அரசியல் கருத்துக்கள்-பிற்கால இந்தியா
அரசியல் கருத்துக்கள், பிற்கால இந்தியா அல்லது பிற்கால இந்திய அரசியற் கருத்துருக்கள் (Political thoughts of Modern India) இந்தியாவில் முகம்மதியர் அரசாட்சி யேற்பட்டபின்னர் தான், இந்தியாவின் பெரும்பான்மையான நிலப்பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன.[1] அரசருக்கும், குடிகளுக்குமுள்ள தொடர்பு பல இடங்களில் அற்றுப்போயிற்று. இசுலாமிய அரசியல் கொள்கை, “இராச்சியம் முஸ்லிம்களுக்கே உரியது ; ஏனையோர் ஜசியா என்னும் தனி வரியைச் செலுத்தித் தாழ்மையுடன் நடக்கவேண்டும்” என்பதானது. முகலாய அரசப் பரம்பரையின் பெண்களும் சிறந்த ஆட்சிப்பணிகளில் ஈடுபட்டனர்.[2]
அதனாலேதான், விஜயநகர அரசர்கள், தலைமுறை தலைமுறையாக, அவர்களுடன் போராடித் தென்னாட்டில், தருமம் தலைசாயாமல் காத்து வந்தனர். இத்தொழிலில் ஈடுபட்ட மன்னருள் பேர்பெற்ற கிருஷ்ணதேவராயர் தம்முடைய 'ஆமுக்தமால்யத' என்னும் நூலில், 'சிறீ ஆண்டாள்' கதையை விரித்துக் கூறுவதோடு, தமது அரசியல் முறைகளையும் விவரமாக எடுத்துக் கூறியிருக்கிறார். மொகலாய சக்கரவர்த்தி அக்பர் மட்டுமே இசுலாம் கொள்கையை மாற்றி, இந்துக்களும் முசுலிம்களும் நாட்டில் சம உரிமைகளைப் பெற வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டார்.[3] ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை.
முகலாயர்
தொகு13-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை முகம்மதியரது படையெடுப்பால், வட இந்தியாவில் நிறுவப்பட்ட ஆட்சிக் காலத்தில், தனிச்சிறப்புள்ள அரசியல் கோட்பாடுகள் ஒன்றும் வளரவில்லை. குழப்பமான அரசியல் நிலையொன்று இருந்தமையால், பிற நாட்டவர்கள், இந்தியாமீது படையெடுப்பது எளிதாயிருந்தது. வெளிநாட்டாருடைய ஆக்கிரமிப்பினால், தங்களுடைய நலன்கள் கெடக்கூடுமே என்று அஞ்சிய ஆட்சியாளர்களே, வெகுசில இந்திய அரசர்களே, குறிப்பாக தென்னிந்திய அரசர்களே, வெளிநாட்டுப் படையெடுப்புக்களை எதிர்த்தவர்களாக இருந்தனர். இப்போர்களில், பொது மக்களுக்கு எவ்விதமான அக்கறையும் இருந்ததாகக் கருத இடமில்லை.
முகம்மதியர் ஆட்சியில், சமய அடிப்படையில் மக்கள் பாகுபாடு செய்யப்பட்டுப் பிரித்தாளப்பட்டனர் என்பதற்கு, ஜசியா என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டாகும். அக்பர் ஒருவர் தாம், மக்களுக்கு ஏற்ற முறையில் ஆட்சி நடத்தியவர். அவருடைய பேரன் மகனான ஔரங்கசீப் மறுபடியும் சமயச் சார்பான ஆட்சியை நிறுவி, இந்துக்களின் பகைமையைத் தேடிக்கொண்டார். அலாவுதீன் கில்ஜி (1296-1316) தாம் செய்ததெல்லாம் மக்களுடைய நன்மையைக் கருதியே என்று கூறிக்கொண்டார். ஆனால் அவர் தமது அரசியல் அதிகாரத்திற்கு, எல்லைவிதிக்கக் கூடியவர்கள் உண்டு என்று ஒப்புக் கொள்ளவில்லை. தாம் இரண்டாம் அலெக்சாந்தர் என்றும், முகம்மது நபியென்றும் கூறிக்கொண்ட அலாவுதீன் தம் நண்பர்களுடைய அறிவுரைக் கிணங்கியே அப்பட்டங்களை நீக்கினார். முகம்மது பின் துக்ளக் (1325-51) முதலிய எதேச்சாதிகாரிகளுடைய ஆட்சியினால், மக்கள் வருந்தி மடிந்தனரேயன்றிக் கொடுங்கோலுக்குப் பரிகாரம் காணவேண்டும் என்னும் விருப்பமோ, வலிமையோ, கொள்கையோ இல்லாமலே இருந்தனர்.
இந்திய அரசர்களின் புரட்சி
தொகுஅக்பருடைய அரசியல் நன்னோக்கம், அவருடைய பின் தோன்றல்களிடம் காணப்படவில்லை. சிவாஜியின் (1664-80) தலைமையின் கீழ் மகாராஷ்டிரர்கள் அரசியல் நோக்கத்தால், மொகலாய இராச்சியத்தை எதிர்த்தார்கள் என்று கருத இடமில்லை. சிவாஜி இந்து மதத்தில் தீவிரமான பற்றுடையவர். இராமதாஸ் என்னும் அவருடைய குரு, இந்து மதத்தைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை, விளக்கித் தம் நூல்களிற் கூறியுள்ளார். சிவாஜியின் சமயப்பற்றே அவரது அரசியல், போர்க்கள வெற்றிகளுக்கு அடிப்படை என்பது தெளிவு. சீக்கியர்கள் அரசியல் உலகில் முன்னேறியதும், அவர்களுடைய சமய அடிப்படையினாலேயாம். கிருசுண தேவராயரும், தமிழக அரசர்களும் வரி கட்டவும், கப்பம் கட்டவும் மறுத்து பெரும்பாலும், ஆங்கிலேய அரசு ஏற்படும் வரை தனியாட்சி நடத்தினர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.columbia.edu/itc/mealac/pritchett/00islamlinks/ikram/part2_16.html
- ↑ https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/mughal-women-322073-2016-05-06
- ↑ http://www.historydiscussion.net/history-of-india/important-features-of-akbars-administration/2798
- ↑ http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/overview/charts/saislamtimeline.html