அம்பேத்கர் தேசிய நினைவகம், தில்லி

தில்லி, அலிபூர் சாலையில் உள்ள ஒரு நினைவகம்

அம்பேத்கர் தேசிய நினைவகம் (Dr. Ambedkar National Memorial) என்பது இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில், அலிப்பூர் சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த இடத்தில்தான் அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தார். இந்த நினைவகமானது அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

அம்பேத்கர் தேசிய நினைவகம், தில்லி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2018 ஏப்ரல் 13 அன்று 26 ஆலிபூர் சாலை, தில்லியில் டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகத்தை திறந்துவைத்த நிகழ்வு.
இடம்26 அலிபூர் சாலை, தில்லி, இந்தியா
வகைநினைவகம் மற்றும் அருங்காட்சியகம்
துவங்கிய நாள்மார்ச்சு 21, 2016 (2016-03-21)
முடிவுற்ற நாள்2018
திறக்கப்பட்ட நாள்13. ஏப்ரல் 2018
அர்ப்பணிப்புஅம்பேத்கர்

வரலாறு தொகு

1951இல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகிய பின்னர், சிரோஹி மன்னருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அதன் பின் இறக்கும் வரை தன் மனைவி சவிதாவுடன் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள், மனுக்கள், விண்ணப்பங்கள், கட்டுரைகள், உரைகள் எல்லாவற்றிலும் 26, அலிப்பூர் சாலை என்ற இந்த இடத்தின் முகவரி இருக்கிறது. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத்தின் புதிர்கள், புத்தரும் கார்ல் மார்க்ஸும், புத்தரும் அவரது தம்மமும் உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் இங்கிருந்துதான் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் அம்பேத்கர் முடுக்கிவிட்டது இங்கிருந்துதான். நவீன இந்தியச் சமூக வரலாற்றில் அரங்கேறிய மாபெரும் திருப்புமுனை நிகழ்வான ‘பவுத்தம் திரும்புதலுக்கான’ முடிவுரையையும் இங்குதான் தீர்மானித்தார். இவ்வளவு சிறப்புவாய்ந்த வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கி இடித்துவிட்டனர். ஆனால் இங்கு பின்னர் புதிய நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவகத்தில் அம்பேத்கரின் அறை மீண்டும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவகத்தில் உள்ளவை தொகு

நினைவகத்தின் இரு பக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், காணொளி மற்றும் ஒலிப்பதிவுகள், நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அலுவலகத்தில் அம்பேத்கர் அமர்ந்து எழுதுவது போன்ற சிலையும், அதன் அருகே அவர் பயன்படுத்திய மை பேனா, தேடலுக்கான நூல்கள், பூதக் கண்ணாடி, தொலைபேசி, குடை, கைத்தடி, தொப்பி, தட்டச்சு இயந்திரம், சுற்றிலும் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்கத்து அறையில் அவரது உடைமாற்றும் மேசை, அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி போன்றவை உள்ளன.[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. இரா.வினோத் (6 திசம்பர் 2018). "டெல்லி அம்பேத்கர் நினைவகத்தில் ஓர் உலா". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.