அலாவுதீன் கில்சி

அலாவுதீன் கல்சி (ஆட்சி. 1296-1316) என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார்.

அலாவுதீன் கல்சி
علاءالدین خِلجی
சுல்தான்
சிக்கந்தர்-இ-சானி (இரண்டாம் அலெக்சாந்தர்)
அலாவுதீன் கல்சி குறித்த ஒரு 17ஆம் நூற்றாண்டு ஓவியம்
13வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்19 சூலை 1296–4 சனவரி 1316
முடிசூட்டுதல்21 அக்டோபர் 1296
முன்னையவர்ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி
பின்னையவர்சிகாபுதீன் ஒமர்
அவத்தின் ஆளுநர்
காலம்அண். 1296–19 சூலை 1296
காராவின் ஆளுநர்
காலம்அண். 1266–1316
முன்னையவர்மாலிக் சஜ்ஜு
பின்னையவர்அலாவுல் முல்க்
அமீர்-இ-துசுக்
(நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுபவருக்கு ஒப்பானது)
காலம்அண். 1290–1291
பிறப்புஅலி குர்ஷஸ்ப்
அண். 1266
இறப்பு4 சனவரி 1316(1316-01-04) (அகவை 49–50)
தில்லி (தற்கால இந்தியா)
புதைத்த இடம்
அலாவுதீன் கல்சியின் மதராசா மற்றும் சமாதி, தில்லி[1]
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
 • கிசிர் கான்
 • ஷாடி கான்
 • குத்புதீன் முபாரக் ஷா
 • சிகாபுதீன் ஒமர்
பட்டப் பெயர்
அலாவுத்துன்யா வாத் தின் முகம்மது ஷா-உஸ் சுல்தான்
மரபுகில்ஜி வம்சம்
தந்தைசிகாபுதீன் மசூத் (ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜியின் அண்ணன்)
மதம்சன்னி இசுலாம்
கில்சி பேரரசு

அடிமை அரசமரபினரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு ஜலாலுதீன் தில்லி சுல்தானாக மாறிய நேரத்தில், அலாவுதீனுக்கு அமீர்-இ-துசுக் என்ற பதவி கொடுக்கப்பட்டது. இதன் பொருள் நிகழ்ச்சியை மேற்பார்வையிடுபவர் என்பதாகும். ஜலாலுதீனுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை ஒடுக்கியதற்குப் பிறகு 1291ஆம் ஆண்டு காராவின் ஆளுநர் பதவியை அலாவுதீன் பெற்றார். பில்சா மீதான ஒரு வருவாய் ஈட்டிய ஊடுருவலுக்கு பிறகு1296இல் அவத்தின் ஆளுநர் பதவியை பெற்றார். 1296இல் அலாவுதீன் தேவகிரி மீது ஊடுருவல் நடத்தினார். ஜலாலுதீனுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான கிளர்ச்சியை நடத்துவதற்கு தேவையான கொள்ளைப் பொருட்களை பெற்றார். ஜலாலுதீனைக் கொன்றதற்குப் பிறகு, தில்லியில் இவர் தனது ஆட்சியை நிலைப்படுத்தினார். முல்தானிலிருந்த ஜலாலுதீனின் மகன்களை அடிபணிய வைத்தார்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு சகதாயி கானரசில் இருந்து வந்த மங்கோலிய படையெடுப்புகளிலிருந்து அலாவுதீன் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். இதில் ஜரன்-மஞ்சூர் (1297-1298), சிவிஸ்தான் (1298), கிளி (1299), தில்லி (1303), மற்றும் அம்ரோகா (1305) ஆகியவை அடங்கும். 1306இல் இவரது படைகள் மங்கோலியர்களுக்கு எதிராக ரவி ஆற்றங்கரைக்கு அருகில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றன. தற்கால ஆப்கானித்தானில் இருந்த மங்கோலிய நிலப்பரப்புகள் மீது பிறகு சூறையாடல் செய்தன. மங்கோலியர்களுக்கு எதிராக இவரது இராணுவத்திற்கு வெற்றிகரமாக தலைமை தாங்கிய இராணுவ தளபதிகள் சாபர் கான், உலுக் கான் மற்றும் இவரது அடிமை-தளபதி மாலிக் கபூர் ஆகியோர் அடங்குவர்.

அலாவுதீன் குசராத்து (1299இல் ஊடுருவல், 1304இல் இணைத்து கொள்ளப்பட்டது), ஜெய்சால்மர் (1299), இரந்தம்பூர் (1301), சித்தோர் (1303), மல்வா (1305), சிவானா (1308) மற்றும் சலோர் (1311) ஆகிய இராச்சியங்களை வென்றார். இந்த வெற்றிகள் பல்வேறு இராசபுத்திர மற்றும் பிற இந்து அரச மரபுகளை முடிவுக்கு கொண்டு வந்தன. இதில் பரமாரப் பேரரசு, வகேலாக்களின் அரசமரபு, இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள் மற்றும் சலோர், குகிலாக்களின் இராவல் பிரிவினர் மற்றும் அநேகமாக யச்வபாலர்களையும் முடிவுக்கு கொண்டு வந்தன. விந்திய மலைத்தொடருக்கு தெற்கே பல்வேறு படையெடுப்புகளுக்கு இவரது அடிமை-தளபதி மாலிக் கபூர் தலைமை தாங்கினார். தேவகிரி (1308), வாரங்கல் (1310) மற்றும் துவாரசமுத்திரம் (1311) ஆகிய இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான செல்வத்தை பெற்றார். இந்த வெற்றிகள் யாதவ முன்னரான இராமச்சந்திரா, காக்கத்திய மன்னரான பிரதாபருத்ரா மற்றும் போசளப் பேரரசின் மன்னராகிய மூன்றாம் பல்லாலா ஆகியோரை அலாவுதீனுக்கு திறை செலுத்துபவர்களாக ஆக்கின. கபூர் பாண்டிய நாட்டின் மீதும் ஊடுருவல் (1311) நடத்தினார். பெருமளவிலான செல்வம், யானைகள் மற்றும் குதிரைகளை பெற்றார்.

