரு மருத்துவ முறையை அறிமுகப்படுத்தினார்[1][2].
பெரும்பாலான குழந்தைகள் முழுவதுமாகப் பிறந்த உடனேயே மூச்சுவிட ஆரம்பிக்கின்றன.அப்படி மூச்சு விடவில்லை என்றாலும், அல்லது ஏங்கல்களுக்குப் பிறகு மூச்சுவிடுவதை நிறுத்தி விட்டாலும், மகப்பேற்றைக் கவனிக்கும் மருத்துவரோ, மருத்துவச்சியோ, பயிற்சி பெற்ற தாதியோ குழந்தையை உடனே உயிர்ப்பித்து மூச்சு விடச் செய்ய வேண்டும்.
அப்கார் அளவு கோலில் பிறந்த குழந்தையின் உடல்நிலை, சுழியில் இருந்து இரண்டு வரையிலான ஐந்து எளிய கூறுகளால் ஆன அளவுகோலால் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதனால் பெற்ற ஐந்து மதிப்புகளையும் கூட்டி உடல்நிலை தீர்மானிக்கப்படுகிறது. அதாவது உடல்நிலையின் ஐந்து கூறுகளும் கவனமாகச் சோதிக்கப்பட்டு , ஒவ்வொரு கூறுக்கும் இரண்டு எண்ணிக்கையாகப் பத்து வரை கணக்கிடப்படுகிறது. குழந்தை முழுவதுமாகப் பிறந்து ஒரு நிமிடமானவுடன் ஒரு முறையும், ஐந்து நிமிடங்களில் மறுமுறையுமாக அப்கார் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. 1.நிறம் – Appearance ,2. இதயத் துடிப்பு – Pulse 3. வலிப்புக் காட்டுகை அல்லது அனிச்சை உறுத்துனர்ச்சி – Grimace 4. செயல்பாடு அல்லது தசையிறுக்கம்- Activity 5. மூச்சு விடுதல் – Respiration என்பன இந்த ஐந்து கூறுகளாகும். இக்கூறுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களின் இணைப்பு அப்கார் எனப்படுகிறது.
பிறந்தகுழந்தை சீர்தூக்கம்
தொகுமதிப்பு 0 | மதிப்பு 1 | மதிப்பு 2 | |
---|---|---|---|
நிறம் | நீலம் வெளிர் நிறமாதல் | உடல் இளஞ்சிவப்பாதல் கைகால் நீலநிறமாதல் |
முழு இளஞ்சிவப்பு |
இதயத் துடிப்பு | துடிப்பற்ற நிலை | 100- க்கும் கீழ் | 100 க்கும் மேல் |
வலிப்புக் காட்டுகை/அனிச்சை உறுத்துணர்ச்சி | எதிர்வினை இல்லை | முகச்சுளிப்புக் காணப்படல் | அழுகை, இருமல் அல்லது தும்மல் |
செயல்பாடு | ஏதுமில்லை | சற்று மடங்குதல் | நன்கு இயங்கும் தன்மை |
மூச்சுவிடும் செயல்பாடு | மூச்சில்லா நிலை | மெதுவாக், சீர்மையற்ற | நன்றாகக் கத்தி அழுகை |
தோற்றம் அல்லது நிறம்
தொகுகுழந்தையுடல் வெளுத்தோ அல்லது நீலம் பார்த்தோ உள்ளதா என அறிய வேண்டும்.சில குழந்தைகளே நல்ல இளஞ் சிவப்பாய், இரண்டு எண் மதிப்புகள் பெறுகின்றன. பெரும்பாலான குழந்தைகளின் உடல் இளஞ்சிவாப்பாக இருப்பினும், கால்களும் பாதங்களும் நீலம் பாரித்து இருந்தால் ஒன்று எண் மதிப்பும், உடல் முழுவதும் வெளுத்து, நீலம் பாரித்து இருப்பின் 0 மதிப்பும் கொடுக்கப்படல் வேண்டும்.
