அட்சயப் பாத்திரம்

தொன்மவியல் பாத்திரம்
(அமுதசுரபி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


அட்சயப் பாத்திரம் அல்லது அமுதசுரபி என்பது இந்திய தொன்மவியலில் குறப்படும் ஒரு பாத்திரம் ஆகும். இந்தப் பாத்திரத்தில் அள்ள அள்ள உணவு இருந்துகொண்டே இருக்கும். மகாபாரதத்தின்படி, அட்சயப் பாத்திரம் தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால், எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மையுடையது. இதனை வைத்தே பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வானப்பிரஸ்தம் காலத்தில் உணவை உண்டார்கள்.

ஒரு முறை துர்வாச முனிவர் துரியோதனன் அரண்மனைக்குச் சென்றார். அப்போது அவனுடைய உபசரிப்பில் மகிழ்ந்தவர் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு துரியோதணன் பஞ்ச பாண்டவர்கள் குடிலுக்குச் சென்று உணவருந்த வேண்டும் என்று கூறுகிறான். துர்வாசரும் அதனை ஏற்று தன்னுடைய சீடர்களுடன் பஞ்ச பாண்டவர்கள் குடிலுக்குச் செல்கிறார். அங்கு உணவினைச் சாப்பிட்டு முடித்துவிட்ட பாண்டவர்கள், அட்சயப் பாத்திரத்தினையும் கழுவி வைத்துவிட்டார்கள். துர்வாசர் தான் குளித்துவிட்டு வந்து உணவினை அருந்துவதாகக் கூறிவிடுகிறார். திரௌபதி கிருஷ்ணனை வேண்டி, தன்னைக் காக்கும்படி வேண்ட, கிருஷ்ணன் அட்சயப் பாத்திரத்திலிருந்த ஒரு சிறு இலையை உண்டார். அனைத்து உயிர்களுக்கும் உணவுண்ட திருப்தி உண்டானது. [1]

துர்வாசரும், அவருடையச் சீடர்களும் தங்கள் வயிறு நிரம்பியதைக் கண்டு பஞ்ச பாண்டவர்களிடம் மீண்டும் வராமல் சென்றனர்.

மணிமேகலையில் தொகு

மணிமேகலை இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அமுதசுரபியும் அட்சயப் பாத்திரத்தை ஒத்த ஒரு பாத்திரமே. சிந்தாதேவியால் ஆபுத்திரனுக்குத் தரப்பட்ட அமுதசுரபியைக் கொண்டு உயிர்களது பசிப்பிணியைப் போக்கி வந்தான். அவன், வாழ்வோர் யாருமில்லாத மணிபல்லவத் தீவைச் சேர்ந்தபோது பிற உயிர்களைக் காக்கும் பாத்திரத்தைக் கொண்டு தன்னுயிரை மட்டும் காக்க விரும்பாதவனாய், அதைக் கோமுகி என்னும் பொய்கையில் விட்டு விட்டு உயிர் துறந்தான். பிற்காலத்தில் மணிபல்லவத்துக்கு வந்த மணிமேகலையின் கைகளில் அமுதசுரபி வந்து சேர்ந்தது. அவள் காவிரிப்பூம்பட்டினம் வந்து, துறவுக்கோலம் பூண்டு, அதைக் கையிலேந்தி, ஆதிரை என்னும் கற்பிற் சிறந்தவளிடம் முதலிற் பிச்சை ஏற்றனள். அவள், 'உலகமெங்கும் பசிப்பிணி நீங்குக' எனக் கூறி அதில் பிச்சை இட்டாள். அதிலிருந்து ஒரு பிடி சோறு வாங்கியுண்டு, காயசண்டிகை என்னும் விஞ்சையர் பெண்ணொருத்தி தனக்கிருந்த தீராப் பசி நோய் என்னும் நோயிலிருந்து விடுபட்டாள். பின்னர் மணிமேகலை, உலகவறவி என்னும் ஊரம்பலம் சேர்ந்து, பலருக்கும் பசிப்பிணியைப் போக்கி வந்தாள்.

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்சயப்_பாத்திரம்&oldid=3797115" இலிருந்து மீள்விக்கப்பட்டது