இவரது வாழ்வின் கடைசி ஆண்டுகளின் போது அலாவுதீனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நிர்வாகத்தை கையாள மாலிக் கபூரை இவர் சார்ந்திருந்தார். 1316இல் இவரது இறப்பிற்கு பிறகு அலாவுதீன் மற்றும் அவரது இந்து மனைவி ஜத்யபாலியின் மகனாகிய சிகாபுதீனை ஒரு கைப்பாவை முடியரசராக மாலிக் கபூர் நியமித்தார். அலாவுதீனின் மூத்த மகன் குத்புதீன் முபாரக் ஷா இவரது இறப்பிற்கு சிறிது காலத்திலேயே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.

இராணுவப் படையெடுப்புகள் தொகு

மங்கோலியப் படையெடுப்புகள் மற்றும் வடக்கு வெற்றிகள், 1297–1306 தொகு

1297ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், சகதாயி கானரசின் ஒரு நோயனின் தலைமையிலான மங்கோலியர்கள் பஞ்சாப் மீது தாக்குதல் நடத்தினர். கசூர் வரை முன்னேறினர். 1298ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, உலுக் கானால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களைத் தோற்கடித்தன. அமீர் குஸ்ராவ்வின் கூற்றுப்படி, யுத்தத்தில் 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் தில்லிக்குக் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[2] 1298-99இல் மற்றொரு மங்கோலிய இராணுவமானது சிந்துப் பகுதி மீது படையெடுத்தது. இவர்கள் சகதாயி கானரசிலிருந்து தப்பிய கரவுனாக்கள் எனக் கருதப்படுகிறது. சிவிசுதான் கோட்டையை அவர்கள் ஆக்கிரமித்தனர். இந்த முறை அலாவுதீனின் தளபதி சாபர் கான் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தார். கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.[3][4]

1299ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குசராத்து மீது படையெடுக்க உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கானை அலாவுதீன் அனுப்பினார். அங்கு வகேலா மன்னனான கர்ணன் ஒரு பலவீனமான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அலாவுதீனின் இராணுவம் பல பட்டணங்களைச் சூறையாடியது. தில்லி இராணுவமானது பல மக்களையும் பிடித்தது. இதில் வகேலா இராணியான கமலா தேவியும், அடிமை மாலிக் கபூரும் அடங்குவர். அலாவுதீனின் தெற்குப் படையெடுப்புகளுக்குப் பிற்காலத்தில் மாலிக் கபூர் தலைமை தாங்கினார்.[5][6] தில்லிக்கு இராணுவம் திரும்பிக் கொண்டிருந்த பயணத்தின் போது ஜலோருக்கு அருகில் இந்த இராணுவத்தின் சில மங்கோலியப் போர் வீரர்கள் ஒரு வெற்றியடையாத கிளர்ச்சியை நடத்தினர். இதற்குக் காரணம் சூறையாடப்பட்ட பொருட்களில் ஒரு பங்கை அவர்களிடம் இருந்து கட்டாயப்படுத்திப் பெற தளபதிகள் முயற்சி செய்ததே ஆகும். தில்லியில் இருந்த கிளர்ச்சியாளர்களின் குடும்பங்களுக்கு மிருகத் தனமான தண்டனைகளை அலாவுதீனின் நிர்வாகம் கொடுத்தது. தாய்களின் முன் குழந்தைகள் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும்.[7] ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி போர் வீரர்களின் குற்றங்களுக்காக அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகளைக்குத் தண்டனை கொடுக்கும் பழக்கமானது தில்லியில் நடந்த இந்த நிகழ்வில் இருந்து தொடங்கியது.[8]

1299இல் சகதாயி ஆட்சியாளரான துவா தில்லியை வெல்வதற்காகக் குத்லுக் கவாஜா தலைமையில் ஒரு மங்கோலியப் படையை அனுப்பினார்.[9] இதைத் தொடர்ந்து நடந்த கிளி யுத்தத்தில் அலாவுதீன் தானே தில்லிப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். ஆனால் அலாவுதீனின் ஆணைக்குக் காத்திருக்காமல் அவரது தளபதி சாபர் கான் மங்கோலியர்களைத் தாக்கினார். படையெடுப்பாளர்கள் மீது கடுமையான சேதத்தை சாபர் கான் ஏற்படுத்திய போதும், யுத்தத்தில் சாபர் கானும் அவர் பிரிவில் இருந்த மற்ற போர் வீரர்களும் கொல்லப்பட்டனர்.[10] குத்லுக் கவாஜாவும் கடுமையாகக் காயமடைந்தார். இதனால் மங்கோலியர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[11]

இதே நேரத்தில் அலாவுதீன் தனது கவனத்தைத் தற்போதைய இராசத்தானை நோக்கித் திருப்பினார். குசராத்து, மால்வா மற்றும் மேலும் தெற்கு நோக்கிய படையெடுப்புக்கு ஒரு தளத்தை பாதுகாப்பாக அமைப்பதற்காக இராசபுத்திர இராச்சியங்களை அடிபணிய வைப்பதற்காகத் தனது கவனத்தைத் திருப்பினார். 1299இல் முதலாம் ஜய்ட் சிங் கீழ் அந்நேரத்திலிருந்த பட்டிகளால் ஆளப்பட்ட ஜெய்சால்மர் கோட்டையை அலாவுதீன் முற்றுகையிட்டார். ஒரு நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து உணவு மற்றும் பொருட்கள் குறைந்தது காரணமாக இறுதியாக முற்றுகையிடப்பட்ட இராசபுத்திரர்கள் முலராஜாவின் தலைமையில் சகா என்ற நிகழ்வை நடத்தினர். அதில் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்தனர். ஆண்கள் இறுதிவரை போரிட்டு மரணம் அடைந்தனர். இவ்வாறாக அலாவுதீன் வெற்றிகரமாகப் பட்டிகளின் நிலப்பரப்புக்குள் உட்புகுந்தார். ஜெய்சால்மர் வெற்றிக்குப் பிறகு இது கல்ஜிக்களுக்குக் கீழ் மேலும் சில ஆண்டுகளுக்கு இருந்தது.[12]

