சகதாயி கானரசு

நடு ஆசியாவில் 1226–1347இல் இருந்த துருக்கிய மயமாக்கப்பட்ட ஒரு மங்கோலியக் கானரசு

சகதாயி கானரசு அல்லது சகதாயி உளூஸ் (மொங்கோலியம்: Цагаадайн улс; உசுபேகியம்: Chigʻatoy ulusi; மரபுவழிச் சீனம்: 察合台汗國) என்பது ஒரு மங்கோலியக் கானரசாகும். இது பிற்காலத்தில் துருக்கியமயமாக்கப்பட்டது.[1][2][3] இது செங்கிஸ் கானின் இரண்டாவது மகனான சகதை கான், அவரது வழித்தோன்றல்கள் மற்றும் பின் வந்தவர்கள் ஆகியோரால் ஆளப்பட்ட நிலப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஆரம்பத்தில் சகதாயி கானரசு யுவான் அரசமரபின் பெயரளவிலேயே இருந்த தலைமை நிலையை ஏற்றுக் கொண்டது.[4] எனினும் குப்லாய் கானின் ஆட்சியின் போது சகதை கானான கியாஸ்-உத்-தின் பரக் பேரரசரின் ஆணைகளை ஏற்பதை நிறுத்திவிட்டார். 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் அதிகபட்ச பரப்பளவின்போது இந்தக் கானரசானது ஏரல் கடலின் தெற்குப் பகுதியில் ஆமூ தாரியா முதல் நவீன கால மங்கோலிய-சீன எல்லையில் உள்ள அல்தாயி மலைகள் வரை பரவியிருந்தது.[5]

சகதாயி கானரசு
Цагаадайн Хаант Улс
நிலை பேரரசு
தலைநகரம்அல்மலிக், கர்ஷி
சமயம்
அரசாங்கம் பகுதியளவு தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசு, பின்னர் வாரிசு வழிக் குடியரசு
சட்டமன்றம் குறுல்த்தாய்
நாணயம் நாணயங்கள் (திர்காம்கள், கெபெக் மற்றும் புல்)

14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சகதை கான்கள் திரான்சாக்சியானாவின் கட்டுப்பாட்டைத் தைமூரியப் பேரரசிடம் இழந்தனர். எஞ்சிய பகுதியானது மொகுலிசுதான் என்று அழைக்கப்பட்டது. இது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. பிறகு யர்கந்து மற்றும் துர்பன் கானரசுகளாகப் பிரிந்தது. 1680ஆம் ஆண்டு எஞ்சிய சகதை கானரசின் பகுதிகள் தங்களது சுதந்திரத்தைச் சுங்கர் கானரசிடம் இழந்தன. 1705 ஆம் ஆண்டு கடைசி சகதை கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வாறாக சகதை அரசமரபானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

வரலாறுதொகு

பெரிய கானின் கீழ் (1226–1266)தொகு

செங்கிஸ் கான் 1227ஆம் ஆண்டு இறந்தபோது அவரது மகன் சகதை முந்தைய கருப்பு சீனா பேரரசின் பகுதிகளை தோராயமாகப் பெற்றார். அப்பகுதிகள் இசிக்-குல் ஏரி, இலி ஆறு, சூ ஆறு, தலாசு ஆறு, திரான்சாக்சியானா, மற்றும் தாரிம் வடிநிலம் ஆகியவை ஆகும். எனினும் சகதை தன்னுடைய கானரசைச் சுதந்திரமாக நடத்தவில்லை. அவர் அன்றும் கரகோரத்தில் இருந்து ஆணைகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். திரான்சாக்சியானாவின் ஆளுநரான மகமுத் யலாவச்சை சகதை நீக்கிய போது பெரிய கானான ஒகோடி யலாவச்சை மீண்டும் பதவியில் அமர்த்தினார். யலாவச்சின் அரசமரபானது திரான்சாக்சியானாவைச் சகதையின் இறப்பிற்குப் பிறகும் தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தது. 1238 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் புகாரா நகரத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அங்கு மங்கோலியத் துருப்புக்கள் வருவதற்கு முன்னரே மகமுத்தின் மகனான மசூத் அந்தக் கிளர்ச்சியை அடுத்த ஆண்டு ஒடுக்கினார். இதன்மூலம் மங்கோலிய பழிவாங்கலில் இருந்து மக்களைக் காப்பாற்றினார்.[6]

சகதை கான் 1242ஆம் ஆண்டு இறந்தார். சகதைக்குப் பிறகு அவரது பேரனான காரா ஹுலாகு ஆட்சிக்கு வந்தார். காரா ஹுலாகு 1221ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின் போது இறந்த முத்துகனின் மகனாவார். சுதந்திரமாக ஆட்சி செய்வதற்கு காரா ஹுலாகு மிகவும் இளையவராக இருந்ததால் விதவையான எபுசுகுன் கதுன் அவரது பெயரில் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1246ஆம் ஆண்டு குயுக் கான் காரா ஹுலாகுவிற்குப் பதிலாக அவரது சித்தப்பா எசு மோங்கேயைப் பதவியில் அமர்த்தினார்.[7]

