அமீர் மகால்

(அமீர் மஹால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமீர் மகால் (Amir Mahal) என்பது ஆற்காடு நவாப் மற்றும் அவரது குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1798 ஆம் ஆண்டில் இந்தோ-சரசெனிக் கட்டடக்கலையில் பிரித்தானிய கட்டடக்கலை வல்லுனரான ராபர்ட் சிஸ்ஹோல்ம் என்பவரால் கட்டப்பட்டது. இது 14 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அமீர் மஹால் 1876ஆம் ஆண்டிலிருந்து ஆற்காடு நவாப் குடும்பத்தின் வசிப்பிடமாக விளங்குகிறது. நவாப்பின் தற்போதைய வாரிசான மொஹம்மத் அப்துல் அலி மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன் அரண்மனையில் வசித்துவருகின்றனர். அமீர் மஹால் உள்ளே அழகிய சிறிய துடுப்பாட்ட மைதானமும் உள்ளது . இது தற்போது அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.[1] அரண்மனையில் ஏறபடும் பெரிய பழுதுகளை இந்திய ஒன்றிய அரசு தன் செலவில் பழுதுபார்த்து பராமரித்து வருகிறது.

அமீர் மகால் நுழைவாயில்

வரலாறு

தொகு

அமிர் மகாலானது 1798 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்துக்காக கட்டப்பட்டது.[2] 13 வது ஆற்காடு நவாப்பாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் கான், (1825 – 1855) வாரிசு இல்லாமல் இறந்தார், இதனால் அவரது ஆட்சிப்பகுதியானது அவகாசியிலிக் கொள்கையின்படி பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் நவாபின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த சேப்பாக்கம் அரண்மனையை பிரித்தானிய அரசால் ஏலமிடப்பட்டு, பின்னர் அது சென்னை அரசாங்கத்தாலே வாங்கப்பட்டது.[2] நவாப்பின் சித்தப்பா பிரித்தானிய அரசிடம் முறையிட, விக்டோரியா மகாராணி ஆற்காடு இளவரசர் என்ற புதிய பட்டத்தை அளித்தார்.[3] அதன் பின்னர் நவாப் திருவல்லிக்கேணி சாலையில் உள்ள ஷாதி மஹால் எனும் கட்டிடத்திற்கு குடியேறி, அங்கு வாழ்ந்தார்.[2] ஆனால், ஷாதி மஹால் "ஆற்காடு இளவரசரின் இல்லமாக இருக்க பொருத்தமாக இல்லை" என உணர்ந்த பிரித்தானியர் அதன்பிறகு ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலை அவருக்கு வழங்கினர்.[4] இராபர்ட் கிறிஷோலம் அலுவலக பாயன்பாட்டுக்காக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை அரண்மனையாக மாற்றும் பணி வழங்கப்பட்டது.[4] 1876 ஆம் ஆண்டில் நவாப்பும் அவரது குடும்பத்தினரும் அமீர் மஹாலுக்கு குடியேறினர்.[2] ஆற்காட்டின் நவாப்களின் குடியிருப்பாகவே இந்த மாஹல் இருக்கிறது.[2]

அமைப்பு

தொகு

அரண்மனையானது மிகப்பெரிய கோட்டைச்சுவரால் சூழப்பட்டு 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையானது 70 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் உள்ளே நுழையும் நுழைவாயிலின் இருபுறங்களிலும் இரு கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களின் மேற்பகுதியில் நகர கானா எனப்படும் முரசு மண்டபம் உள்ளன. வாயிலில் நுழைந்து அரண்மனைக்குச் செல்லும் பாதையோரமாக நவாப்புக்கு அரசு வழங்கிய பீரங்கி வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. மஹாலானது அதன் ஒவ்வொரு பகுதியும் கலை நுணுக்கத்துடன் தூண்கள், பலிங்குத் தரை போன்றவற்றிடன் கட்டப்பட்டுள்ளது. அழகிய பீங்கான் பாத்திரங்கள், பூ வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள், பட்டுநூலால் எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய இறை வசனங்கள், உள்ளே தொங்கும் அரேபிய சார விளக்குகள் போன்றவை உள்ளன. மேலும் அரண்ணமைச் சுவர்களிலில் நவாப்களின் ஓவியங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் தர்பார் மண்டபமும், அதற்குப் பின் பகுதியில் மிகப்பெரிய பொது விருந்து அறையும் உள்ளது. அரண்மனைச் சுவரின் உயரத்தில் குறுவாள்கள், கத்திகள், துப்பாக்கிகள் போன்றவை மாட்டப்பட்டுள்ளன.[5]

அமைவிடம்

தொகு

அமீர் மகாலானது சென்னை நகரின் திருவல்லிக்கேணியின், மகாகவி பாரதிசாலையில் அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் ஆற்காடு இளவரசரின் குடும்பத்தினர் தற்போதும் வசித்து வருவதால் அனைவரையும் பார்வையிட அனுமதிப்பதில்லை என்றாலும், முன்னனுமதி பெற்றுவரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகின்றனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Damani, Neha (9 January 2009). "Market value". India Today. http://indiatoday.intoday.in/story/Market+value/1/24736.html. பார்த்த நாள்: 25 June 2012. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
  3. "அமீர் மஹால் அறிந்த இடம் அறியாத விஷயம்". கட்டுரை. குஙுகுமம். பார்க்கப்பட்ட நாள் 18 மே 2018.
  4. 4.0 4.1 Jayewardene-Pillai, Shanti (2007). Imperial conversations: Indo-Britons and the architecture of South India. Yoda Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8190363425.
  5. சாரா (23 ஆகத்து 2017). "அமீர் மஹால் - சென்னையின் மையத்தில் வீற்றிருக்கும் ராஜ தர்பார்!". கட்டுரை. ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 18 மே 2018.
  6. "அமீர் மகால்". அறிமுகம். தமிழ்நாடு சுற்றுலா துறை. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்_மகால்&oldid=3576440" இலிருந்து மீள்விக்கப்பட்டது