 
இரந்தம்பூர் பெண்கள் கூட்டுத் தீக்குளித்தல், 1825ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு இராஜபுதன ஓவியம்

1301இல் இரந்தம்பூர் மீது படையெடுக்க உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கானுக்கு அலாவுதீன் ஆணையிட்டார். இரந்தம்பூரின் மன்னனான ஹம்மிரதேவன் ஜலோருக்கு அருகில் நடந்த கிளர்ச்சியின் தலைவர்களுக்குப் புகலிடம் அளித்திருந்தார். முற்றுகையின் போது நுஸ்ரத் கான் கொல்லப்பட்ட பிறகு முற்றுகை நடவடிக்கைகளுக்கு அலாவுதீன் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். 1301 சூலையில் கோட்டையை வென்றார்.[13] இரந்தம்பூர் படையெடுப்பின் போது அலாவுதீன் மூன்று வெற்றியடையாத கலகங்களை எதிர் கொண்டார்.[14] மேற்கொண்டு எதிர்காலக் கலகங்களை ஒடுக்குவதற்காக ஓர் உளவியல் மற்றும் கண்காணிப்பு அமைப்பை இவர் நிறுவினார். தில்லியில் ஒட்டுமொத்த மதுவிலக்கை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய உயர் குடியினர் ஒருவருக்கொருவர் கூட்டு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காகச் சட்டங்களை இயற்றினார். பொதுமக்களிடம் இருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்.[15]

1302-1303ஆம் ஆண்டு குளிர்காலத்தில் காக்கத்தியரின் தலைநகரான வாரங்கலைச் சூறையாடுவதற்காக ஒரு இராணுவத்தை அலாவுதீன் அனுப்பினார். அதே நேரத்தில் இரத்தினசிம்மனால் ஆளப்பட்ட குகில இராச்சியத்தின் தலைநகரான சித்தோரை வெல்வதற்காக மற்றுமொரு இராணுவத்திற்குத் தானே தலைமை தாங்கினார்.[16] எட்டு மாத கால நீண்ட முற்றுகைக்குப் பிறகு அலாவுதீன் சித்தோரைக் கைப்பற்றினார்.[17] இவரது அவையோர் அமீர் குஸ்ராவ்வின் கூற்றுப்படி இந்த வெற்றிக்குப் பிறகு 30,000 உள்ளூர் மக்களைப் படுகொலை செய்ய இவர் ஆணையிட்டார்[18]. சில பிற்கால மரபுவழிக் கதைகள் இரத்தினசிம்மனின் அழகான இராணியான பத்மினியைப் பிடிப்பதற்காகவே சித்தோர் மீது அலாவுதீன் படையெடுத்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் பெரும்பாலான நவீன வரலாற்றாளர்கள் இத்தகைய மரபு வழிக் கதைகளின் நம்பகத்தன்மையை நிராகரிக்கின்றனர்.[19]

ஏகாதிபத்திய இராணுவங்கள் சித்தோர் மற்றும் வாரங்கல் படையெடுப்புகளில் மூழ்கியிருந்த நேரத்தில் 1303ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வாக்கில் மங்கோலியர்கள் தில்லி மீது மற்றொரு படையெடுப்பைத் தொடங்கினர்.[20] படையெடுப்பாளர்களுக்கு முன்னால் தில்லியை அலாவுதீனால் அடைய முடிந்தது. எனினும் ஒரு வலிமையான தற்காப்புக்குத் தயாராக அவருக்குப் போதிய நேரம் இல்லை.[21][22] அதே நேரத்தில் வாரங்கல் படையெடுப்பும் தோல்வி அடைந்தது. ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி இதற்குக் காரணம் கடுமையான மழையாகும். இராணுவமானது ஏராளமான ஆட்கள் மற்றும் அவர்களது பொருட்களை இதில் இழந்தது. இந்த இராணுவமோ அல்லது அலாவுதீனின் மாகாண ஆளுநர்களால் அனுப்பப்பட்ட வலுவூட்டல்களோ தில்லி நகரத்திற்குள் நுழைய முடியவில்லை. ஏனெனில் மங்கோலியர்கள் ஏற்கனவே சுற்றி வளைத்து விட்டனர்.[23][24] இந்தக் கடினமான சூழ்நிலைகளுக்குக் கீழ் அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையின் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு முகாமில் அலாவுதீன் காப்பிடம் பெற்றார். இவரது படைகளுக்கு எதிராகச் சில சிறு சண்டைகளில் மங்கோலியர்கள் ஈடுபட்டனர். ஆனால் எந்த ஓர் இராணுவமும் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற இயலவில்லை. படையெடுத்து வந்த மங்கோலியர்கள் தில்லியையும் அதன் அண்டைப் பகுதிகளையும் சூறையாடினர். எனினும், சிரி கோட்டைக்குள் நுழைய முடியாததால் இறுதியாகப் பின் வாங்க முடிவெடுத்தனர்.[25] 1303ஆம் ஆண்டின் மங்கோலியப் படையெடுப்பானது இந்தியா மீது நடத்தப்பட்ட மிகக் கடுமையான படையெடுப்புகளில் ஒன்றாகும். இது மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அலாவுதீன் பல நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது தூண்டுகோலாக அமைந்தது. இந்தியாவுக்கான மங்கோலிய வழிகளுக்குப் பக்கவாட்டில் கோட்டைகளையும், இராணுவ இருப்பையும் இவர் வலுப்படுத்தினார்.[26] ஒரு வலிமையான இராணுவத்தைப் பேணுவதற்காகப் போதிய வருவாய் வருவதை உறுதி செய்வதற்காக ஒரு தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் இவர் நடைமுறைப்படுத்தினார்.[27]