குயுக் கானிற்குச் சொந்த நண்பனாக இருந்த காரணத்தினாலேயே எசு மோங்கே பதவிக்கு வந்தார். எசு மோங்கே குடிகாரனாக இருந்தார். அரசு விவகாரங்களைத் தனது மனைவி மற்றும் மந்திரி பெகா அத்-தின் மர்கினானி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். 1252 ஆம் ஆண்டு மோங்கே கான் எசு மோங்கேயைப் பதவியிலிருந்து நீக்கினார். காரா ஹுலாகுவை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.[7]

தன் நாட்டிற்குத் திரும்பும் வழியில் கார ஹுலாகு இறந்தார். கார ஹுலாகுவிற்குப் பிறகு அவரது மகன் முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார்.[7]

ஆட்சி செய்ய முபாரக் ஷா மிகவும் இளையவராக இருந்தார். இதன் காரணமாக அரசு விவகாரங்களை அவரது தாய் ஒர்கானா கவனித்துக் கொண்டார்.[7] 1260ஆம் ஆண்டு அரிக் போகே முபாரக் ஷாவைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சகதை கானின் பேரனாகிய அல்குவைப் பதவியில் அமர்த்தினார்.[8] ஆட்சிக்கு வந்த பிறகு அல்கு அரிக் போகேவிற்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார். டொலுய் உள்நாட்டுப் போரில் குப்லாய் கான் பக்கம் சேர்ந்து கொண்டார். அரிக் போகே அல்குவைத் தாக்கினார். அரிக் போகேயின் ராணுவத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதில் அல்கு ஆரம்பத்தில் வெற்றிகண்டார். எனினும் 1263ஆம் ஆண்டு சமர்கந்துக்குத் தப்பிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார். அல்கு இல்லாத நிலையில் இலி பகுதியை அரிக் போகே மோசமாகச் சேதப்படுத்தினர். ஒர்கானா மற்றும் மசூத் யலாவச் ஆகியோரின் உதவியுடன் ஒரு புதிய ராணுவத்திற்கு ஆட்களை அல்கு சேர்த்தார். பிறகு கய்டுவின் படையெடுப்பை அல்கு முறியடித்தார். அரிக் போகேவை தனது பகுதிகளிலிருந்து துரத்தினார். அரிக் போகே 1264ஆம் ஆண்டு குப்லாய் கானிடம் சரணடைந்தார். 1265ஆம் ஆண்டு அல்கு இறந்தார். ஒர்கானா தனது மகன் முபாரக ஷாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.[9]

இஸ்லாமுக்கு மதம் மாறிய முதல் சகதை கான் முபாரக் ஷா தான். இவரது ஆட்சி இவரது உறவினரான கியாஸ்-உத்-தின் பரக்கால் இடையூறு செய்யப்பட்டது. குப்லாய் கான் உதவியுடன் கியாஸ்-உத்-தின் பரக், முபாரக் ஷாவைப் பதவியிலிருந்து நீக்கினார்.[9]

கய்டுவின் ஆட்சி (1266–1301)தொகு

 
13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சகதை கானரசு மற்றும் அதன் அண்டை நாடுகள்.

தாரிம் வடிநில பகுதியை ஆட்சி செய்வதில் கியாஸ்-உத்-தின் பரக் மற்றும் குப்லாய் கான் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பகுதியை ஆட்சி செய்ய குப்லாய் கான் அனுப்பிய நபரைப் பரக் துரத்தி அடித்தார். குப்லாய் கான் 6,000 குதிரைப்படை வீரர்களை அனுப்பியபோது பரக் 30,000 குதிரைப்படை வீரர்களைக் கொண்டு அவர்களை சந்தித்தார். அவர்களை பின்வாங்க கட்டாயப்படுத்தினார். பரக் கய்டுவுடனும் பிரச்சனையில் இருந்தார். கய்டு தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய மெங்கு-தைமூரின் உதவியுடன் பரக்கைத் தாக்க முயற்சித்தார். 50,000 வீரர்களைக் கொண்ட தங்க நாடோடிக் கூட்டத்தின் இராணுவமானது தன் பக்கம் இருப்பதை கொண்டு கய்டு திரான்சாக்சியானா பகுதியில் இருந்து தப்பிச் செல்லும் நிலைக்கு பரக்கைக் கட்டாயப்படுத்தினார். 1267ஆம் ஆண்டு கய்டுவுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ள பரக் ஒப்புக்கொண்டார். திரான்சாக்சியானாவுக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைப் பரக் துறந்தார். ஈல்கானரசின் மீது படையெடுக்குமாறு பரக்கைக் கய்டு மிரட்டினார்.[10] பரக் முதலில் தாக்கினார். இளவரசன் புச்சினைத் தோற்கடித்தார். புச்சின் அபகா கானின் சகோதரரும் குராசான் பகுதியின் ஆளுநரும் ஆவார். அபகா அவசர அவசரமாக அசர்பைஜானில் இருந்து திரும்பினார். 22 சூலை 1270ஆம் ஆண்டு ஹெறாத் நகரத்திற்கு அருகில் பரக்கைத் தோற்கடித்தார். பரக்கைப் பின் வாங்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினார். திரும்பும் வழியில் பரக் தன்னுடைய குதிரையிலிருந்து விழுந்தார். நடக்க இயலாத நிலைக்கு ஆளானார். எனவே குளிர்காலத்தை புகாரா நகரத்தில் கழித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு இறந்தார். தனது இறப்பிற்கு முன்னர் பரக் இஸ்லாமுக்கு மதம் மாறினார்.[11]

