சம்சுத்தீன் இல்த்துத்மிசு

சம்சுத்தீன் இல்த்துத்மிசு, அல்லது அல்தமாசு, தில்லி சுல்தானகத்தின் மூன்றாவது முசுலிம் துருக்க சுல்தானும், மம்லுக் வம்சம் அல்லது தில்லி அடிமை வம்சம் எனப்படும் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரும் ஆவார். இவர் முதலில் குதுப்புத்தீன் ஐபாக்கின் அடிமையாக இருந்தார். பின்னர் ஐபாக்கின் மகளை மணந்து அவரது மருமகனும் நெருக்கமான தளபதியும் ஆனார். ஐபாக் இறந்த பின்னர் அவரது மகன் அராம் சா சுல்தானானார். அப்போது பதாவுனின் ஆளுனராக இருந்த இல்த்துத்மிசு அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுத் தானே 1211 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் 1236 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி இறக்கும் வரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளனாக இருந்தார்.

இல்த்துத்மிசு
தில்லி சுல்தான்
Tomb of Iltutmish, Qutb Minar complex, Mehrauli.jpg
இல்த்துத்மிசின் சமாதி
ஆட்சி1211 - 1236
முன்னிருந்தவர்அராம் சா
பின்வந்தவர்ருக்கினுத்தீன் ஃபைரூசு
துணைவர்சா துர்க்கான், பிறர்
வாரிசு(கள்)நசிருத்தீன் மகுமூத், ருக்கினுத்தீன் ஃபைரூசு, ராசியா சுல்தானா, முயிசுத்தீன் பகுராம்
முழுப்பெயர்
சம்சுத்தீன் இல்த்துத்மிசு
அரச குலம்மம்லுக் வம்சம்
அடக்கம்குதுப் தொகுதி, மெகரௌலி, தில்லி
சமயம்இசுலாம்

மெகரௌலியில் உள்ள அவுசு-இஸாம்சி எனப்படும் நீர்த்தேக்கத்தை 1230 ஆம் ஆண்டு இவர் கட்டினார். பிற்காலத்தில் முகலாய மன்னர்கள் பயன்படுத்திய சான்சு மகால் இந்த நீர்த்தேக்கத்தின் கரையிலேயே உள்ளது.

இளமைக் காலம்தொகு

சம்சுத்தீன் துருக்கிசுத்தானில் உள்ள இல்பாரி என்னும் பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதில் மிகவும் அழகானவராகவும், மிகுந்த அறிவுத்திறன் கொண்டவராகவும் இருந்தார். இதனால் இவர்பால் பொறாமை கொண்ட இவரது உடன்பிறந்தோர் இவரை அடிமையாக விற்றுவிட்டனர். இவரது இயல்புகளின்பால் கவரப்பட்ட தில்லியின் சுல்தான் குதுப்புத்தீன் ஐபாக் இவரைக் கூடிய விலை கொடுத்து வாங்கினார். அரச சேவையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற சம்சுத்தீன், குதுப்புத்தீனின் மகளையும் மணம் செய்துகொண்டார். இவர் குவாலியரிலும், பாரானிலும் ஆளுனராக இருந்தார்[1] பின்னர் தில்லி சுல்தானகத்தின் ஆட்சிப்பொறுப்பு ஏற்கும்வரை, 1206 முதல் 1211 ஆம் ஆண்டுவரை பாதுவானின் ஆளுனராக இருந்தார்.

தில்லியின் சுல்தான்தொகு

 
இல்த்துத்மிசின் கீழ் தில்லி சுல்தானகம்
 
இல்த்துத்மிசு காலத்து நாணயம், கிபி 1210 - 1235.
 
இல்த்துத்மிசு காலத்து நாணயம், கிபி 1210 - 1235.

அதிகாரத்துக்கு வருதல்தொகு

கிபி 1210 ஆம் ஆண்டில் குதுப்புத்தீன் ஐபாக் இறந்தார். அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன் அராம் சாவின் திறமையின்மையால் துருக்கப் பிரபுக்களின் வெறுப்புக்கு ஆளானார். இப் பிரபுக்கள் அராம் சாவைப் பதவியிலிருந்து அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு சம்சுத்தீனைக் கேட்டுக்கொண்டனர். பதவியேற்றபோது இவருக்கு "அல்த்முசு" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இப்பெயர் இல்த்மாசு அல்லது இல்த்துத்மிசு எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. துருக்க மொழியில் இது "அறுபது"எனப் பொருள்படும். பதவியேற்கும்போது அவருக்கு 60 வயது ஆனபடியால் இப்பெயர் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தொடக்ககாலச் சவால்கள்தொகு

இல்த்துத்மிசு பதவியேற்ற பின்னர், அவர் பல சவால்களை எதிர்நோக வேண்டி இருந்தது. உச், முல்த்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த நசிருத்தீன் கபாச்சா, லாகூரைப் பிடித்து வைத்துக்கொண்டு தனியரசு நடத்த முயன்றார்[2]. காசுனியின் சுல்தான், தாசுத்தீன் யல்டோசு தில்லியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தார். குதுப்புத்தீனால் வங்காளத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட கால்சிப் பிரபுவான அலி மர்தான், தன்னைச் சுல்தான் அலாவுத்தீன் என அறிவித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்த கியாசுத்தீன், பீகாரைக் கைப்பற்றிக் கொண்டான். இந்து இளவரசர்களும், தலைவர்களும் தமது சுதந்திரம் பறிபோனதையிட்டுக் குமுறிக்கொண்டிருந்தனர். கானாவூச், பெனாரசு, குவாலியர், காலிஞ்சர் போன்ற அவர்களது பகுதிகள் குதுப்புத்தீனால் கைப்பற்றப்பட்டு இருந்தன. சௌகான்கள், அராம் சாவின் காலத்தில் ரந்தாம்பூரை மீளக் கைப்பற்றிக் கொண்டனர். இல்த்துத்மிசின் பிரச்சினைகளை மேலும் கூட்டும் வகையில், தில்லியின் அமீர்களில் சிலரும் அவரது ஆட்சிக்கு எதிராக இருந்தனர்.

மங்கோலியரின் பயமுறுத்தல்தொகு

இல்த்துத்மிசின் ஆட்சிக்காலத்தில், வரலாற்றில் முதல் முறையாக செங்கிசுக் கானின் தலைமையிலான மங்கோலியப் படைகள், சிந்து நதிக் கரைக்கு வந்தன. இவர்கள் நடு ஆசியா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளை மிக விரைவாகக் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் பின்னர், குவாசராசம் அல்லது கீவா எனப்பட்ட நாட்டைத் தாக்கியபோது அதன் கடைசி அரசனான சலாலுத்தீன் மங்கபர்னி, பஞ்சாபுக்கு வந்து, தில்லி சுல்தானகத்தில் தஞ்சம் கோரினார். ஆனால் இல்த்துத்மிசு அதற்கு இணங்கவில்லை. பின்னர் மங்கபர்னி கோக்கர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு முல்த்தானின் கபாச்சாவைத் தோற்கடித்தபின்னர், சிந்துப் பகுதியையும், வடக்குக் குசராத்தையும் சூறையாடிக்கொண்டு பாரசீகம் நோக்கிச் சென்றனர். மங்கோலியர்களும் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது இந்தியா பெரிய இடரில் இருந்து தப்பித்துக் கொண்டது.

மேற்கோள்கள்தொகு

  1. Mehta 1986, ப. 90-91
  2. Mehta 1986, ப. 91–92