1304இல் குசராத்து மீது ஓர் இரண்டாவது படையெடுப்புக்கு அலாவுதீன் ஆணையிட்டதாகத் தோன்றுகிறது. தில்லி சுல்தானாகத்துடன் வகேலா இராச்சியம் இணைக்கப்படுவதில் இது முடிந்தது.[28] 1305இல் நடு இந்தியாவில் மால்வா மீது ஒரு படையெடுப்பை இவர் தொடங்கினார். பரமாரப் பேரரசின் மன்னனான இரண்டாம் மகாலகதேவனின் தோல்வி மற்றும் இறப்பில் இது முடிந்தது.[29][30] யஜ்வபால அரசமரபானது மால்வாவின் வடகிழக்குப் பகுதியை ஆண்டு வந்தது. அதுவும் அலாவுதீனின் படையெடுப்பபில் வீழ்ந்ததாகத் தோன்றுகிறது.[31]

திசம்பர் 1305இல் மங்கோலியர்கள் இந்தியா மீது மீண்டும் படையெடுத்தனர். கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த தில்லி நகரத்தைத் தாக்குவதற்குப் பதிலாக, இமயமலை அடிவாரத்தின் பக்கவாட்டில் தென் கிழக்கே கங்கைச் சமவெளியை நோக்கிப் படையெடுப்பாளர்கள் முன்னேறினர். மாலிக் நாயக்கால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் 30,000 வீரர்களைக் கொண்ட வலிமையான குதிரைப்படையானது அம்ரோகா யுத்தத்தில் மங்கோலியர்களைத் தோற்கடித்தது.[32][33] பல மங்கோலியர்கள் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[34]

1306இல் துவா அனுப்பிய மற்றொரு மங்கோலிய இராணுவமானது இராவி ஆறு வரை முன்னேறியது. வரும் வழியில் நிலப்பரப்புகளைச் சூறையாடியது. மாலிக் கபூரால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களைத் தீர்க்கமாகத் தோற்கடித்தன.[35] அடுத்த ஆண்டு துவா இறந்தார். அதற்குப் பிறகு அலாவுதீனின் ஆட்சியின்போது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகளை மங்கோலியர்கள் தொடங்கவில்லை. மாறாக அலாவுதீனின் தீபல்பூர் ஆளுநரான மாலிக் துக்ளக் தற்போதைய ஆப்கானித்தானில் இருந்த மங்கோலிய நிலப்பரப்புகள் மீது தொடர்ந்து ஊடுருவல்களை நடத்தினார்.[36][37]

வட இந்திய படையெடுப்புகள் தொகு

குசராத்து மீதான படையெடுப்பு தொகு

அலாவுதீன் கில்சி, குசராத்து மீது படையெடுத்து செல்ல தனது இரண்டு படைத்தலைவர்களான, உலுக்கான் மற்றும் நுசுரத் கான் என்பவர்கள் தலைமையில் இரண்டு படையணிகள் இரண்டு பக்கமாக அனுப்பினார். நுசுரத் கான் 24. 02. 1299ல் தனது படைகளை தில்லியிலிருந்து குசராத்திற்கு நேர்வழியில் நடத்திச் சென்றார். உலுக்கான் தனது படைகளை, தில்லியிலிருந்து சிந்து நாட்டின் வழியாக குசராத்து நோக்கிச் சென்றான்.

இறுதியாக இரு படைத்தலைவர்களும் சித்தூர் எனும் இடத்தில் ஒன்று சேர்ந்தனர். இவர்களது படை, ’வனசா’ (Vanasa) ஆற்றைக் கடந்து ‘இராவோசா’ (Ravosa Fort) எனும் கோட்டையை இராசபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றினர். பின்னர் குசராத்து மன்னர் வகேலா குலத்தின் (Vaghela Dynasty) இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன் கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவியை, கில்சியின் படைத்தலைவர்கள் சிறை பிடித்து அலாவுதீன் கில்சியின் முன் நிறுத்தினர். கில்சி, கமலாதேவியின் அழகில் மயங்கி, அவளை இசுலாமிய சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவளது ஒப்புதல் இன்றி கில்சி அவளை திருமணம் செய்துகொண்டு, பட்டத்தரசியாக்கிக் கொண்டார்.

ரந்தம்பூர் கோட்டை, இராஜஸ்தான் தொகு

அலாவுதீன் கில்சியின் பல மனைவிகளில் ஒருத்தியான ’சிம்னா’ என்பவர், முகமது சா என்ற படைத் தலைவருடன் (அலாவுதீன் கில்சியின் அண்ணன் மகனும், தில்லியின் முதல் சுல்தானுமான சலாலுதீன் கில்சி என்பவரை கொன்று, அலாவுதீன் கில்சியை தில்லி சுல்தானாக கொண்டுவருவதற்கு சதி திட்டம் தீட்டியவர்தான் இந்த முகமது சா) கூட்டு சேர்ந்து அலாவுதீன் கில்சியை கொன்று நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர். இந்த சதி திட்டத்தை தனது உளவாளிகள் மூலம் அலாவுதீன் கில்சி அறிந்து கொண்ட செய்தியை அறிந்த முகமது சா உடனடியாக தில்லியை விட்டு தப்பி ஓடி, இராசபுதன அரசர்களில் உறுதியான கோட்டைகள் மற்றும் அதிக படைபலம் மிக்க இராசபுத்திர அரசன், ரந்தம்பூர் கோட்டையின் (பிருதிவிராசு) சௌகான் குல அரசன், அமிர் தேவனிடம் (Hamir Dev) அடைக்கலம் புகுந்தார். (1290ல் தில்லியின் முதல் சுல்தான் என்ற பெயர் படைத்த ’சுல்தான் சலாலுதீன் கில்சி (’Sultan Jalaluddin Khilji) என்பவர், இராசபுதனத்தின் இரந்தம்பூர் கோட்டையை பல ஆண்டுகள் முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியாது தில்லிக்கு திரும்பிச் சென்றவர் என்பது குறிப்பிடதக்கது)