பரக்கின் நான்கு மகன்கள் மற்றும் அல்குவின் இரண்டு மகன்கள் ஆகியோர் பரக்கின் இறப்பிற்குப் பிறகு கய்டுவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டனர். திரான்சாக்சியானாவின் கானாக நெகுபெய்யைக் கய்டு பதவியில் அமர்த்தினார். நெகுபெய் கிளர்ச்சி செய்தபோது அவரும் கொல்லப்பட்டார். 1274இல் புதிய கானாகப் புகா தெமூர் பதவியில் அமர்த்தப்பட்டார். புகா தெமூர் எப்போது இறந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு பரக்கின் மகனான துவா அடுத்த கானாக நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் 1272ஆம் ஆண்டு அபகா திரான்சாக்சியானாவைத் தாக்கினார். புகாராவைச் சூறையாடினர். 50,000 பேரைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றார்.[12]

1275ஆம் ஆண்டு யுவான் அரசமரபுக்கு எதிரான போரில் கய்டுவுடன் துவா இணைந்தார். ஆனால் அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. 1295ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியைத் துவா தாக்கினார். சேதம் விளைவித்தார். தில்லி சுல்தானகத்தின் மீதும் பல்வேறு படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.[13] செப்டம்பர் 1298ஆம் ஆண்டு தெமுர் கானின் மைத்துனரான கோர்குசைத் துவா பிடித்தார். அவரைக் கொன்றார். ஆனால் இந்நிகழ்வுக்குச் சிறிது காலத்திலேயே யுவான் படைகள் துவாவுக்கு மோசமான தோல்வியைக் கொடுத்தன. 1301ஆம் ஆண்டு கரகோரத்தின் மீது தாக்குதல் நடத்திய போது அவர்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர். பின்வாங்கும் வழியில் கய்டு இறந்தார்.[14]

உசாத்துணைதொகு

 1. Black, Cyril E.; Louis Dupree (professor); Endicott-West, Elizabeth; Matuszewski, Daniel C.; Eden Naby; Arthur Waldron (1991). The Modernization of Inner Asia. Armonk, N.Y.: M.E. Sharpe. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-315-48899-8. https://books.google.com/books?id=TMoYDQAAQBAJ&pg=PT57. பார்த்த நாள்: 20 November 2016. 
 2. Upshur, Jiu-Hwa L.; Terry, Janice J.; Holoka, Jim; Cassar, George H.; Goff, Richard D. (2011). Cengage Advantage Books: World History (5th ). Cengage Learning. பக். 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-133-38707-7. https://books.google.com/books?id=6RgJAAAAQBAJ&pg=PA433. பார்த்த நாள்: 20 November 2016. 
 3. Alternative spellings of Chagatai include Chagata, Chugta, Chagta, Djagatai, Jagatai, Chaghtai etc.
 4. Dai Matsui – A Mongolian Decree from the Chaghataid Khanate Discovered at Dunhuang. Aspects of Research into Central Asian Buddhism, 2008, pp. 159–178
 5. See Barnes, Parekh and Hudson, p. 87; Barraclough, p. 127; Historical Maps on File, p. 2.27; and LACMA for differing versions of the boundaries of the khanate.
 6. Grousset 1970, பக். 328.
 7. 7.0 7.1 7.2 7.3 Grousset 1970, பக். 329.
 8. Grousset 1970, பக். 331.
 9. 9.0 9.1 Grousset 1970, பக். 332.
 10. Grousset 1970, பக். 334.
 11. Biran 1997, பக். 30–2.
 12. Grousset 1970, பக். 335.
 13. Grousset 1970, பக். 339.
 14. Grousset 1970, பக். 336.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதாயி_கானரசு&oldid=3429824" இருந்து மீள்விக்கப்பட்டது