இதயத்துடிப்பு
தொகுஇது உடல்நிலையின் மிகமுக்கியமான கூறாகும்.குறைந்தது அரைநிமிடம் இதய்த் துடிப்பு எண்ணப்படவேண்டும்.மார்பு ஒலிநோக்கி கிடைக்கவில்லையென்றால், தொப்புள் கொடியும், வயிற்றின் தோலும் சேருமிடத்தில் தொட்டுப் பார்த்துத் துடிப்பை எண்ண முடியும். இதயத் துடிப்பு நூற்றுக்கு மேலிருந்தால் இரண்டு எண் மதிப்பும், நூற்றுக்குக் குறைவானால் ஒன்றும், இதய்த்துடிப்பை உணர முடியவில்லையென்றால் 0 எனவும் கணக்கிடப்படவேண்டும்.
இதயத்துடிப்பு நூற்றுக்குக் குறைவானால் உடனடியாக உயிர்பிப்பு முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.[3]
அனிச்சை உறுத்துணர்ச்சி
தொகுகுழந்தையின் காலடிப் பாகத்தை இலேசாகச் சுண்டுவதனால் இதை அறிய முடியும். தெம்போடு அழுமாயின் இரண்டு எண் மதிப்பும், சிறிது அழுதாலும் அல்லது முகம் சுளித்தாலும் ஒன்று எனவும் , எவ்வித விளைவும் இல்லையெனில் 0 எனவும் மதிப்பிடப்படல் வேண்டும்.[3]
தசையிறுக்கம்
தொகுஇயற்கையாக சிசுவின் முழங்கைகள் மடங்கியும், இடுப்பு மடங்கி, தொடையும் முழங்கால்களும் வயிற்றை நோக்கி மடங்கியும் இருக்கும். அத்துடன் உறுப்புகளை நீட்ட முயற்சி செய்யும் போது சிறிது எதிர்ப்புத் தெரியும். இந்த இயற்கையான தசையிறுக்கத்திற்கு 2 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். இதற்கு எதிரான நிலையில் உறுப்புகள் செயலிழந்தும், நீட்டும் முயற்சிக்கு எவ்வித எதிர்ப்புமின்றி, மடங்குதலுக்கான அறிகுறியுமின்றி இருப்பின் 0 மதிப்பும், இவ்விரண்டு நிலைக்கும் இடைப்பட்ட நிலைக்கு ஒன்று மதிப்பும் கொடுக்கப்பட வேண்டும்.
மூச்சு விடுதல்
தொகுமூச்சு விடுதல் அடுத்து முக்கியமான கூறாகும். முறையான மூச்சுக்கு 2 மதிப்பெண்கள் தரப்பட வேண்டும். மூச்சு முறையற்று, ஆழமற்று விட்டுவிட்டு ஏங்கல்களாக இருக்குமாயின் 1 மதிப்பும், மூச்சு விடும் முயற்சியே இல்லாமலிருப்பின் 0 மதிப்பும் வழங்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Virginia Apgar (1953). "A proposal for a new method of evaluation of the newborn infant". Curr. Res. Anesth. Analg. it takes less than 2 seconds and for experienced midwives it would take about less than 1 second 32 (4): 260–267. doi:10.1213/00000539-195301000-00041. பப்மெட்:13083014. http://apgar.net/virginia/Apgar_Paper.html.
- ↑ Finster, M.; Wood, M. (May 2005). "The Apgar score has survived the test of time". Anesthesiology 102 (4): 855–857. doi:10.1097/00000542-200504000-00022. பப்மெட்:15791116.
- ↑ 3.0 3.1 3.2 அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர், பக்கம்642
உசாத்துணை
தொகு- Virginia Apgar (1966). "The Newborn (Apgar) Scoring System: Reflections and Advice". Pediatric clinics of North America 13: 645–650. http://profiles.nlm.nih.gov/ps/access/CPBBJY.pdf. (Retrieved from Profiles in Medicine-The Virginia Apgar Papers)