இதனை அறிந்த சுல்தான் அலாவுதீன் கில்சி கடுஞ்சினமடைந்து, ரந்தம்பூர் கோட்டை நோக்கி படையெடுத்தார். பனசு (Banas) எனும் ஆற்றாங்கரையில், இரு நாட்டுப் படைகளுக்கிடையே கடும் போர் நடந்தது. துவக்கத்தில் கில்சியின் படைகள், இராசபுத்திர படைகளிடம் தோல்வி அடைந்தது.

மன்னர் அமிர் தேவனின் முதன்மை அமைச்சருக்கும், தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனி (Gurdan Saini) என்பவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த மனக்கசப்பு இப்போரில் வெளிப்பட்டதால், கில்சிக்கும், அமிர் தேவனுக்கும் இடையே நடந்த போரின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. இராசபுத்திர மன்னர் அமிர் தேவனின் தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனியை, முதல்அமைச்சர் நயவஞ்சமாக கொன்று விட்டார். இதனால் அமிர் தேவ் சௌகானின் படைகள், படைத்தலைவர் இன்றி கட்டுக் குலைந்தன.

இதனிடையில், அமிர் தேவ சௌகானிடம் பணியாற்றும் அதிருப்தி உயர் அதிகாரிகள் பலர், போச தேவன் (Bhoj Dev) என்பவர் தலைமையில், சுல்தான் அலாவுதீன் கில்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, இரந்தம்பூர் கோட்டையின் இரகசியங்களையும், கோட்டைக்குச் செல்லும் இரகசிய வழிகளும், கோட்டையை எவ்வாறு தகர்ப்பது என்றும் கில்சிக்கு ஆலோசனைகள் கூறினர்.

மீண்டும் கில்சிக்கும் அமிர் தேவுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போரில் இருபடைகளிலும் அதிக வீரர்கள் மாண்டனர். கில்சி இரந்தம்பூர் கோட்டையை பிடிக்க முடியாது தினறினார். இதனால் மன உறுதி குலைந்த கில்சி, அமிர்தேவனிடம் அடைக்கலம் அடைந்த முகமது சா வை மட்டும் தன்னிடம் ஒப்படைத்து விட்டால், கோட்டையைத் தாக்காமல், அவனை அழைத்துக் கொண்டு தில்லிக்கு திரும்பி விடுவதாக இராசபுத்திர மன்னர் அமிர்தேவுக்கு தூது அனுப்பினார். தன்னிடம் அடைக்கலம் அடைந்தவர்களை உயிர் கொடுத்தாவது காப்பதே ஒரு இராசபுத்திர குலத்தில் பிறந்தவனுக்கு கடமை என்று கூறி, முகமது சாவை கில்சியிடம் ஒப்படைக்க முடியாது என்று கில்சியின் தூதுவனிடம் கூறி அனுப்பினார். போரின் வெற்றி தோல்வியை கணக்கிட முடியாததை அறிந்து கொண்ட அமிர் தேவனிடம் அடைகலம் அடைந்த முகமது சா, இராசபுதன மன்னரிடம் தன்னை அலாவுதீன் கில்சி கேட்டுக் கொண்டபடி, அவனிடமே ஒப்படைத்து விடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை மறுத்து விட்டார் மன்னர் அமிர் தேவன். கில்சி, உறுதி மிக்க இரந்தம்பூர் கோட்டையை முற்றுகையிட தனது படைத்தலைவர்களைப் பணித்தார்.

மன்னர் அமிர் தேவனின் அரச துரோகிகள் கில்சிக்கு, அமிர்தேவனின் இரந்தம்பூர் கோட்டைக்குள் இருக்கும் உணவு, குடிநீர், படைக்கலன்கள் இருப்பு பற்றிய இரகசியங்களை அவ்வப்போது கில்சிக்கு கூறிக்கொண்டே இருந்தனர். ஒரு கால கட்டத்தில் கோட்டையில் குடிநீர் இருப்பு தீர்ந்து விட்ட நிலையில், அலாவுதீன் கில்சி இரந்தம்பூர் கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் போது, அங்கு இராசபுத்திர குலப்பெண்கள் அனைவரும், சத்திரிய குல மரபுப்படி, தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். அவர்களது சாம்பலையும் எலும்புகளையும் மட்டுமே கில்சியால் பார்க்க முடிந்தது. மற்ற இராசபுத்திர வீரர்கள் சாகும் வரை (Shaka) கில்சியின் படைவீரர்களுடன் போரிட்டனர்.

சொந்த நாட்டை அயலானிடம் காட்டிக் கொடுத்த இராச துரோகிகளான போச தேவன் போன்ற உயர்அலுவலர்கள், தங்களின் சதி ஆலோசனைகளின்படி செயல்பட்டு கில்சி இந்த போரில் வெற்றி பெற்றதால், தங்களுக்கு அளப்பரிய வெகுமதிகள் கில்சி தருவார் என்று காத்திருக்கையில், மன்னர் அமிர்தேவனுக்கு துரோகம் செய்த போச தேவன் போன்ற உயர் அதிகாரிகளின் தலைகளை வெட்ட கட்டளையிட்டார் கில்சி. கில்சி, தனக்கு துரோகம் இழைத்த முகமது சா என்பரை தன் கையாலேயே விசம் குடிக்க வைத்து கொன்றார்.

