ஆராம் ஷா

இந்தியாவின் இரண்டாம் மம்லூக் சுல்தான்

ஆராம் ஷா (ஆங்கிலம்: Aram Shah, பாரசீக மொழி: آرام شاه‎; 1176 – சூன் 1211) மம்லூக் சுல்தானகத்தின் இரண்டாவது சுல்தான் ஆவார். குத்புத்தீன் ஐபக்கின் எதிர்பாராத இறப்பிற்குப் பிறகு இவர் இலாகூரில் இருந்து அரியணையை குறுகிய காலத்திற்குக் கொண்டிருந்தார். பிறகு சம்சுத்தீன் இல்த்துத்மிசால் தோற்கடிக்கப்பட்டு அரியணையில் இருந்து இறக்கப்பட்டார். இல்த்துத்மிசு தில்லியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்.

ஆராம் ஷா
தில்லி மற்றும் இலாகூரின் 2ஆம் சுல்தான்
ஆட்சிதிசம்பர் 1210 – சூன் 1211
முன்னிருந்தவர்குத்புத்தீன் ஐபக்
பின்வந்தவர்சம்சுத்தீன் இல்த்துத்மிசு
பிறப்பு1176
இறப்புசூன் 1211 (வயது 35-34)
தில்லி
சமயம்இசுலாம்

பூர்வீகம்

தொகு

ஆராம் ஷா அறியப்பட்டிராத நபர் ஆவார். சுல்தானாக இருந்த குத்புத்தீன் ஐபக்குடன் இவருக்கு என்ன உறவு முறை என்பது தெளிவாகத் தெரியவில்லை. மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனியின் தபாகத்-இ நசீரி போன்ற நூலின் சில கையெழுத்துப் பிரதிகளில் ஒரு பிரிவின் தலைப்பில் இவரது பெயருக்குப் பிறகு "பின் ஐபக்" (பொருள்: குதுபிதீன் ஐபக்கின் மகன்) என்ற சொற்கள் காணப்படுகின்றன. பிந்தைய எழுத்தாளர்கள் இவரை ஐபக்கின் ஒரு மகன் என்று நம்பினர். எனினும், தலைப்பில் "பின் ஐபக்" என்று உள்ள சொற்கள் ஓர் எழுத்தரால் தவறாகச் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம்.[1] மின்ஹஜ்-இ சிராஜ் நூல் முழுவதும் ஐபக்கின் வெறும் மூன்று மகள்களை மட்டுமே குறிப்பிடுகிறார். அடா-மாலிக் ஜுவய்னியின் தரிக்-இ ஜகான்குசாய் நூலானது வெளிப்படையாக ஐபக்குக்கு எந்த ஒரு மகனும் இல்லை என்று குறிப்பிடுகிறது. இவரைப் பற்றி தெரிந்த ஒரே தகவல் ஐபக்குக்குப் பிறகு இவர் இலாகூரில் இருந்து அவருக்குப் பதிலாக ஆட்சி செய்தார் என்பதாகும்.[2]

ஆட்சி

தொகு

1210இல் இலாகூரில் ஒரு விளையாட்டுப் போட்டியின் போது எதிர்பாராதவிதமாக குத்பல்தீன் ஐபக் இறந்தார். அவர் அவருக்கு அடுத்த சுல்தானைப் பெயரிடவில்லை. இராச்சியத்தில் குழப்பத்தைத் தடுப்பதற்காக இலாகூரில் இருந்த துருக்கிய உயர்குடியினர் (மாலிக்குகள் மற்றும் அமீர்கள்) ஆராம் ஷாவை ஐபக்குக்குப் பிந்தைய சுல்தானாக இலாகூரில் நியமித்தனர்.[2][3] எனினும், சுல்தானகத்தின் வேறுபட்ட பகுதிகளில் இருந்த துருக்கிய உயர்குடியினர் இவர் அரியணைக்கு வந்ததை எதிர்த்தனர். வங்காளத்தின் கல்சி உயர்குடியினர் போன்ற அதில் சிலர் இவருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 16 ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் பெரிஷ்தாவின் கூற்றுப்படி, இராச்சியமானது அண்டை ஆட்சியாளரான முல்தானின் நசிரதீன் கபாச்சாவிடம் இருந்து ஒரு படையெடுப்பாளும் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.[1]

இராணுவ நீதி நிர்வாகி (அமீர்-இ-தத்) அலி-யி இசுமாயிலால் தலைமை தாங்கப்பட்ட ஒரு குழுவானது அரியணையை ஆக்கிரமிக்க சம்சுத்தீன் இல்த்துத்மிசுக்கு அழைப்பு விடுத்தது.[4] இல்த்துத்மிசு ஐபக்கின் இன்னொரு முன்னாள் அடிமையும், பதாவுனின் ஆளுநரும் ஆவார். தனது பணியில் தனிச்சிறப்பு மிக்க பெயரைப் பெற்றிருந்தார். ஐபக்கால் இவர் மகன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக உயர் குடியினர் அரியணைக்கு ஒரு சிறந்த தேர்வு இவர் எனக் கருதினர்.[5] இல்த்துத்மிசு தில்லியை நோக்கி அணி வகுத்தார். அங்கு ஆட்சியைக் கைப்பற்றினார். ஆராம் ஷாவின் படைகளை பக்-இ சுட் என்ற இடத்தில் பின்னர் தோற்கடித்தார். தபாகத்-இ நசீரி நூலின்படி ஆராம் ஷா "உயிர்த் தியாகம்" செய்தார். இவர் யுத்த களத்தில் இறந்தாரா அல்லது ஒரு போர்க் கைதியாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.[4] இவரது முக்கியமான அதிகாரிகளில் இருவர் ஆக்சன்கர் மற்றும் பரூக் ஷா ஆகியோர் ஆவர். அவர்கள் யுத்த களத்தில் கொல்லப்பட்டனர். இல்த்துத்மிசு இறுதியாகத் தன்னுடைய ஆட்சியை நிலைப்படுத்தினார். தில்லியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 K. A. Nizami 1992, ப. 207.
  2. 2.0 2.1 Satish Chandra 2004, ப. 39.
  3. K. A. Nizami 1992, ப. 206.
  4. 4.0 4.1 Peter Jackson 2003, ப. 29.
  5. K. A. Nizami 1992, ப. 207-208.
  6. K. A. Nizami 1992, ப. 208.

நூற்பட்டியல்

தொகு
  • K. A. Nizami (1992). "The Early Turkish Sultans of Delhi". In Mohammad Habib; Khaliq Ahmad Nizami (eds.). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206–1526). Vol. 5 (Second ed.). The Indian History Congress / People's Publishing House. இணையக் கணினி நூலக மைய எண் 31870180.
  • Peter Jackson (2003). The Delhi Sultanate: A Political and Military History. Cambridge University Press. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-54329-3.
  • Satish Chandra (2004). Medieval India: From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206–1526). Vol. 1. Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1064-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராம்_ஷா&oldid=4123674" இலிருந்து மீள்விக்கப்பட்டது