மேவார் தொகு

வடமேற்கு இந்தியாவில் மேவார் நாடு, மற்ற இராசபுத்திரர்களின் நாடுகளைவிட அதிக வலிமை மிக்கது. மேவார் நாட்டு மன்னர் பெயர் இரத்தன் சிங். அவரது பட்டத்து அரசியின் பெயர் பத்மாவதி என்ற பத்மினி ஆவார். சுல்தான் அலாவுதீன் கில்சி 28. 01. 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். மேவார் கோட்டையை பல மாதங்களாக முற்றுகையிட்டு, வெளியில் இருந்து கோட்டைக்குள் செல்லும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தினார் கில்சி. எனவே வேறு வழியின்றி மேவாரின் படைகள் கோட்டையை திறந்து கொண்டு வெளியே வந்து கில்சி படைகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு போரிட்டனர். மிகக் கடுமையான போரில் மேவார் நாட்டு அரசர் இரத்தன் சிங் மற்றும் தலைமைப் படைத்தலைவர்கள் போரில் மாண்டனர். இதை அறிந்த பட்டத்தரசி பத்மினி உட்பட அனைத்து இராசபுத்திரகுலப் பெண்கள் சத்திரிய குல மரபுப்படி, கூட்டாகத் தீக்குளித்து (Jauhar) மாண்டனர். எஞ்சிய மேவார் நாட்டுப் படைவீரர்கள் இறக்கும் வரை (Shaka) போரிட்டு மாண்டனர். போரில் தோற்ற மேவார் நாட்டை தன் தில்லி சுல்தானகத்துடன் (Delhi Sultanate) இணைத்துக் கொண்டார் கில்சி.

மாளவம் தொகு

சுல்தான் அலாவுதீன் கில்சி, குசராத்து, இரந்தம்பூர், மேவார் நாடுகளைக் கைப்பற்றியதன் மூலம், மீதமுள்ள வட இந்திய மன்னர்களின் மனதில் தில்லி சுல்தானகத்தின் மீது பயத்தை ஏற்படுத்தினார். கில்சிக்கு அடிபணியாத மாளவ நாட்டின் மீது படையெடுக்க அயின்–உல்-முல்க் முல்தானி எனும் படைத்தலைவர் தலைமையில், 1,60,000 படைவீரர்களை அனுப்பினார். மாளவ நாட்டு அரசர் 20,000 குதிரைப்படை வீரர்களும், 90,000 தரைப்படை வீரர்கள் கொண்ட படைகளுக்கு, அரனந்த கோகா (Harnanda Koka) என்பவரை தலைமைப் படைத்தலைவராக நியமித்து, கில்சியின் படைகளை எதிர் கொள்ள காத்திருந்தார். கில்சியின் படைகளுக்கும், மாளவ நாட்டுப் படைகளுக்கும் நடந்த கொடும் போரில், மாளவ படைத்தலைவர் அரனந்த கோகா கொல்லப்பட்டவுடன், அவரது படைவீரர்கள் சிதறி ஓடினார்கள். போரில் தோற்ற மாளவ நாட்டுடன், மந்து (Mandu) , தாரா (Dhara) மற்றும் சந்தோரி (Chanderi) போன்ற நாடுகள் கில்சியின் காலடியில் தானாக வீழ்ந்தது. கில்சியின் படைகள், கைப்பற்றிய நாடுகளின் அரசு கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்களை கைப்பற்றிக்கொண்டார். மாளவ நாட்டு ஆளுனராக அயின் – உல்-முல்க் முல்தானியை, சுல்தான் அலாவுதீன் கில்சி நியமித்தார்.

மார்வார் தொகு

அலாவுதீன் கில்சி 1308ல் இராசபுத்திர நாடுகளில் ஒன்றான மார்வார் நாட்டின் மீது படையெடுத்து வெல்ல, தலைமைப்படைத்தலைவராக மாலிக் கமலுதீன் என்பவரை நியமித்து தனது படைகளை அனுப்பினார். சிவானா கோட்டைக்குள் (Siwana Fort) இருந்த மார்வார் மன்னன் சத்தல் தேவன் (Satal Dev) கில்சியின் படைகளை எதிர்கொண்டு தாக்கினார். இறுதிப்போரில் மார்வார் நாட்டுப்படைகள் தோற்றது. மார்வார் மன்னர் உயிருடன் பிடிக்கப்பட்டார். மார்வார் நாட்டு அரண்மனை கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்கள் கில்சி படைகள் கவர்ந்தனர். மார்வார் நாடு தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.

சலோர் (Jalore) தொகு

இராசபுத்திர நாடுகளில் ஒன்றான சலோர் நாட்டின் மீது அலாவுதீன் கில்சி படையெடுத்தார். சலோர் நாட்டு மன்னர் கன்னாத்து தேவன் சோன்கரன் (Kanhad Dev Songara) என்பவர், கில்சியின் படைகளை தோற்கடித்தார். பின்னர் இரண்டாம் முறையாக மாலிக் கமலுதீன் என்ற படைத்தலைவரின் தலைமையில் மிகப்பெரிய படையை, சலோர் நாட்டை தாக்க அனுப்பி வைத்தார் கில்சி. கில்சியின் பெரும்படைகள் சலோர் நாட்டுப் படைகளுடன் போரிட்டு வென்று சலோர் நாட்டை கைப்பற்றி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.

அலாவுதீன் கில்சியின் தென்னிந்திய படையெடுப்புகள் தொகு

தேவகிரி தொகு

1306 மற்றும் 1307 ஆகிய இரண்டு ஆண்டுகளில், கில்சி தென்னிந்திய படையெடுப்புகள் நடத்தினார். முதல் படையெடுப்பு, குசாராத்து நாட்டை விட்டு வெளியேறி “பாக்லானா’ (Baglana) பகுதியை ஆண்டுவந்த இராய்கரண் எனும் மன்னரை போரில் வென்று, மன்னர் இராய்கரணின் இளையமகள் தேவலா தேவியை தில்லிக்கு கொண்டு சென்று, மதம் மாற்றி தனது மகன் கிசிர் கானுக்கு (Khijir Khan) திருமணம் செய்து வைத்தார்.

இரண்டாவது படையெடுப்பு கில்சியின் பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய அடிமைப் (Slave) படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையில் யாதவர்கள் ஆளும் தேவகிரியை கைப்பற்ற அனுப்பினார்.

யாதவ அரசர் இராமச்சந்திரன், இராய்கரணின் கூட்டாளி ஆவார். தேவகிரி நாட்டுடன் நடந்த போரில் மாலிக் கபூர் வென்றார். ஒப்பந்தப்படி, தேவகிரி அரசின் கருவூலங்கள் மாலிக்கபூருக்கு திறந்து விடப்பட்டது. மேலும் ஆண்டு தோறும் தில்லி சுல்தானகத்திற்கு ஒரு பெருந்தொகை செலுத்த வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது. போரின் இறுதியில் தேவகிரி அரசர் பெயர், இராய் என்று மாற்றப்பட்டு , தில்லி சுல்தானுக்கு அடங்கி நடக்கும் அரசாக (Vassal State) மாறியது. மேலும் தேவகிரியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குசராத்து மீண்டும் தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.. இத்துடன் தேவகிரி அரசரின் மகன்களில் ஒருத்தியான சாட்டியபாலியை (Jatyapali), சுல்தான் அலாவுதீன் கில்சிக்கு மணமுடிக்க தில்லி கொண்டு செல்லப்பட்டார்.

தேவகிரி மன்னர் இராய் இராமச்சந்திரன் 1315ல் இறந்த பின்பு அவரது மகன்கள் தில்லி சுல்தானுக்கு எதிராக கலகங்கள் செய்தனர். மாலிக்கபூர் பெரும்படையுடன் தில்லிருந்து தேவகிரிக்கு வந்து கிளர்ச்சியாளர்களை நசுக்கி தேவகிரியை தில்லி சுல்தானகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

வாரங்கல் தொகு

தேவகிரியை கைப்பற்றிய மாலிக் கபூர், அடுத்து 1309ல் வாரங்கல் நாட்டு “காகாதீய குல” மன்னர் பிரதாப ருத்திர தேவன் மீது படையெடுத்தார். கடுமையான போரில் வாரங்கல் நாடு தோற்றது. போரில் தோற்ற வாரங்கல் நாட்டு மன்னருக்கும் மாலிக்கபூருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி, வாரங்கல் அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்கள் மாலிக்கபூர் கைப்பற்றிக் கொண்டார். வாரங்கல் நாட்டு அரசர் தில்லி சுல்தானுக்கு அடிபணிந்து ஆண்டு தோறும் ஒரு பெரும்தொகை கப்பம் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, வாரங்கல் நாடு, தில்லி சுல்தானகத்திற்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் நாடாக (Vassal State) விளங்கியது.

மேலும் வாரங்கல் நாட்டு மன்னர் பிரதாப ருத்திர தேவனிடமிருந்த விலை மதிக்க முடியாததும், உலகப்புகழ் பெற்றதும், மிகப்பெரியதும் ஆன “ கோஹினூர் வைரத்தை” மாலிக் கபூர் கைப்பற்றி சுல்தான் அலாவுதீன் கில்சியின் காலடியில் காணிக்கையாக சேர்த்தார். ( பின்னர் இந்த பெரும்புகழ் கொண்ட கோஹினூர் வைரத்தை, இந்தியாவை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கும்பினியர்களால் ( East India Company of England) கைப்பற்றப்பட்டு, இங்கிலாந்து நாட்டு விக்டோரியா மகாராணியின் மணிமகுடத்தில் 1877ல் பதிக்கப்பட்டது).

துவார சமுத்திரம் (Halebeedu) மற்றும் மதுரை தொகு

தேவகிரி மற்றும் வாரங்கல் நாடுகளைக் கைப்பற்றிய மாலிக் கபூர், சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி 1311ல் போசள நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் வீர வல்லாளன் மீது படையெடுத்தான். தலைநகரான துவார சமுத்திரத்தை (அலபீடு)முற்றுகையிட்டான்.ஆனால் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களும் மாலிக் கபூர் கைப்பற்றினார். மேலும் போசளநாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டு தோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது. மாலிக் கபூர் அத்துடன் நில்லாது அந்நாட்டில் உள்ள அனைத்து இந்து, சமண மற்றும் பௌத்த கோயில்களை இடித்துத் தள்ள தனது படையினர்களுக்கு கட்டளையிட்டார்.

மதுரை அரசு எவ்வித உடன்படிக்கை இன்றி மாலிக் கபூரின் காலடியில் வீழ்ந்தது. வழக்கம் போல், அந்நாட்டின் அரசு கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களை கவர்ந்து சென்றார்.

பின்னர் தமிழ்நாட்டில் மாலிக்கபூரை எதிர்ப்பார் யாரும் இல்லாதபடியால், தனது பெரும் படைவீரர்களை மட்டும் அனுப்பி, சிதம்பரம் நடராசர் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளை இடித்துத் தள்ளி, கோயில்களின் கருவூலங்களில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், காசுகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம் (அலபீடு), காஞ்சிபுரம், சிதம்பரம், திருவரங்கம் மற்றும் மதுரையில் கொள்ளையடித்த கணக்கில் அடங்காத செல்வங்களை நூற்றுக்கணக்கான யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது ஏற்றி, தான் வென்ற நாடுகளின் குதிரைகள் மற்றும் யானைகளையும் கவர்ந்து, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் காலடியில் சேர்த்தார்.

மாலிக்கபூரின் வெற்றிகளையும், போரில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களையும், கோஹினூர் வைரத்தையும் கண்டு பாராட்டி, சுல்தான் அலாவுதீன் கில்சி மாலிக் கபூரை தில்லி சுல்தானகத்தின் தலைமைப் படைத்தலைவர் (Malik Naib) என்ற பதவி வழங்கி பாராட்டினார்.

அலாவுதீன் கில்சியின் இறப்புக்குப்பின் தொகு

தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி 1316ல் காலமானார். அவரது இறப்புக்குப்பின், தில்லி சுல்தானகத்திற்கு அடங்கியிருந்த நாடுகள், குறிப்பாக தென்னிந்திய நாடுகள், தங்களை தாங்களே விடுதலை அடைந்த நாடுகளாக அறிவித்துக் கொண்டது. இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹரி ஹரரின் விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி சுல்தான்கள் ஆவர்.

பிரபுக்கள் மற்றும் மதகுருமார்கள் மீதான நடவடிக்கைகள் தொகு

தில்லி சுல்தானகத்தின் அரசவை பிரபுக்களும், தனது நெருங்கிய உறவினர்களும், தனக்கும் தனது அரசுக்கு எதிராக செய்த கலகங்களையும், சதித் திட்டங்களையும் முறியடித்தார். இவர்களை தொடந்து கண்காணிக்க கில்சி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்தார். தனக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளையும் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்சிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை. தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுத்து நிறுத்தினார். வேளாண்குடி மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.

பொருளாதார சீர்திருத்தங்களும், விலைக்கட்டுப்பாடும் தொகு

சுல்தான் அலாவுதீன் கில்சி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருள்களுக்குச் சரியாகக் கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனைக் கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருள்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருள்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருள்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சிக் காலத்தில் விளைபொருள்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

சுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு தொகு

 
அலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், தில்லி

அலாவுதீன் கில்சி 1316ல் இறந்தார். கில்சியின் மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்சியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர், தில்லி குதுப் மினார் வாளகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்சி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாலிக் கபூர் ஒரு நினைவு மண்டம் எழப்பினார். மேலும் அவர் நினைவாக ஒரு இசுலாமிய மதக் கல்விக்கல்வி கற்றுத்தரும் கல்வி நிறுவனத்தை (மதராசா) நிறுவினார்.

பிரபல கலாசாரத்தில் தொகு

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

 1. Lafont, Jean-Marie & Rehana (2010). The French & Delhi : Agra, Aligarh, and Sardhana (1st ). New Delhi: India Research Press. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183860918. 
 2. Peter Jackson 2003, ப. 221.
 3. Peter Jackson 2003, ப. 219–220.
 4. Mohammad Habib 1981, ப. 266.
 5. Kishori Saran Lal 1950, ப. 84-86.
 6. Banarsi Prasad Saksena 1992, ப. 334-335.
 7. Kishori Saran Lal 1950, ப. 88.
 8. Banarsi Prasad Saksena 1992, ப. 335.
 9. Banarsi Prasad Saksena 1992, ப. 338.
 10. Kishori Saran Lal 1950, ப. 159–161.
 11. Peter Jackson 2003, ப. 221–222.
 12. Rima Hooja (2006). A HISTORY OF RAJASTHAN (PB). பக். 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-291-1501-0. https://books.google.com/books?id=qqd1RAAACAAJ. "The attack on Jaisalmer during Sultan Alauddin Khilji's reign seems to have begun in AD 1299, when its Bhati king Jait Singh I was ruling. The besieged fort withstood the assault and encirclement until, at long last, scarcity of food and provisions played their inevitable part in deciding the issue. By this time, Jait Singh may have already lost his life, as tradition holds, and the crown taken up by his son, Mularaj. It was at this stage that the women of Jaisalmer fort performed jauhar, while the men, led by Rawal Mularaj, and his younger brother Ratan Singh, flung open the gates of the fort and rushed forth to die fighting to the last. Some sources suggest that Mularaj died in an earlier sortie, and that Ratan Singh (or Ratan-Si), succeeded him as Rawal and carried out the defence of Jaisalmer, until the final shaka. In any event, once Jaisalmer was invested, it is known to have remained in Khilji hands for the next few years" 
 13. Banarsi Prasad Saksena 1992, ப. 342–347.
 14. Banarsi Prasad Saksena 1992, ப. 343–346.
 15. Banarsi Prasad Saksena 1992, ப. 350–352.
 16. Banarsi Prasad Saksena 1992, ப. 366.
 17. Banarsi Prasad Saksena 1992, ப. 367.
 18. Kishori Saran Lal 1950, ப. 119–120.
 19. Satish Chandra 2004, ப. 89.
 20. Banarsi Prasad Saksena 1992, ப. 368.
 21. Banarsi Prasad Saksena 1992, ப. 369.
 22. Mohammad Habib 1981, ப. 267.
 23. Kishori Saran Lal 1950, ப. 164-165.
 24. Banarsi Prasad Saksena 1992, ப. 366-369.
 25. Banarsi Prasad Saksena 1992, ப. 369–370.
 26. Banarsi Prasad Saksena 1992, ப. 372.
 27. Banarsi Prasad Saksena 1992, ப. 373.
 28. Asoke Kumar Majumdar 1956, ப. 191.
 29. Kishori Saran Lal 1950, ப. 133–134.
 30. Peter Jackson 2003, ப. 198.
 31. Peter Jackson 2003, ப. 145.
 32. Banarsi Prasad Saksena 1992, ப. 392–393.
 33. Peter Jackson 2003, ப. 227–228.
 34. Banarsi Prasad Saksena 1992, ப. 393.
 35. Kishori Saran Lal 1950, ப. 171–172.
 36. Kishori Saran Lal 1950, ப. 175.
 37. Peter Jackson 2003, ப. 229.
 38. Who exactly was Rani Padmavati, warrior queen or fictional beauty?
 39. Padmavati, the real story that Malik Muhammad Jayasi told 224 years after Alauddin Khilji's death
 40. The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாவுதீன்_கில்சி&oldid=3776247" இருந்து மீள்விக்கப்பட்டது